நான் வாழும் காலம் கி.பி. 2022
நான் மாதா மாதம் சரியாகத்தான் மின் கட்டணம் செலுத்துகிறேன்.
நீங்கள் மட்டும் தவறாகவா செலுத்துவீர்கள்? எல்லாரும் அப்படித்தான். இல்லையென்றால் பீஸைப்
பிடுங்கி விடுவார்கள். ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு லட்சத்து இருபதினாயிரம்
கோடி கடன் இருக்கிறதாம். நாம் கட்டுகிற காசையெல்லாம் என்ன செய்வார்களோ? ஏது செய்வார்களோ?
கடனை அதிகரித்துப் பயன்படுத்திக் கொள்வார்களோ?
*
ஒரு அஞ்சு நிமிஷம். ஏ.டி.எம்.க்குப் போய் பணம் எடுத்தாந்து தந்துடுறேன்.
உங்ககிட்டெ ஜிபே இல்லையா? எந்தக் காலத்துல சார் வாழ்ந்துகிட்டு
இருக்கீங்க?
நான் தாங்க முடியாத வெயிலடிக்கிறது கத்திரி வெயிலோட கோடை காலத்துல
வாழ்ந்துகிட்டு இருக்கேன் சார். அடிக்கிற வெயிலுக்கு ஒரு ரெண்டு நிமிஷம் ஏ.டி.எம்.
ஏசியில இருந்துகிட்டு அப்படியே உங்களுக்குப் பணமும் எடுத்தாந்து தந்துடுவேன்.
*
சாலைகளில் நடவு நடுகிறார்கள்.
அதன் மூலம் அவர்களை அவமானப்படுத்துகிறார்களாம்.
எனக்கென்னவோ
விவசாயத்தை அவமானப்படுத்துவது போல படுகிறது.
*
கோழிக்குஞ்சும்மா கோழிக்குஞ்சு.
நாட்டுக் கோழிக்குஞ்சு.
பொந்தா கோழி, கிரிராஜா கோழி இவைகள் எல்லாம் எளிதாக வளர்க்கக்
கூடிய கோழிக்குஞ்சுகளம்மா.
உங்களிடம் புத்தகம், நோட்டுகள் இருந்தால் போட்டு விட்டுக் கோழிக்குஞ்சுகளை
வாங்கிக் கொள்ளலாம்மா.
மொத்தத்தில் இந்தச் சமூகமே படிப்பதற்கு எதிராகத்தான் இருக்கிறதோ?
காசு கொடுத்துக் கோழிக்குஞ்சுகள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று
சொல்ல மனசு வருகிறதா பாருங்கள்.
ஆடு, மாடு மேய். அல்லது கோழிக்குஞ்சு வளர். என் சமூகமே நீ எனக்குப்
பின்பாகச் செல்.
*****
No comments:
Post a Comment