9 May 2022

உங்களுக்குச் சில செய்திகள்

உங்களுக்குச் சில செய்திகள்

            இந்த வாரத்தில் நிறைய செய்திகள் சேர்ந்து விட்டன. நானும் எழுத வேண்டும்தான் பார்க்கிறேன். நேரம் அமையவில்லை. ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம்தான் என்கிறார்கள். அரசியல்வாதிகள் பார்த்து அதை இருபத்தைந்தோ, இருபத்தாறோ ஆக்கலாம். அவர்கள் வாக்களிக்கும் வயதை பதினெட்டிலிருந்து பதினாறாக ஆக்கப் பார்ப்பார்கள். ஒரு நாளின் நேரத்தை உயர்த்த பார்க்க மாட்டார்கள். உயர்த்தி அவர்களுக்கு என்ன ஆகப் போகிறது?

            சரி செய்திகளுக்கு வந்து விடுவோம். எல்லாரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருக்கும் போது நான் மட்டும் பெட்ரோல் ஸ்கூட்டரில் போக முடியவில்லை. எல்லாரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பெட்ரோல் ஸ்கூட்டரில் போய் நான் அதிகப் புகையைக் கக்குவதாகவும் குறைபட்டுக் கொள்கிறார்கள். என்னால் சுற்றுச்சூழலுக்கு அபாயம் நேர்ந்து விடுமோ என்று அளவுக்கதிகமாகப் பயப்படுகிறார்கள். நான் என்ன செய்வது? எலக்ரிக் ஸ்கூட்டர்கள் வெடிப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதனால் தற்போதைக்கு அதை வாங்குவதற்கு ஹவுஸ் ஓனருக்கு மட்டும் பரிந்துரைக்கிறேன். அவரின் ஸ்கூட்டர் அவர் பயணிக்கும் போது வெடிக்காமல் இருப்பதைப் பொருத்து நான்கைந்து வருடங்களில் நானும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன்.

            சமீபத்தில் பார்த்ததில் டாணாக்காரன் ஈர்ப்பான படம். போலீஸ்கால பயிற்சியைப் பற்றிய படம். போலீஸ்காரர்களுக்கு அப்படி பயிற்சி அளித்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இது போன்ற படங்களைத் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய வேண்டும். பார்க்க மாட்டார்கள் என்றுதான் ஓடிடியில் ரிலீஸ் செய்கிறார்களோ என்னவோ. தியேட்டர்களுக்கு ஏற்ற படங்கள் என்றால் சாமி, சிங்கம் போன்ற படங்கள்தான் போலும். அதுவும் வரிசை கட்டி பார்ட் ஒன், பார்ட் டூ எடுத்தெல்லாம் ரிலீஸ் செய்கிறார்கள்.

            கோயிலுக்கு வேண்டிக் கொள்பவர்களைப் பாருங்கள். எவ்வளவு பெரிய அலகுகளை எடுத்து எவ்வளவு அசால்டாகக் குத்திக் கொள்கிறார்கள். அதைப் பார்க்கின்ற நமக்குப் பயமாக இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன ஊசிதான். கொரோனா ஊசி என்றால் அவ்வளவு பயப்பட்டு எவ்வளவு டேக்கா கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கொடுக்கிறார்கள். சாமிக்கு வேண்டிக் கொள்வதில் கொரோனா ஊசிக் குத்திக் கொள்வதையும் சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும். கோயில் நிர்வாகங்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

            இப்போதெல்லாம் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றைக் கட்டிக் கொண்டு நடைபயிற்சி செய்கிறார்கள். எவ்வளவு நடந்தோம், எத்தனை அடி எடுத்து வைத்தோம், எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கும் என்பதையெல்லாம் துல்லியமாகக் கணக்குப் போட்டுச் சொல்லி விடுகிறது. இந்த ஸ்மார்ட்டை ஏமாற்றுவதென்றாலும் ஏமாற்றலாம். பைக்கில் ஏறிக் கொண்டு சென்றாலும் மேற்படி கணக்கு அத்தனையையும் காட்டுகிறது. சரியான ஏமாளி வாட்ச்.

            இன்னும் கொஞ்சம் செய்திகள் இருக்கின்றன. நான்தான் முன்பே சொன்னேனே, எழுத நிறைய இருக்கிறதென்று. அதிகமாக எழுதினால் படிக்க மாட்டீர்கள் என்பதால் அது இன்னொரு பத்தியில்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...