10 Jun 2022

கிட்ஸ் மொபைல் பார்க்கலாமா?

கிட்ஸ் மொபைல் பார்க்கலாமா?

            குழந்தைகள் டிவி பார்க்கலாமா என்றார் என் ஆஸ்தான நண்பர். ஆஸ்தான நண்பர் என்றால் ஆஸ்தானம்தான். மற்றவர்கள் சாதாரண நண்பர்கள் என்பது குறிப்பு.

            நாம் பார்க்காதே என்று சொன்னால் கேட்டு விடப் போகிறார்களா? அது சரி இப்போது எந்தக் குழந்தைகள் டிவி பார்க்கிறார்கள்? எல்லாம் மொபைலுக்கு மாறி விட்டார்கள். டிவி பார்க்கும் குழந்தைகள் அபூர்வம்தான். இவர்களை நம்பி சுட்டி டிவி, போகோ டிவி, கார்டூன் டிவி, டிஸ்னி டிவி தொடங்கியவர்களின் தலையில் மண்ணள்ளிப் போட்டு விட்டார்கள்.

            டிவி பெரிய திரை குழந்தைகளுக்கு. மொபைல் சின்ன திரை அவர்களைப் பொருத்த வரையில். குழந்தைகள் நினைக்கும் வேகத்துக்கு ரிமோட்டை விட மொபைல் ஈடு கொடுக்கும். ஒரு விரல் இழுப்புதான். குழந்தைகள் அநாயசமாக விளையாட வித்தை காட்ட மொபைல்கள் நல்ல வசதி.

            ஒரு டிவியை இருபது முப்பது பேர் பார்ப்பது போலில்லாமல் ஒரு மொபைல் ஒருவருக்கு என்பது குழந்தைகளுக்குப் பிடித்தமான அம்சம். மொபைலைப் பெரியவர்களுக்குக் கையாளவும் தெரிய மாட்டேன்கிறது. இத்தனை காலம் பூமியில் பிறந்தென்ன? இருந்தென்ன? வளர்ந்தென்ன? கற்றென்ன? பிறந்த குழந்தைகள் எப்படியோ பிறந்த அடுத்த நொடியே மொபைலைப் பயன்படுத்த அறிந்து விடுகின்றன. அப்படி ஒரு மரபு இப்போதுள்ள குழந்தைகளுக்கு.

            டிவியில் ஆரம்பித்து நாம் எங்கு வந்து விட்டோம் பாருங்கள். மொபைல் பரவலாகிக் கொண்டிருந்த காலங்களில் டிவிதான் குழந்தைகளின் புகலிடமாக இருந்தது. தாய் இல்லையென்றாலும் டிவி இருந்தால் போதும். அதுவே தாய் இருந்து டிவி இல்லையென்றால் போச்சுடா உசுருங்ற கதைதான்.

தாலாட்டு பாடி களிப்பூட்டி விளையாட்டுக் காண்பித்து அத்தனையையும் பார்த்துக் கொண்டது டிவி. சுருக்கமாகச் சொன்னால் இயந்திர வடிவிலான ஆயாவாகவும், சைல்ட் ஹோம் ஆகவும் இருந்தவை டிவிக்களே.

            இப்போது மொபைல் அதிகம் புழங்காத ஒரு சில கிராமங்களில் டிவிக்களே குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் ஆபத்பாந்தவனாகப் பெற்றோர்களுக்கு இருக்கின்றன. அந்தக் கிராமத்துக் குழந்தைகளும் சீக்கிரம் மொபைலுக்கு மாறி விடும்.

            இனி மொபைல்தான். டிவி போல் போகும் இடம் எங்கும் தூக்குவதற்குச் சிரமம் இல்லாமல் குழந்தைகளைப் போல் குழந்தைகளோடு குழந்தையாகத் தூக்கிச் செல்ல வசதியாக இருப்பதுதான் மொபைல் போனில் குழந்தைகள் மூழ்கி இருப்பதற்கும் குழந்தைகளை நாம் மொபைல் போனில் மூழ்க அடித்திருப்பதற்கும் காரணமாக இருக்கலாம்.

            செல்போன் கம்பெனிகளும் குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு குறைந்த காசில் நிறைந்த டேட்டா வசதிகளைத் தருகின்றன. அதனால் ஆஸ்தான நண்பர் கேள்வியை இப்படி மாற்றலாம். குழந்தைகள் மொபைல் பார்க்கலாமா? அதற்கும் டிவிக்குச் சொன்ன பதில்தான். நாம் சொன்னால் எங்கே கேட்க போகிறார்கள்?

            பார்க்காதே என்று சொல்லி மொபைல் உடைபடுவதற்கு பார்த்துத் தொலை என்று சொல்லி மொபைலைக் காப்பாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். குழந்தைகள் அந்த அளவுக்கு மொபைலால் உக்கிரம் பெற்றிருக்கிறார்கள். நாம்தான் பார்த்து பதிவிசாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் உலகில் நாமும் மொபைல்தான். தூக்கிப் போட்டு அடிப்பதற்கு நாளாகாது.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...