நள்ளிரவு காட்சிகள்
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். இலக்கிய கூட்டங்கள் நடந்த
நாட்கள். அதுவும் நள்ளிரவு வரை. நள்ளிரவு வரை இலக்கிய கூட்டமா என்று வாயைப் பிளக்காதீர்கள்.
சத்தியமாக நள்ளிரவு வரை இலக்கிய கூட்டம்தான்.
இலக்கிய கூட்டங்கள் அப்படித்தான். ஆறு மணிக்கு ஆரம்பமாவதாகச்
சொல்லி எட்டு மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரை நீளும். விடியற்காலை வரை நடந்த கூட்டங்கள்
உண்டு. என்னால் அவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்க முடியாது என்பதால் நள்ளிரவைக் கடந்தால்
கழன்று வந்து விடுவேன்.
அதெப்படி சார் நள்ளிரவு வரை கூட்டம் நடத்த முடியும் என்று கேட்கிறீர்கள்தானே.
இலக்கியவாதிகள் அப்படித்தான் சார். பேச ஆரம்பித்து விட்டால் மைக்கை விட மாட்டார்கள்
கல்யாணம் ஆன மாப்பிள்ளை புதுப்பொண்ணைக் கட்டிப் பிடித்துக் கொள்வதைப் போல. கடைசியாக
ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன் என்பார்கள். ஒன்றுக்குப் பத்தாக எதையெதையோ
சொல்லி முடிக்கவே மாட்டார்கள். அவ்வளவையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இடையிடையே சுகர் இருப்பதாகச் சொல்லி யூரின் போக ஒரு விரலை நீட்டி
எழுந்து செல்பவர்கள் புத்திசாலிகள். எங்கேயாவது தனிமையை நாடி சிகரெட் அடித்து வரும்
அந்தப் பொழுதுகள் அவ்வளவு இனிமையானவை என்று அவர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள்.
நிகழ்ச்சி நிரலில் இவர்கள்தான் பேசப் போகிறார்கள் என்ற தெளிவான
திட்டம் இருக்கும். நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டால் தெளிவில்லாத திட்டம்தான். ஆளாளுக்குப்
பேச வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்கள். எங்கே பேச வேண்டாம் என்று சொன்னால் அடுத்த
கூட்டத்துக்கு வராமல் போய் விடுவார்களோ என்ற பயத்தில் யார் பேச வேண்டும் என்று சொன்னாலும்
தாராளமாகப் பேசச் சொல்லி விடுவார்கள்.
எனக்கு முன்னே பின்னே பேசிப் பழக்கமில்லை என்று சொல்லி ஆரம்பிப்பார்கள்.
அத்துடன் ஒரு சில வார்த்தைகள் சொல்லி முடித்துக் கொள்கிறேன் என்று உத்திரவாதமும் தருவார்கள்.
மனிதர்களின் பேச்சை நம்பக் கூடாது என்பதற்கு அவர்கள் மாபெரும் உதாரணங்கள். பேசுவார்கள்
பேசுவார்கள் அப்படிப் பேசுவார்கள்.
அரை மணி நேரம், முக்கால் மணி நேரம் பேசி முடித்ததும் நான் என்ன
சொல்ல வருகிறேன் என்பார்கள். நமக்குக் கொட்டாவி வந்து விடும். அவருடைய பேச்சை ஆவலாக
வாயில் விழுங்குவதைப் போல அந்தக் கொட்டாவியை விட வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு வந்து
நிறைய பேச கற்றுக் கொண்டேன் என்பார்கள் நிறைந்த நன்றியோடு. அது உண்மை. அடுத்த கூட்டத்துக்காவது
தயார் செய்து கொண்டு வந்து பேசுங்கள் என்ற குறிப்பை இறுதியில் வழங்க வேண்டியிருக்கும்.
கட்டாயம் தயார் செய்து வருகிறேன் என்பார்கள். அடுத்த கூட்டத்திலும்
அதே கதைதான். போதாகுறைக்கு நான்கைந்து பேரைக் கூட்டி வருவார்கள். அவர்கள் பேச ஆரம்பிப்பார்கள்.
எல்லாருக்கும் ஆரம்பிக்க தெரியுமே தவிர நிறுத்த தெரியாது. இதுதான் இலக்கிய கூட்டங்களின்
முக்கிய பிரச்சனை. மைக் ஒயரும் பிய்ந்து தொங்காது. எவ்வளவு சிரமம் பாருங்கள். ஏதோ பேசித்
தொலையுங்கள் என்று விட்டு விட வேண்டியிருக்கும்.
ஒரு வழியாகக் கூட்டம் முடிய நள்ளிரவு ஆகி விடும். அப்போதும்
ஒருவர் எனக்குப் பேசுவதற்குப் போதுமான அளவு நேரம் வழங்கவில்லை என்று பிராது அளந்து
கொண்டிருப்பார். சொல்லாத சொல்லுக்கு விலையேது சார், போய் உங்கள் மனைவியிடம் பேசுங்கள்
என்பேன். அட போங்க சார், அவ கேட்க மாட்டேங்றான்னுதான் இங்க வந்து பேசுறேன் என்பார்.
இலக்கிய கூட்டங்கள் நடத்துவது சாமானியமில்லை சார். அதுவும் நள்ளிரவு
வரை நீளும் கூட்டங்களை நடத்துவது.
*****
No comments:
Post a Comment