20 May 2022

ஒரு மெல்லிய கோடு

ஒரு மெல்லிய கோடு

            எப்படி ஆரம்பிப்பதுதான் என்று தெரியவில்லை. ஆரம்பித்து விட்டால் அது பாட்டுக்குப் போய் கொண்டிருக்கும். ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்துதான் ஆக வேண்டும். அந்தப் புள்ளிதான் எதுவென்று புரியவில்லை. அந்தப் புள்ளி தெரிந்து விட்டால் கோட்டை இழுத்து விடலாம். புள்ளி தெரியாததால் கோடு காத்துக் கொண்டிருக்கிறது.

            இங்கே இப்படி ஒரு கோடு, அங்கே அப்படி ஒரு கோடு, எப்படியாவது ஒரு கோட்டை இழுத்து விட வேண்டியதுதானே என்று கத்தும் உங்கள் கூக்குரல் கேட்கிறது. அப்படியெல்லாம் கோட்டை இழுத்து விடுவது சாத்தியமற்றது. கோடானது நேர்கோடா, வளைகோடா, குறுக்குக்கோடா, துண்டுகோடா, முடிவற்று நீளும் கோடா என்று தீர்மானமாகாத வரையில் எப்படிக் கோட்டைத் துவங்குவது?

            ஒரு ரப் நோட் என்றால் உடனடியாக கோட்டைத் துவங்கி விடலாம். மேல்கோடு, விளிம்பு கோடு என்று பக்கம் பக்கமாகப் போட்டுத் தள்ளி விடலாம். ஒரு கோடு போட்ட நோட்டில் எப்படிக் கோட்டை துவங்குவது என்பது போன்றன பல நிகழ்வுகள்.

            நான் ஒரு முறை ரூல்டு நோட்டில் ஜியாமென்ட்டிரி ஒன்றைப் போட்டுக் கொண்டு போனது போது ஆசிரியர் அடித்தார். அது ரப் நோட்டில் அதுவும் ஜியாமென்ட்ரி நோட்டில் போட வேண்டியது என்றால். கோடு போட்ட நோட்டில் கோடுகள் போடக் கூடாது என்று சில விதிகளை வழங்கினார். பிறகு அவரே கிராப் நோட்டில் கோடு போடுவது பற்றிச் சொல்லிக் கொடுத்தார். அந்த நோட்டில் குறுக்கும் நெடுக்குமாக சின்னதும் பெரிதுமாக அதாவது மெல்லிசும் மொத்தமாக நானா பக்கங்களிலும் பல கோடுகள் இருந்தன. இப்படி சில முரண்பாடுகள் இருக்கின்றன. அதை அனுசரித்துக் கொள்ள வேண்டும்.

            இப்போது உங்களுக்குக் கோடு போடுவதில் சிரமம் புரிய வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பக்கம் முழுவதும் எழுதி குறுக்காகக் கோடு போட்டு விட்டால் எல்லாம் காலி. ஒரு கோடு எல்லாவற்றையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

            ஒரு பண நோட்டை அச்சடிக்கும் போது அந்தக் குறுக்கு கோடு இல்லாமல் ஒன்று அச்சடித்தால் போதுமே, அது செல்லாத நோட்டாகி விடும். கோட்டை எங்கே துவங்கி எங்கே முடிப்பது என்பதுதான் சாமர்த்தியம். கோட்டைத் தொடங்கி முடிக்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.

            கோட்டைப் போடாமல் இருப்பது ரொம்ப ரொம்ப புத்திசாலித்தனம். எங்கே ஆரம்பித்து எங்கே போடப் போகிறேன் என்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். எல்லா நேரங்களிலும் அப்படியும் இருக்க முடியும் என்ற சொல்ல முடியாது. சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் குழப்பமாகவும் இருக்கலாம். அந்தக் குழப்பத்தில் இருப்பது கூட பலருக்கு எதிர்பார்ப்பைத் தூண்டலாம். மதில் மேல் நிற்கும் பூனை இந்தக் கோட்டிற்கு நல்ல புரிந்து கொள்வதற்கான உதாராணம்.

            கோட்டின் அந்தப் பக்கமா? இந்தப் பக்கமா? அதாவது அக்கரைக்கு இக்கரை பச்சையா? இக்கரைக்கு அக்கரை பச்சையா? ஒரு கோடு. அதுதானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அது மட்டுமா? வறுமைகோடு என்றுதானே சொல்கிறார்கள். அந்தக் கோட்டை வரைவதில் எவ்வளவு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கொஞ்சம் கவனம் பிசகி கோடு பெரிதானலும் பணக்கார கோடு என்று சொல்லி விடுவார்கள்.

            ஒரு மெல்லிய கோட்டில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றன. தடிமனான கோட்டிலும் விசயங்கள் இருக்கின்றன. நடுத்தரமான கோடுகளையும் சாதாரணமாக நினைப்பதற்கில்லை.

            இப்போது சொல்லுங்கள் கோடு என்பது சாதாரணமா? புள்ளியில் தொடங்கி புள்ளியில் முடிவது மட்டுமல்ல, புள்ளிகளின் தொடர்ச்சியாகச் செல்வதுதான் கோடு.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...