22 May 2022

எறும்புகளுக்குச் சுகர் வராதா?

எறும்புகளுக்குச் சுகர் வராதா?

            வீடெங்கும் எறும்புகள் மொய்க்கின்றன. இந்த வீடு நமக்குக் கட்டியதா, எறும்புகளுக்குக் கட்டியதா என்று புரியாத அளவுக்கு வீடெங்கும் எறும்புகள்.

            எங்கள் வீட்டில் ஐவர் வசிப்பதாக நினைக்கிறார்கள். இந்த எறும்புகளையும் சேர்த்தால் கணக்கில் கொள்ளாது. அவ்வளவு உயிர்களையும் இந்த வீடுதான் காத்து வருகிறது. கொசுக்கள் ஏராளம். பரவாயில்லை கொசுக்கள் கடிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன. கொரோனா வந்த பிறகு டெங்கு, சிக்கன்குன்யா பக்கம் அடி எடுத்து வைக்கவில்லை. இந்த எறும்புகள்? என்ன சொல்ல? வாங்கி வைக்கின்ற அத்தனை தின்பண்டங்களையும் வேட்டு விட்டு விடுகின்றன.

            ஏ எறும்புகளே ஒரு கிலோ ஸ்வீட் என்ன விலை என்று தெரியுமா என்று ஒரு நாள் கேட்டே விட்டேன். என்ன தெனாவெட்டு என்கிறீர்கள்? எந்தப் பதிலும் சொல்லாமல் அவை பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. வந்தக் கோபத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்திருக்க வேண்டும். என்னவோ மனசு மாறி விட்டது.

            அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அலைவது போல இந்த எறும்புகள் அலைகின்றன. வரிசையாகத்தான் அலைகின்றன. மந்தையாக அலைவதில்லை. அதற்காக இப்படியா வீடு பூரா அலைவது? கொஞ்சம் பிசகி காலை வைத்து விட்டால் கூட்டமாகக் கூடி கடித்து எடுத்து விடுகின்றன.

            டப்பாக்களை இறுக்க மூடி வைக்க வேண்டியதாக இருக்கிறது. இறுக்கமாக மூடினால் பிறகு திறப்பது சிரமமாகி விடுகிறது. இது இந்த எறும்புகளுக்குப் புரிகிறதா? சரிதான் ஸ்வீட்டுகளைத் தின்று விட்டுப் போ, காரங்களை விட்டு விடு என்றால் விடுகிறதா? மிக்சரில் அவ்வளவு எறும்புகள். ஸ்வீட்டைத் தின்று விட்டுத் திகட்டக் கூடாது என்று மிக்சரையும் ஒரு கை பார்த்து விடுகின்றன.

            நமக்கே இப்படி என்றால் ஸ்வீட் கடைகள் எப்படி சமாளிக்கின்றன? மளிகைக் கடைகளில் சீனி, வெல்லத்தை எப்படி பாதுகாக்கிறார்கள்? சர்க்கரை ஆலைகள் வைத்திருக்கிறார்களே, அவர்கள் எப்படி சமாளிப்பார்கள்? நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அவர்கள் பெரிய சாமர்த்தியசாலிகளாக இருந்தால்தான் இந்த எறும்புகளிடமிருந்து காப்பாற்ற முடியும்.

            ஒரு புளிசாதம் செய்து வைப்பது என்றாலும் பயமாக இருக்கிறது. அவ்வளவு எறும்புகள் கூடி மொய்த்துக் கொண்டு தின்று கொண்டிருக்கின்றன. ஸ்வீட், காரம், சோறு, கறி என்று எதையும் விடுவதில்லை என்றால் எப்படி?

            இந்த எறும்புகளினின்று பாதுகாக்கிறேன் என்று வீடெங்கும் எறும்பு சாக்ஸ்பீஸை வாங்கி வட்டம் வட்டமாகப் போட்டு வைத்திருக்கிறார்கள். வீட்டிற்கு வருபவர்கள் இதென்ன கோலம் வித்தியாசமாக இருக்கிறது என்று கேட்டு விட்டுப் போகிறார்கள். இந்த எறும்புகள் காது கேட்காதது போலப் போய்க் கொண்டிருக்கின்றன ஓரமாக.

            எதை வைத்தாலும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்தப் பாத்திரத்தின் மேல் இன்னொரு பாத்திரம் வைத்து அப்படித்தான் உணவுப் பண்டங்களைப் பதார்த்தங்களை வைக்க முடிகிறது. இதனால் இரண்டிரண்டு பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.

            வீட்டில் எறும்பு வராத இடம் என்றால் பிரிட்ஜ்தான். இந்தக் கோடைக்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும் அதற்குள் ஏன் இந்த எறும்புகள் போகாமல் இருக்கின்றன? நமக்கென்றால் இந்தக் கோடைக்கு ஊட்டி, கொடைக்கானல் தேவையாக இருக்கிறது. எறும்புகளுக்குத் தேவை பண்டங்கள்தான் போல, குளிர்ச்சி தேவையில்லை. இருந்தாலும் இந்த எறும்புகள் இந்தக் கோடையில் அவ்வளவு புழுக்கத்தையும் தாங்கிக் கொண்டு குளிர்ச்சி வேண்டாம் என்று இருப்பது அவற்றின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது.

            என்ன செய்வது? இப்படி எறும்புகளோடு போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. வால்ட் டிஸ்னி சுண்டெலியை ரசித்து வாழப் பழகியது போல எறும்புகளை ரசித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். நமக்கும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள யார் இருக்கிறார்கள்? இந்த எறும்புகள்தான் இருக்கின்றன.

            அதே நேரத்தில் இது நானாகச் சேர்த்த கூட்டமா? தானாகச் சேர்ந்த கூட்டம். ரொம்ப சந்தோஷம் எறும்புகளே. இந்த உலகில் நிறைய இனிப்புகளைச் சாப்பிட்டு விட்டு சுகர் இல்லாமல் இருப்பது நீங்கள் மட்டும்தான்.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...