21 May 2022

உங்கள் விகடபாரதி நடிக்கும் விசாரணை வளையம்

உங்கள் விகடபாரதி நடிக்கும் விசாரணை வளையம்

            நள்ளிரவு வரை நீளும் இலக்கிய கூட்டங்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதைக் கேட்காதவர்கள் முன் பதிவுகளைப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன். இந்தப் பதிவைப் புரிந்து கொள்ள அந்தப் பதிவின் தொடர்ச்சி தேவை மற்றும் அவசியம்.

            நள்ளிரவு கூட்டம் முடிந்ததும் வீடு திரும்ப வேண்டும். அதுதான் வீடுபேறு. இலக்கியங்கள் வீடுபேற்றை எவ்வளவு முக்கியமாகக் குறிப்பிடுகின்றன தெரியுமா. நள்ளிரவில் நாம் மட்டும் தனிமையில் வீடு திரும்ப வேண்டும். இலக்கியவாதிகளுக்குத் தனிமை ஒரு பிரச்சனையில்லை. நள்ளிரவு தனிமை -  நினைத்துப் பாருங்கள். கடக்கும் வழியில் இரண்டு, மூன்று சுடுகாடுகளைக் கடக்க வேண்டும். நாய்களின் எண்ணிக்கைகளுக்குக் கணக்கில்லை.

            இந்தப் பிரச்சனைகளுக்காக இலக்கியவாதிகள் அனைவரும் ஒரு பேரணியாக வீடு திரும்புவோம் என்றால் ஒவ்வொருவர் வீடும் ஒவ்வொரு பக்கம் இருக்கிறது. என்னதான் பேரணியாகச் சென்றாலும் கடைசியில் ஒருத்தர் தனிமையில்தான் வீடு போய் சேர வேண்டியிருக்கும். அதுதான் பேரடாக்ஸ். தர்க்கம் அப்படித்தான் சொல்கிறது. பேரணி என்றால் போலீஸ் பெர்மிஷன் வேறு இருக்கிறது பாருங்கள்.

            போலீஸ் என்றதும்தான் ஞாபகம் வருகிறது. நள்ளிரவில் வீடு திரும்பும் போது கட்டாயம் ரோந்து செல்லும் போலீஸ்காரர்களின் விசாரணை வளையத்துக்குள் வர நேரிடும். இதற்கென நான் எங்கள் இலக்கிய அமைப்பின் தலைவரான அக்கினிப்புயல் மற்றும் செயலாளரான புரட்சிபூபாளம் கையெழுத்துப் போட்ட ஐ.டி. கார்டை ஐ.டி.யில் வேலையில் பார்ப்பவர்கள் போலத் தொங்க விட்டிருக்கிறேன்.

            அந்த ஐ.டி. கார்டைப் பார்த்தும் ஊது என்பார்கள். மூடில்லை என்று சொல்ல முடியுமா என்ன? ஊதுவேன். நாளையிலிருந்து பல்லைச் சுத்தமாக துலக்கு என்பார்கள். செய்கிறேன் சார் என்பேன். என்ன பேஸ்ட் என்பார்கள். அப்போதிலிருந்து இப்போது வரை கோபால் பல்பொடிதான் என்பேன்.

            குடிக்கவில்லை என்றால் எங்கே போய் விட்டு வருகிறாய் என்பார்கள். ஐ.டி.கார்டைக் காட்டி இலக்கிய கூட்டம் என்பேன். நடுராத்திரியிலா என்பார்கள். ஆமாம் சார் அப்படி ஆகி விடுகிறது என்பேன்.

            நம்புறாப்புல இல்லையே என்று லத்தியைக் கொடுத்து தாடையை ஒரு ரெண்டு சென்டி மீட்டர் உயர்த்துவார்கள். சார் சத்தியமாக நம்புங்கள் என்று தோளில் மாட்டி வைத்திருக்கும் ஜோல்னா பையில் கையை விட்டு நான் வாசித்த கவிதையை எடுக்கப் போனால், எல்லாம் பிளானோடத்தான்டா வர்றீங்க என்பார்கள்.

            உண்மையைச் சொல்லப் போறீயா இல்லையா? இல்ல ஸ்டேசன்ல கொண்டு போய் வெச்சு உங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லவா? என்பார்கள்.

            உண்மை என்றால் எந்த உண்மை என்று தெரியாமல் விழித்தால் மதுவாங்கட்டையில உட்கார்ந்துட்டுத்தானேடா வர்றே என்பார்கள். அதென்ன மதுவாங்கட்டை என்று புரியாமல் தலையை எந்தப் பக்கம் ஆட்டுவது என்று தெரியாமல் ஆட்டி வைத்தால், பாருய்யா ஒன்னாட் போர் உண்மையைய ஒத்துக்குறான் என்பார் தொந்தி குலுங்க.

            உடனே ஒன்னாட் போர், ஏன் தம்பி மதுவாங்கட்டையில உக்காந்துட்டு வந்தேன்னு சொன்னா என்ன சொல்லப் போறோம்? இதெ முன்னாடியே சொல்லியிருந்தா நாங்கப் பாட்டுக்குப் போயிட்டு இருக்க மாட்டோமா? என்பார்.

            சாரி சார் என்பேன்.

            இதெ ஒண்ண கத்துக்கிட்டீங்க. போங்கடா போங்க. நாங்களும் உங்க வயசுல மதுவாங்கட்டையில உக்காந்துகிட்டு இருந்தவங்கத்தான். கொஞ்சம் மிட் நைட்டுக்கு முன்னாடி கிளம்பிப் போயிடணும் என்ற தலையில் ரெண்டு தட்டு தட்டி விட்டுப் போவார்கள்.

            அதற்குப் பிறகுதான் எங்கள் இலக்கிய அமைப்பின் பெயரை மதுவாங்கட்டை என்று மாற்றினோம். போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தும் போது எங்கே போயிட்டு வர்றே என்றால் இலக்கியக் கூட்டம் என்று தடுமாறி நிற்பது மாறி மதுவாங்கட்டெ என்று சொல்லி விடுபட வசதியாகப் போனது.

            ரொம்ப காலத்துக்குப் பிறகு மற்றொரு உண்மை புலப்பட்டது. மதுவாங்கட்டெ என்றால் அங்கே உட்கார்ந்து மறைவாகக் கஞ்சா பிடித்து விட்டு வருவது என்று அர்த்தமாம். என்ன கொடுமெ சார் இது? இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களுக்கு இப்படிப்பட்ட சோதனைகள் வரக் கூடாது.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...