9 May 2022

தமிழ்ப்படங்களும் தீவிரவாதிகளும்

தமிழ்ப்படங்களும் தீவிரவாதிகளும்

            சமீப நாட்களாக ‘ரா’ எனும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சார்ந்த படங்கள் அதிகம் வெளிவருவதைப் பார்க்கிறேன். நான் சின்ன பிள்ளையாக இருந்த போது இவர்களை ரகசிய போலீஸ்கள் என்று சொன்னதாக ஞாபகம். எம்.ஜி.ஆர். அப்படி ஒரு படம் நடித்திருக்கிறார். ‘ரகசிய போலீஸ் 115’ என்று நினைக்கிறேன். 

            எம்.ஜி.ஆர். அப்படி என்றால் சிவாஜி கணேசன் சரோஜா தேவியை ரகசிய போலீஸாக வைத்து புதிய பறவை படத்தில் நடித்தார். அவர்கள் எதிரெதிர் துருவங்களாக இருந்த நடிகர்களாக இருந்ததால் அப்படி நடித்திருக்கலாம்.

            ராவாக ‘ரா’ வை மையமாகக் கொண்டு ‘ரா’ வைச் சார்ந்த அதிகாரியாக விக்ரம் நடித்த தாண்டவம் படம்தான் ‘ரா’ தொடர்பாக நான் பார்த்த முதல் படம். அதில் அவர் கண்பார்வையற்றவராகவும் நடித்திருப்பார். ஏற்கனவே காசி என்ற படத்தில் கண்பார்வையற்றவராக நடித்த அனுபவத்தால் அந்த படத்தில் நடிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போலாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

            ஹாலிவுட்டில் இப்படிப்பட்ட படங்கள் நிறைய உண்டு. அவர்கள் எப்.பி.ஐ.யை மையமாகக் கொண்டவர்கள். ஜேம்ஸ் பாண்ட் பிரிட்டிஷ் உளவுத்துறையை மையமாகக் கொண்டவர். நாம் இந்தியர்கள். எனவே ‘ரா’ வை மையமாக எடுத்துக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டின் சிபிசிஐடியை மையமாகக் கொண்டு ஒரு தமிழ்ப்படம் வருவதை விரைவில் எதிர்பார்க்கலாம்.

            விஜயின் பீஸ்ட் படம் ‘ரா’ வகையைச் சார்ந்த படம். படத்தில் வில்லன் முதற்கொண்டு சகலரும் விஜயின் புகழ் பாடுவார்கள். ‘ரா’வைச் சார்ந்த அதிகாரிகள் இப்படி புகழ் தெரிய இருக்க முடியுமா என்ன? விஜய் ‘ரா’ அதிகாரி என்றால் அப்படித்தான்.

            விஜய் ‘ரா’ அதிகாரியாக இருப்பதால் சண்டையோடு நன்றாக டான்சும் ஆடுகிறார். மிலிட்டரிகள் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விஜய் துப்பாக்கி என்ற படத்தில் மிலிட்டரியைப் பயன்படுத்தியிருக்கிறார்.

            அப்புறம் தீவிரவாதிகள். அவர்கள் இல்லையென்றால் தமிழின் பெரும்பாலான ஆக்சன் படங்கள் இல்லை. இந்தத் தீவிரவாதிகளை ரொம்ப காலம் விஜயகாந்த்தான் திறம்பட பயன்படுத்திக் கொண்டிருந்தார். நடிகர் அர்ஜூனும் பயன்படுத்தியிருக்கிறார். அவர் இதில் எக்ஸ்பர்ட். தீவிரவாதிகளை அடிஅடியென்று அடித்தே ஆக்சன் கிங் என்ற பட்டம் பெற்றவர். அஜித்தும் பயன்படுத்தியிருக்கிறார். தீவிரவாதிகளைப் பயங்கரமாக வேட்டையாடியவர்களில் பட்டியலில் அவரும் இருக்கிறார்.

            மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மையமே இந்தத் தீவிரவாதிகள்தான். தீவிரவாதிகள் கடத்தல் இல்லையென்றால் ரோஜா என்ற படமே இல்லை. ஆனால் மணிரத்னம் தீவிரவாதிகளை வைத்து ஆக்சன் கோதாவில் இறங்காமல் போனது சோகம். படத்தில் சில துப்பாக்கி சூடுகள், சில குண்டு வெடிப்புகள். அவ்வளவுதான் அவர் தீவிரவாதிகளைப் பயன்படுத்திக் கொண்டது.

            சூப்பர் ஸ்டாரின் கண்களில் இருந்துதான் இந்த தீவிரவாதிகள் தப்பிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவரும் இந்தத் தீவிரவாதிகளைப் பதம் பார்த்தால்தான் அவர்கள் சரிபட்டு வருவார்கள்.

            நீங்கள் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதிகள் இருக்கும் வரை தமிழ்ப்பட ஹீரோக்கள் இருப்பார்கள். தீவிரவாதிகளை அழித்துக் கொண்டே இருப்பார்கள். நமக்கும் நிறைய தமிழ்ப்படங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...