1 Jun 2022

பேரைச் சொல்லுங்கள்! லோனைப் பெறுங்கள்!

பேரைச் சொல்லுங்கள்! லோனைப் பெறுங்கள்!

            நான் என்ன பிறக்கும் போதே பார்ன் வித் சில்வர் ஸ்பூனா? எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் அகப்பைகள் இருந்தன. அவர்கள் அலுமினிய கரண்டிகளுக்கு மாறி பிறகு எவர் சில்வர் கரண்டிக்கு மாற ரொம்ப காலம் பிடித்தது.

            ஸ்பூன் என்ற ஒன்று தெரியவே எனக்கு ஆண்டுகள் பல ஆயின. அறிவியல் புத்தகத்தில் தேக்கரண்டி என்று பல இடங்களில் அச்சிட்டிருப்பார்கள். அதென்னவோ மூங்கிலிலும் கொட்டாங்கச்சியிலும் செய்த அகப்பையைப் போல தேக்குமரத்தில் செய்த காஸ்ட்லியான கரண்டி போலும் என்று நீண்ட காலம் நினைத்திருந்தேன்.

            நானென்ன செய்ய முடியும் சொல்லுங்கள். அததைக் கண்ணில் காட்டினால்தானே தெரியும். அப்படி நாங்கள் ஆக்ஸிஜன் தயாரிப்பது, ஹைட்ரஜன் தயாரிப்பது வரை படித்திருந்தோம். படித்தென்ன பிரயோஜனம் சொல்லுங்கள். இந்தக் கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுபாடு ஏற்பட்ட போது ஒன்றும் செய்ய முடியவில்லை.

            அப்படித்தான் எத்தனால் தயாரிப்பது பற்றிக் கூட படித்தோம். நாங்கள் படித்த காலத்தில் அது பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் முக்கியமான கேள்வி வேறு. அதற்காக எங்கள் அறிவியல் ஆசிரியர் மாய்ந்து மாய்ந்து பாடம் நடத்தினார். படித்தது படித்ததுதான், அதை வைத்து நாங்கள் எதையும் செய்யவில்லை. பைசா காசு சம்பாதிக்க அந்த முறை உதவவில்லை.

            எங்களோடு படித்துக் கொண்டு வந்து பாதியிலேயே படிப்பை விட்ட நல்லமுத்து சாராயம் காய்ச்சும் சண்டியரு கோவாலுவோடு சேர்ந்துகிட்டு அது எதையும் படிக்காமல் நன்றாகக் காய்ச்சும் திறன் பெற்று மிக நன்றாகச் சம்பாதிக்கும் திறனும் பெற்று விட்டான்.

            இப்படி கதைகள் நிறைய. அது கிடக்கட்டும். ஏதோ தட்டு தடுமாறி படித்து முடித்தோம். படித்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைக்காது என்றார்கள். ஆனால் பேங்கில் லோன் கிடைக்கும் என்றார்கள். அந்த லோனை வாங்கி சுயதொழில் செய்ய வேண்டும் என்றார்கள்.

            பரவாயில்லையே, நமக்காகப் படித்து முடித்து வேலை கிடைக்காது என்று முன்கூட்டியே இப்படியெல்லாம் யோசித்துத் திட்டம் வகுத்திருக்கிறார்களே என்ற ஆச்சரியம் விலகாமல் பேங்கிற்குச் சென்றால் மேனேஜர் சொத்து விவரம் கேட்டார். நான்தான் சொத்து விவரத்தை முதல் வரியில் சொல்லியிருக்கிறேனே.

            நமக்கு சொத்து இருந்தால் நாம் ஏன் கடன் கேட்கப் போகிறோம்? எதுவும் இல்லாததால்தானே போகிறோம்.

            எதுவுமில்லை என்று சொன்னால் கடன் கொடுக்க மாட்டார்கள் என்பதால் எழுந்து விட்டேன். மேனேஜருக்கு குழப்பம்.

            ஏன் எழுந்திருக்கிறீங்க? உட்காருங்க. உங்க பேர் என்ன? என்றார்.

            பேரில் என்ன இருக்கிறது? பேரைச் சொன்னால் கடன் கொடுத்து விடுவார்களா? என்ற அவநம்பிக்கையுடன்தான் உட்கார்ந்தேன்.

            பேரைச் சொல்லுங்க மிஸ்டர் என்றார் மறுபடியும் மேனேஜர். சரி இவர் நியூமராலஜி பார்த்து கடன் கொடுக்கும் மேனேஜராக இருக்கும் என்ற யோசனையில், பேரைச் சொன்னா நியூமராலஜி பார்த்துட்டுக் கடன் கொடுத்துடுவீங்களா என்றேன்.

            லோன் கொடுக்கிறோம் இல்லைங்றது நெக்ஸ்ட். உங்க நேமைத் தெரிஞ்சிக்க வேண்டியது பர்ஸ்ட் என்றார் மேனேஜர்.

            சரிதான் சொல்லிட வேண்டியதுதான் என்று மல்லையா என்றேன்.

            உங்களுக்கு யார் சார் லோன் இல்லன்னு சொல்ல முடியும் என்று சார் போட்டு பேச ஆரம்பித்த மேனேஜர் எனக்காகக் கூல் டிரிங்ஸ் எடுத்து வர அவரே ஓட ஆரம்பித்தார்.

            அவர் முகத்தில் நம்ம பேங்குக்குக் கடன் வாங்க மல்லையா வந்திருக்கிறார் என்ற பெருமிதம் ஓடுவதை அவரது அந்த பரபர விறுவிறு ஓட்டத்திலும் அவதானிக்க முடிந்தது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...