இங்க் பேனாக்களை டைவர்ஸ் செய்ய முடியாது
அடிக்கடி எனக்கு பேனா ரிப்பேர் செய்து தந்து கொண்டே இருக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் அப்பா அதை அலுக்காமல் சலிக்காமல் செய்து கொடுப்பார். இங்க் பேனா அப்படித்தான்.
அடிக்கடி ரிப்பேர் செய்கிறீர்களா என்று வேவு பார்க்கும். இல்லையென்றால் நிப்பில் ஏதாவது
ஒரு கோளாற்றை உருவாக்கிக் கொண்டு எழுத விடாமல் இம்சிக்கும். அதுவும் இல்லையென்றால்
கையெங்கும் இங்கைப் பூசி விட்டு அசிங்கப்படுத்தும்.
அப்பாவுக்கு இப்போ பேனா ரிப்பேர் செய்வதில் ஓர் அலுப்பு வந்து
விட்டது. எவ்வளவு காலம் பணியாற்றிக் கொண்டே இருக்க முடியும். ரிட்டையர்மெண்ட் தேவைப்படுகிறது.
பேனா ரிப்பேர் செய்யும் பணியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டார்.
ஓய்வுக்குப் பின் பகுதி நேர வேலையாக இதைச் செய்யக் கூடாதா என்றால்
உனக்கு இதாண்டா வேலை என்று சொன்னதோடு இது போன்ற வேலையைச் செய்ய முடியாது என்று குறிப்பு
காட்டிச் சென்று விட்டார்.
நான் பால் பாய்ண்ட் பேனாவுக்கு மாறி விட்டேன். இதில் ஒரு ரிப்பேர்
வர வேண்டுமே. வந்தால் ரிப்பேர் செய்ய வேண்டியதில்லை. கடாசி விட வேண்டியதுதான். புதுப்
பேனா கிடைத்து விடுகிறது. இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய்
என்று இதன் விலையோ கவர்ச்சிகரமாக இருக்கிறது.
இரண்டு ரூபாய் பேனா கொஞ்சம் ரப்பாக எழுதும். இருபது ரூபாய் பேனா
ரொம்ப சாப்டாக சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு எழுதும். எப்படி விலை என்றாலும் எல்லாம்
எழுதும். முரட்டு மனிதர்களை அடக்கிப் பழக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ரூபாய் பால் பாய்ண்ட்டே
போதும்.
எல்லாம் ஒன் யூஸ். யூஸ் அன்ட் த்ரோதான் என்றாலும் ஒவ்வொரு விலை.
தோசைக்கேற்ற காசு. காசுக்கேற்ற ஆசை.
இங்க் பேனாக்களில் இருந்த சிநேகம் பால் பாய்ண்ட் பேனாக்களில்
இல்லை. பால் பாய்ண்ட் பேனாக்களாக இருந்தாலும் அந்தக் காலத்தில் ரெய்னால்ட்ஸ் காதலர்கள்
இருந்தார்கள். அவர்கள் ரெய்னால்ட்ஸ் பேனாவில் ரீப்பிளை மாற்றி மாற்றி எழுதுவார்கள்.
இப்போது செல்லோ, மான்டெக்ஸ், ரோரிட்டோ என்று என்னென்னமோ கம்பெனிகள் வந்து ஏகப்பட்ட
காதலர்கள் உருவாகி விட்டார்கள்.
போன வாரம் வரை செல்லோவின் காதலராக இருந்தவர் இந்த வாரம் மான்டெக்ஸின்
காதலராக மாறிக் கொள்கிறார். பிறகு ரோரிட்டோவின் காதலராக மாறிக் கொள்பவரும் இருக்கிறார்.
ஒரே காதலர் பலவற்றின் காதலராக மாறிக் கொள்ள முடிகிறது. உலகமயமாக்கலின் காதல் சுதந்திரம்.
இங்க் பேனாக்கள் பழைய இணையர்களைப் போல. பால் பாய்ண்ட பேனாக்கள்
புதிய இணையர்களைப் போல. இங்க் பேனாக்களைச் சட்டென டைவர்ஸ் செய்து விட முடியாது. பால்
பாய்ண்ட் பேனாக்களை எப்போது வேண்டுமானாலும் செய்து விடலாம்.
எல்லாம் அப்பாக்களால் வந்தது. அவர்கள் மட்டும் பேனாக்களை ஒழுங்காக
ரிப்பேர் செய்து கொடுப்பார்களானால் இந்த நிலை வந்திருக்காது. சரிதானப்பா நீயென் பேனாவை
ரிப்பேர் செய்து தருகிறாயா என்று என் பிள்ளை கேட்டால் எனக்கு பேனா ரிப்பேர் செய்யத்
தெரியாதே. அது என் அப்பாவிற்கு மட்டுமே தெரியும். நான் கற்றுக் கொள்ளவில்லை.
இது பேனாக்களின் புராணமா? அப்படியும் கொள்ளலாம். நம் பாரம்பரியமான
கலைகளின் புராணமாகவும், மகத்துவங்களின் புராணமாகவும் கொள்ளலாம். எல்லாம் அப்பாக்களுடனே
முடிந்து விட்டன. பிள்ளைகள் அவற்றின் மீது பிரியப்படவே இல்லை.
என் பிள்ளைகளுக்கும் அப்படி என்னிடமிருந்து ஏதாவது ஒரு புராணம்
இருக்குமோ? காலம் அதை விட வேகமாக மாறி அதையெல்லாம் யோசிக்க விடாமல் அடித்து விடுமோ?ஒரு
புராணிகனின் பிரயோஜனமில்லாத கவலை.
*****
No comments:
Post a Comment