20 May 2022

சோதனை செய்வது சோதிப்பதற்காக அன்றி வேறென்ன?

சோதனை செய்வது சோதிப்பதற்காக அன்றி வேறென்ன?

            இன்று சோதனை நாள். வருடத்திற்கு இப்படி ஒரு நாளைச் சந்தித்தாக வேண்டும். சம்பளம் கொடுப்பவர்கள் அதிகாரம் செலுத்த ஒரு நாள் வேண்டுமே.

            எத்தனை நாள் வேண்டுமானாலும் அலுவலகம் சுத்தம் இல்லாமல் இருந்திருக்கலாம். அன்று ஒரு நாள் சுத்தமாக இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் வடமேற்கு மூலையில் நான்கு மில்லி மீட்டரில் ஒரு தூசு இருந்ததைக் குறிப்பிட்டு ஒரு மினிட் எழுதுவார்கள்.

            நான்கு மில்லி மீட்டர் தூசியைக் கவனிக்காமல் இருந்ததற்காக நாங்கள் ஒரு மெமோ கொடுத்துக் கொள்வோம். சோதனை நாள் என்றால் சில பல மெமோக்கள் இருக்க வேண்டும். மெமோக்கள் இல்லாவிட்டால் சோதனை சரியில்லை என்று உயர் அதிகாரிகள் முத்திரை குத்தி விடுவார்கள்.

இது அஞ்சல் துறையில் கடிதங்களின் குத்தப்படும் முத்திரைகள் போன்றதல்ல. கடிதத்தைப் படித்து விட்டதும் கிழித்து போட்டு விடுவது போல அந்த முத்திரையைக் கிழித்து போட்டு விட முடியாது. அந்த முத்திரையை காலம் முழுவதும் ஒரு பதிவேடு தாங்கிக் கொண்டிருக்கும். பாவம்தான் அந்தப் பதிவேடு என்னால் தலைச்சுமையோடு இருக்க நேரிடும். பதிவேடுகளின் தனிப்பட்ட நலனைக் கருதுபவர்கள் அன்றொரு நாள் தாத்தா பாட்டிகளைச் சாகடித்து லீவ் எடுத்துக் கொள்ளலாம்.

            பதினோரு மணியாகி விட்டால் பஜ்ஜி, சமோசாக்கள், சுழியன்களுக்குப் பஞ்சம் இருக்கக் கூடாது. சோதனை நாள் என்றால் ஆப்போசிட்டில் இருக்கும் டீக்கடைக்காரர் சுறுசுறுப்பாகி விடுவார்.

            மதியம் கோழி, ஆடு, காடை, கௌதாரி, மீன், உடும்பு, முயல் என்று பறப்பவை ஊர்வன நீந்துவனவுக்கு எந்தக் குறையும் எந்த உறுப்பிலும் இருக்கக் கூடாது. குறிப்பாக ஊனமுற்ற ஜீவன்களைப் பயன்படுத்தக் கூடாது. சில கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மிலிட்டரி ஹோட்டல் இதனால் ஒரு ராணுவ பரபரப்போடு இருக்கும். எந்த நேரமும் போர் மூளலாம் என்ற பரபரப்போடு அந்த ஹொட்டலின் கொதிகலன்கள் கொதித்துக் கொண்டிருக்கும். பாய்லர் வெடிப்பு சம்பவங்கள் கூட நடக்கலாம். அதைக் காரணம் காட்டி மதிய பறப்பவைகளுக்கும் ஊர்வனகளுக்கும் நீந்துவனகளுக்கும் எந்தக் குறையும் நேர்ந்து விடக் கூடாது.

            மாலைநேரம் வந்தால் பரோட்டா, சுக்கா, மஸ்கா, நூடுல்ஸ், கிரில் சிக்கன், சிக்கன் அறுபத்தைந்து என்று அப்படி.

            ராத்திரி வந்து விட்டால் குட்டி, புட்டி என்று சேம சௌக்கியங்களுக்குக் குறை இருக்கக் கூடாது. இப்படியாக சோதனை நாள் சுபம். அதற்கு மேல் ரூம் கதவு சாத்தப்பட்டு விடும். நள்ளிரவில் மிட் நைட் மசாலாவின் வாசம் தெருவெங்கும் தூக்கும். நான் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பேன். வேறென்ன சார் செய்ய முடியும்? மறுநாள் சரியான நேரத்துக்கு ஆபீஸ் போக வேண்டுமே?

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...