18 May 2022

கொசுக்களைப் பாடுவோம்! பாடியபடி ஆடுவோம்!

கொசுக்களைப் பாடுவோம்! பாடியபடி ஆடுவோம்!

            எறும்பைப் பற்றி ஏற்கனவே எழுதியிருப்பதால் கொசுக்களைப் பற்றி எழுத விழைகிறேன். கொசுக்கள் எனக்குப் பிடித்தமான பறவைகள் என்பதா? பூச்சிகள் என்பதா? பூச்சிகள் என்றால் பறக்கும் சிறு பறவைகள். பறவைகள் என்றால் பறத்தலின் ஆசிர்வாதம் பெற்ற பூச்சிகள்.

            கொசுக்களிடம் எனக்குப் பிடித்த விசயம். அதை யாரும் வளர்க்க வேண்டியதில்லை. கோழிகளை வளர்ப்பதைப்போல, பிராய்லர்களை வளர்ப்பதைப் போல. அதுவாக வளர்ந்து கொள்கிறது. ஒரு கோழியை, பிராய்லரை வளர்ப்பதற்கு நாம் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் கொசுக்களைப் பொருத்த வரை அழிப்பதற்குதான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

            மனிதன் சிங்கம், புலி, பாம்பு என்று எவ்வளவுக்கோ பயந்து வெளியில் விரட்டி விட்டான். இந்தக் கொசுவிற்குப் பயந்துதான் கொசுவலைக்குள் படுத்துக் கொண்டிருக்கிறான்.

            ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கக் கூடிய வீர தீர சாகச கதைகளை இந்த நேரத்தில் மறந்து விடக் கூடாது. யானைக்கு அடி சறுக்காமலா இருக்கும்? வீரனுக்கும் சில பின்னடைவுகள் வரும். சில ராஜதந்திர உபாயங்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட உபாயம்தான் மனிதன் கொசுக்களிடம் பிரயோகிப்பது.

            சிலர் யோசிக்காமல் கொசுக்களை அடித்து விடுவார்கள். எல்லாரும் சட்டத்தைக் கையில் எடுப்பது போன்றது அது என்று கூட சொல்ல முடியாது. ஏனென்றால் அது வன்முறையைக் கையில் எடுப்பது போன்றது. வன்முறை என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது போலத்தான் கொசுவை அடிப்பது என்பது நம்மை அடித்துக் கொள்வதுதான். பலமாக அடித்தால் பலமாக நாம்தான் அடிபடுவோம்.

            மல்லாக்க படுத்து எச்சிலைத் துப்பினால் அது யார் மேல் படும்? அப்படித்தான் கொசு அடிப்பது.

            ஒரு கொசுவை அடித்தால் அது சும்மா இருக்குமா? நியாயம் கேட்க ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்து விடும். பிறகு ராத்தரி முழுக்க காதில் கொய்ங்தான். அதுதான் கொசுக்களின் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்.

            ஒரு மழை போதும். கொசுவே இல்லாத ஊர் கூட கொசு புழுத்த ஊராக மாறி விடும். சாக்கடைத் தண்ணீரில் நாம் மீனா வளர்க்க முடியும்? கொசுக்கள் வளர்ந்து கொள்ளும். நாம் பராமரிக்கும் சாக்கடைக்கும் ஒரு பயன் இருக்கவே செய்கிறது பாருங்கள்.

            நமது அன்பின் பிரியத்தாலும் நாம் அளிக்கும் போஷாக்காலும் தற்போதுள்ள கொசுக்கள் ஈக்கள் வடிவத்தை எட்டியிருக்கின்றன. இப்படியே நமதன்பும் போஷாக்கும் தொடர்ந்தால் வரும் காலங்களில் டைனோசர் வடிவங்களையும் எட்டும். டைனசோர் என்ற இனம் அழிந்தது என்ற பரிணாமக் குறிப்பை மாற்றி எழுத ஒரு வாய்ப்பு உண்டாகும்.

            கொசுக்களைப் பற்றி விதந்தோத நிறைய இருக்கின்றன. சின்ன கொசுதான். அது எப்படி அவ்வளவு பெரிய யானைக்காலை உருவாக்குகிறது? யானையின் காதில் ஒரு கட்டெறும்பு புகுந்து விட்டால் போதும் என்பார்களே. ஒருவேளை அப்படி இருக்குமோ?

            உங்கள் வீட்டில் புகுந்து விட்ட ஒரு கொசுவை அடிக்க உங்களுக்கு மனமில்லை என்றால் நீங்களும் என் கட்சிதான். நமதன்பின் உயிர்களாம் கொசுக்களும் உயிர்கள்தான். அவை வாழ்வதால்தான் கொசுவர்த்தி நிறுவனங்கள் வாழ்கின்றன. கொசுவலை அடித்துத் தருபவர்கள் பிழைக்கிறார்கள். டெங்கு, குன்யா, மலேரியா என்று மருந்தின் நிறுவனங்கள் உயிர் பிழைத்திருக்கின்றன.

            கொசுக்களைப் பாடுவோம். நல்ல பாடல் கிடைத்தால் காப்புரிமை செய்து கொள்வோம். கவிதையாகப் போய் விட்டால் பத்திரிகையின் பிரசுரத்திற்கு அனுப்பி வைப்போம். எனதன்பின் கொசுக்களுக்கு நாம் எல்லாரும் ஆயிரம் நமஸ்காரங்கள் சொல்வோம். கடித்து விட்டால் அன்பின் முத்தம் என்று மொழிந்து வைப்போம். கொசுக்கள் நம் பேரன்பின் உயிர்கள்.

*****

No comments:

Post a Comment

அதிர்ஷ்ட கணக்கு

அதிர்ஷ்ட கணக்கு நான் என்ன பெரிய அதிர்ஷ்டசாலி என்று நீங்கள் நினைக்கலாம் என்னைப் பற்றி நினைக்க நான்கு பேர் இருக்கிறார்கள் எனக்காகக் ...