நான் ஏன் காந்தியவாதி இல்லை
அவசியம் படிக்க வேண்டிய இரண்டு புத்தகங்களையாவது பரிந்துரை செய்யுங்கள்
என்பார்கள்.
1.
காந்தியின் சத்தியசோதனை
2.
குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம்
இந்தப் புத்தகங்களைச் சொன்னதும் நீங்கள் காந்தியவாதியா என்பார்கள்.
உடனே ஓர் அடையாளத்தைக் கொடுத்து விட வேண்டும் இந்த மக்களுக்கு. நான் ஏன் காந்தியவாதியாக
இருக்க வேண்டும்? காந்தியவாதிகள் இது போன்ற புத்தகங்களைப் படிப்பதில்லை என்பதை நீங்கள்
எப்படி எடுத்துக் கொள்வீர்களோ?
அது சரி. நான் ஏன் காந்தியவாதியாக இல்லை? அது ரொம்ப கஷ்டமான
வேலை. நான் ஈஸியாக இருந்தால் மட்டும் வேலை பார்க்கிற ஆள். இல்லையென்றாலும் நீயும் வேண்டாம்
உன் வேலையும் வேண்டாம் என்று டாட்டா காட்டி ஓடி விடுகின்ற ஆள்.
அதற்காக என்னை கோட்ஸேவாதியாக நினைத்து விடாதீர்கள். அது துப்பாக்கிப்
பிடிக்கின்ற ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. அது பிடிக்க தெரிந்திருந்தால் நான் எப்போதோ
அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்திருப்பேன். அதில் சேர்ந்தால் பல நாடுகளுக்கும் சென்று
பலரை டொப் டொப் என்று சுடலாம் என்கிறார்கள்.
ஆனாலும் எனக்குக் காந்தியின் சத்திய சோதனையும் குமரப்பாவின்
நிலைத்த பொருளாதாரமும் நிரம்ப பிடித்த புத்தகங்கள்.
காந்தியாவது சத்தியம் சோதனை என்று கொஞ்சம் எதிர்மறையாகச் சொல்கிறார்.
அதை வாசித்து முடிக்கையில் சத்தியத்தைக் கடைபிடிப்பது கஷ்டம் என்ற முடிவுக்கு நீங்கள்
வரலாம். அல்லது எளிமை என்ற முடிவுக்கு வந்தால் சந்தோஷமே.
குமரப்பா ரொம்ப நேர்மறையாக நிலைத்த பொருளாதாரம் என்று சொல்கிறார்
பாருங்கள். அது அவ்வளவு எளிமையானது. எளிமையாக இருப்பது உங்களுக்குக் கஷ்டமானது என்றால்
அதற்கும் ஒன்றும் செய்ய முடியாது. குமரப்பா அந்தப் புத்தகத்தில் சொல்வதெல்லாம் தேவைக்கேற்ற
எளிமையைத்தான்.
மார்க்ஸ் தத்துவத்துக்கும் கூடவே பொருளாதாரத்துக்கும் சேர்த்து
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார். குமரப்பா அப்படியெல்லாம் இல்லை, எளிமையாக இருந்தால்
எந்த வித மாற்றம் இல்லாமல் நிலைத்த பொருளாதாரத்தோடு வாழலாம் என்கிறார். மனிதர்கள் மாற
வேண்டுமே. மனிதர்கள் மாறலாம், மாறாமல் இருக்கலாம், மாறி மாறி மாறலாம். அந்த மாற்றம்
மாறாதது என்பதைத்தானே மார்க்ஸ் சொல்கிறார்.
இரண்டு பேருமே மனிதர்களின் குணாதிசயங்களைக் கணக்கில் எடுத்துக்
கொள்ளவில்லை. அவர்களின் குணாதிசயங்களே ஒவ்வொரு காலத்திலும் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
அதற்கேற்பவே தத்துவங்களும் கோட்பாடுகளும் உருவாகின்றன மற்றும் எழுதப்படுகின்றன.
எல்லாரும் சேர்ந்து பொதுவுடைமைக்கு மாறுவது என்றாலும் மாறலாம்.
முதலாளித்துவத்துக்கு மாறுவது என்றாலும் மாறலாம். காந்தியத்திற்கு மாறுவது என்றாலும்
மாறலாம். அது மக்களின் குணாதிசயத்திற்குப் பிடித்தாக இருக்க வேண்டும்.
எல்லார்க்கும் அது ஒரு பேஷனாகத் தோன்றினால் மாறுவார்கள். இல்லையென்றால்
அவர்கள் எதை பேஷனாக நினைக்கிறார்களோ அதில்தான் இருப்பார்கள். அதில் இருந்து கொண்டு
இப்படி மாற வேண்டும், அப்படி மாற வேண்டும் என்று கதை பல அடிப்பார்கள். கட்டுரைகள் வரைவார்கள்.
மேடைகளில் மைக்கில் பூகம்பம் வர முழங்குவார்கள்.
அப்படியும் இருப்பார்களா என்றால் அப்படியும் எப்படியும் இருப்பார்கள்.
வள்ளலார் ஒருவர்தான் இந்தக் குணாதிசயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டார். அவர் உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசுவார் என்கிறார். அது ஒரு விதமான ஆன்மிக வரிசையில் போய் விடுகிறது.
எல்லாம் கடைசியில் வாழும் மனிதர்ளுக்குச் சோறிட வேண்டும் என்று
போய் முடிந்து விடுகிறது. பறவைகள் பரவாயில்லை. அவற்றுக்கான உணவை அவையவை தேடிக் கொள்கின்றன.
மனிதர்கள் விசயத்தில்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஏகப்பட்ட தத்துவங்கள். ஏகப்பட்ட குழப்பங்கள்.
கொஞ்சம் அறிவு வளர்ந்து விட்டால் இப்படி ஒரு பிரச்சனை.
பறவைகள் அறிவு வளராமல் அந்த நிலையிலேயே இருப்பதாக. பறவைகளாவது
காந்தி, குமரப்பா, மார்க்ஸ், வள்ளலார் என்று மாபறவை ஆத்மாக்கள் தோன்றாது எல்லாம் பறவைகளாக
இருக்கட்டும்.
*****
No comments:
Post a Comment