1 Jun 2022

என் சமூகமே உன் எழுத்தாளர்களை விட்டு விடு!

என் சமூகமே உன் எழுத்தாளர்களை விட்டு விடு!

            நான் கொஞ்சம் அதிகம் எழுதித் தொலைப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கு வளவளவென்று பேச வராது. அதனால் இப்படி. நீங்கள் பயப்பட வேண்டாம். குரைக்கின்ற நாய் கடிக்காது என்ற பழமொழி உங்களுக்குப் பக்க பலமாக இருக்கும்.

            இலக்கியம், இலக்கணம், நாவல், சிறுகதை, கவிதை, பத்தி, மருத்துவம், இயற்கை, உடல் நலம் என்று பல்வேறு பிரிவுகளில் எழுதுகிறேன். இந்தப் பிரிவிற்குள் அடங்காதவைகளையும் நான் எழுதக் கூடும். நான் இவ்வளவா எழுதுகிறேன் என்று எனக்கும் இப்போதுதான் தெரிகிறது.

            மருத்துவம் குறித்து நான் எழுதுபவை குறித்து நீங்கள் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். எழுதியதைப் படித்ததற்கு இப்படி ஒரு தண்டனையா என நீங்கள் கேட்க கூடாது. ஒரு வினையென்றால் எதிர்வினை இருக்கத்தானே செய்யும். நியூட்டன் அப்படித்தான் சொல்கிறார். உங்களுக்குச் சந்தேகம் என்றால் ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தைப் பார்க்கவும்.

            அநேகமாக எல்லாவற்றிற்கும் அப்படித்தான். இலக்கியம் குறித்து நான் எழுதுபவை குறித்து நீங்கள் இலக்கியவாதிகளுடன் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். நான் எழுதிய குறிப்புகளைக் கொண்டு நீங்களாக மருந்து தயாரித்துக் குடிப்பதைப் போலக் குடித்து விடக் கூடாது. இதே யூசர் மேனுவல் இலக்கணம், நாவல், சிறுகதை, கவிதை இத்யாதிகள் வரை அனைத்துக்கும் பொருந்தும்.

            நல்ல மருந்து என்று நம்பித்தான் கண்டுபிடிக்கிறோம். அது தவறான மருந்தாகப் போய் விடக் கூடிய வாய்ப்பும் உண்டு. எழுதுவதிலும் அப்படித்தான். அதற்கு என்ன செய்ய முடியும்? மருந்து தயாரிக்காமல் இருக்க முடியுமா சொல்லுங்கள். அப்படி நினைத்திருந்தால் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்திருக்குமா?

            சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். எனது எழுத்தில் பல குறைபாடுகள் இருக்கலாம். அது வேறு. அதுவல்ல விசயம். நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். குறைபாடுகள் சரி செய்வதற்காகத்தான். குறைபாடுகளே இல்லையென்றால் நீங்கள் எதை சரி செய்வீர்கள்?

            சில எழுத்துகள் அந்த நேரத்துக்கான சுகமளிப்பவை. சுய இன்பமும் வேண்டியதாகத்தானே இருக்கிறது. தயவு செய்து நீங்கள் நான் சொல்லும் சுய இன்பம் வேறு என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதை சுய சுகம் என்று எடுத்துக் கொண்டாலும் சரிதான்.

            நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று உண்டு. எழுத்து ஒரு போதை. எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாமலும் இருக்க முடியாது. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது தெரியாதவர்களா நீங்கள்.

            போதை எதையோ செய்ய தூண்டுகிறது. செய்து விட்டு மயங்கி சரிந்து விடுகிறது. விழித்துப் பார்த்தால்தானே விபரீதம் தெரிகிறது. அவன்தான் குடிகாரன்னு தெரியுதுல்ல, அவங்கிட்டே போய் ஏன்யா வெச்சுக்கணும் என்ற கேள்விதான் இந்த நூற்றாண்டின் சிறந்த கேள்வி என்பேன்.

            அவர்தான் எழுத்தாளர்ன்னு தெரியுதுல்ல, பிறகேன்யா அவர்கிட்டே வெச்சுகிட்டு என்று காலம் புதுமொழியையும் எழுத வேண்டும் என்று பிரியப்படுகிறேன். இப்போதெல்லாம் பிடிக்காததை எழுதினால் தாக்குதல் வரை போகிறார்களாமே. சில மாநிலங்களில் துப்பாக்கிச் சூடு வரை போவதாகக் கேள்விப்படுகிறேன். இது நிரம்ப கவலையளிக்கிறது.

            எல்லா சமூகமும் அநேகமாக இப்படித்தான் இருக்கின்றன. சமூக விரோதிகளை விட்டு விடுகின்றன. எழுத்தாளர்களைத் தாக்குவதில் பிரக்ஞையோடு இருக்கின்றன. எழுத்தாளர்கள் நேரம் கிடைக்கும் போது கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். சிலம்பம் குஸ்தியும் என்றாலும் சரிதான். அல்லது அரசாங்கமாவது எழுத்தாளர்களுக்கு தற்காப்பு கலைகளைப் பயிற்றுவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...