இலங்கையின் பொருளாதார நெருக்கடி தரும் பாடங்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி. வாராதா பின்னே? இருக்கிற காசையெல்லாம்
ஆயுதம் வாங்கி அழித்தால் அப்படித்தான். தீபாவளிக்குப் பட்டாசு வாங்கி வெடிப்பது போல
வெடித்துத் தள்ளினார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களைப் பிடிக்க அவர்கள் காட்டும் அக்கறை இருக்கிறதே.
அதில் கொஞ்சம் பொருளாதாரத்தில் காட்டியிருந்திருக்கலாம். என்னவோ தமிழர்களைப் பெரிய
எதிரிகள் போல நினைத்தார்கள் சிங்கள மக்கள். இப்போது புரிந்திருக்கும் அவர்களுக்கு,
அவர்களின் மக்கள்தான் அவர்களின் எதிரிகள் என்று.
தமிழர்களை அழித்தொழிப்பதை அவர்கள் ஆசை ஆசையாகச் செய்தார்கள்
என்பதை அவர்களால் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது. புத்தர் என்ன சொல்கிறார் என்றால்,
ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்கிறார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பெரிய தீர்வுகளை எல்லாம்
யோசிக்க வேண்டியதில்லை. சிங்கள மக்கள் எல்லாருடனும் அனுசரித்து எல்லாரையும் மரியாதையுடனும்
மதிப்புடனும் நடத்தினால் போதும். தானாகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடி சரியாகி விடும்.
பல இனங்கள் வாழும் நாட்டில் எல்லா இனங்களோடும் இணக்கமாகவும்
ஒற்றுமையாகவும் இருப்பதுதான் நாட்டின் அமைதிக்கும் செழிப்புக்கும் வழி வகுக்கும்.
இலங்கைக்கு நேர்ந்துள்ள பின்னடைவிலிருந்து இந்தியாவும் படித்துக்
கொள்ள நிறைய பாடங்கள் இருக்கின்றன. இந்தியா என்பது ஒரு மதத்தின் நாடல்ல. அது பன்மைத்தன்மையைப்
போற்றும் மதங்கள் நிரம்பிய நாடு. பல இனங்களின் அருங்காட்சியகம் என்றுதான் இந்தியாவை
உலகம் பெருமையுடன் குறிப்பிடுகிறது. அந்தப் பெருமைதான் உலகமே பொருளாதார நெருக்கடியில்
அல்லாடும் போது இந்தியாவை மட்டும் தனித்துவமாக இருந்து காத்து நிற்கிறது.
யாரையும் எந்த இனத்தையும் பயமுறுத்தி அடிபணியச் செய்து ஒரு நாடோ,
ஒரு சமூகமோ நீண்ட காலத்துக்குச் சுபிட்சமாக இருந்த விட முடியாது என்பதற்கு இலங்கை ஒரு
நல்ல உதாரணமாகியிருக்கிறது உலகத்துக்கு.
*****
No comments:
Post a Comment