எங்கள் ஊரின் ஜென் மாஸ்டர்
நேற்றைய இலக்கை இன்றுதான் அடைந்திருக்கிறேன். அவ்வளவு வேலைகள்.
சில வேலைகள் நான் இல்லாமல் நடப்பதில்லை. உதாரணமாக நான்தான் டீ கடைக்குச் செல்ல வேண்டும்.
டீ வாங்கி வர வேண்டும். டீ கப்பில் ஊற்றிக் கொடுக்க வேண்டும். குடித்த கப்பைப் பொறுக்கிக்
குப்பைத் தொட்டியில் போட வேண்டும். டீயை வயிற்றுக்குள் ஊற்றிக் கொள்பவர்கள் டீ கப்பை
வெளியே வீசி எறிந்து விடுவார்கள். நம் முன்னோர்கள் முருங்கைக்காயை அப்படி தின்றிருக்கிறார்கள்.
அந்த மரபின் எச்சம்தான் இது.
இது எவ்வளவு பெரிய வேலை என்பது அவஸ்தை பட்டவர்களுக்குத்தான்
தெரியும். முதலில் டீ மாஸ்டர் நமக்குத் தெரிந்தவராக இருக்க வேண்டும். நமக்குத் தெரிவதற்குள்
வேறு டீ மாஸ்டர் வந்து விடுவார்.
எந்த டீ மாஸ்டர் என்றாலும் கிளாஸில் கப்பில் டீ கேட்பவர்களுக்குத்தான்
முன்னுரிமை கொடுப்பார். பார்சல் டீ என்றால் மதிக்க மாட்டார்கள். பார்சல் டீ என்ற பெயரில்
நாம் கூடுதல் அளவில் டீயை வாங்கிச் செல்கிறோம் என்ற நினைப்பு அவர்களுக்கு.
கொஞ்சம் காக்க வைப்பார்கள். கால் கடுக்கிறதென்றால் ஓரமாகப் போய்
உட்கார் என்பார்கள். இவ்வளவையும் அவர்கள் டீயை ஆற்றிக் கொண்டே நம்மையும் கவனித்துக்
கொண்டே சொல்வார்கள். அது ஒரு யோக சித்திதான். எனக்கெல்லாம் பேசிக் கொண்டு ஆற்றினால்
ஆற்றிய டீயை ப்ளோர்தான் குடித்துக் கொண்டிருக்கும். அந்த யோக சித்திக்காரரைக் கோபித்துக்
கொள்ள முடியுமா? அவர் சொல்கிற வரை உட்கார்ந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு யோக சித்தியை
வளர்ப்பதற்காக கூட இருக்கலாம்.
மாஸ்டர் உங்களை சும்மா விட்டு விட மாட்டார். கவனித்துக் கொண்டே
இருப்பார். அந்தத் தினத்தந்தி பேப்பரை எடுத்து நாலு வாக்கியங்கள் படியேன் என்பார்.
அந்த தினத்தந்தி தாள் எந்த நாளின் பேப்பர் என்பதைப் பார்த்துதான் படிக்க வேண்டும்.
ஆதித்தனார் காலத்தில் வந்த தினத்தந்தி பேப்பரும் இருக்கும். அவ்வளவு பாதுகாப்பாகத்
தினத்தந்தி பேப்பரைப் பாதுகாப்பார்கள்.
நான் அப்படி ஒரு முறை எம்.ஜி.ஆர். காலத்துப் பேப்பரைப் படித்திருக்கிறேன்.
கால ஓட்டம் எம்.ஜி.ஆர்., இறந்து கலைஞர் இறந்து, ஜெயலலிதா இறந்து எம்.ஜி.ஆர். தூக்கி
வளர்த்தப் பிள்ளைகள் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொடுப்போம் என்று சொல்கிற காலத்தில் எம்.ஜி.ஆர்.
காலத்துப் பேப்பரைப் படிப்பதில் சில சாதகங்கள் இருக்கின்றன. டீ வாங்கி வரச் சொன்னவர்கள்
அந்தச் சாதகங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமே.அவர்களுக்கு எல்லாவற்றிலுமே அவசரம்தான்.
மாஸ்டர் என்னையும் வெளியையும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்.
கூட்டம் குறைகிறது என்று தெரிந்தால் கொண்டா ப்ளாஸ்கை என்பார். அப்பாடா விடிமோட்சம்
வந்து விட்டது என்று மின்னல் வேகத்தில் ப்ளாஸ்க் அவர் கைக்குப் போக வேண்டும்.
கொஞ்சம் தாதமம் ஆனாலும் ‘மாஸ்டர் ஒரு டீ’ என்று வரும் குரலுக்கு
டீ போட ஆரம்பித்து விடுவார்.
ப்ளாஸ்க் போச்சா. கிளாஸ் கழுவி ஊத்திய தண்ணீரை உள்ளுக்குள் விட்டு
ஒரு கழுவு கழுவுவார். பிறகு வெந்நீரை ஆறு மில்லிகள் உள்ளே விட்டு வெளியே கொப்புளிக்க
செய்வார். ஹைஜினிக்கிற்காக. இந்தக் கொரோனா காலத்தில் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது
என்று அலுத்துக் கொள்வார். இருந்தாலும் பாதுகாப்பு நெறிமுறைகளை அலட்சியம் செய்ய முடியாதுல்ல
என்பார்.
சீனியைக் கொட்டி, பாலைக் கொஞ்சம் ஊற்றி, டிக்காஷனை நிறைய ஊற்றினால்
அவ்வளவுதான் டீ. இதற்கு எதற்கு மாஸ்டர்? அவர்தானே பாய்லரின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கவோ
நின்றிருக்கவோ முடியும். நாள் முழுக்க அந்தக் கொதிப்பைத் தாங்குவதால்தான் அவர் மாஸ்டர்.
நான் டீ மாஸ்டரிடம் ஒரு ஜென் மாஸ்டரைப் பார்க்கிறேன். இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள்
இருக்கின்றன. ஒரு நொடியில் ஞானமடையச் செய்து விடுவார்கள்.
டீ மாஸ்டர் என்றாலும் அவர் போட்ட டீயை அவர் குடிக்க மாட்டார்.
ஞானமடைந்ததின் தேர்வு நிலை அது. வெற்றிலைப் பாக்கை மட்டும் போட்டு புளிச் புளிச் என்று
துப்பிக் கொண்டிருப்பார். சமயத்தில் நீங்கள் குடிக்கப் போகும் டீகப்பிலும் ரெண்டு புளிச்கள்
போட்டுக் கொடுப்பார். அவ்வளவு ஞானம்.
நான்தான் ப்ளாஸ்கின் மூடியை மூடிக் கொள்ள வேண்டும். சீனி கரையும்
அளவுக்கு ப்ளாஸ்க்கைக் குலுக்கிக் கொள்ள வேண்டும். அல்லது டீயை ஆற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்த முறையும் ஞானமடைதலுக்காக நான் மாஸ்டரைத் தேடிப் போவேன்.
டீ வாங்கி வருவதற்காகவும்தான்.
*****
No comments:
Post a Comment