எழுத்தாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள்
என்ன எழுதி என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்? யார் மாறப் போகிறார்கள்.
மாறுவதற்காகவா எழுதப்படுகிறது? எழுத்தாளர் என்ற பெயர் கிடைக்கிறதே. அதுவரை சாதாரண ஜந்துவாகப்
பார்க்கிறீர்கள். அதன் பின் எழுத்தாளராகப் பார்க்கிறீர்கள். அதுதான் அந்த மாற்றம்.
ஒரு சிலர் எழுதுவது சிரமமாக இருக்கிறது என்கிறார்கள். அதிலென்ன
சிரமம்? எழுதுவது என்பதென்ன? எழுத்து, சொற்கள், சொற்றொடர்கள், பத்திகள் அவ்வளவுதான்.
வெறும் எழுத்தாக ஒவ்வொரு வரியிலும் எழுதலாம். நவீன நவ கவிதை அப்படித்தான் துவங்குகிறது.
ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு சொல்லாகவும் எழுதலாம். அது ஏற்கனவே
தொடங்கி விட்ட புதுக்கவிதை மரபுதான். புதுக்கவிதையா? நவீன நவகவிதையா? என்பது உங்களது
தேர்வுதான்.
கொஞ்சம் சொற்றொடர்களுக்குப் போனால் கதை. அது சிறியதாக இருந்தால்
சிறுகதை. பெரியதாக இருந்தால் பெருங்கதை என்றும் சொல்லிக் கொள்ளலாம். அப்படிச் சொல்வார்
இல்லையே என்று கவலைப்படக் கூடாது. நாம்தான் புதிய மரபுகளை உண்டாக்க வேண்டும். எழுத்தாளரின்
வேலை அதுதானே.
பத்திகளைத் தொடர்ந்து கொண்டு போனால் நாவல். இன்னும் இன்னும்
தொடர்ந்து கொண்டே போனால்… அந்தச் சிக்கலைப் போக்குவதற்காகத்தான் குறுநாவல் என்று வடிவத்தையும்
வைத்திருக்கிறார்கள். பிரபல நாவலாசிரியர்களின் தொடர்புகளை நீங்கள் பராமரித்து வைத்திருக்க
வேண்டும். அப்போதுதான் நீங்கள் எழுதுவது குறுநாவலா? அல்லது நாவலா? என்ற சந்தேகத்தைப்
போக்கிக் கொள்ள முடியும்.
ஆரம்ப கட்டத்தில் நாவல் எழுதுவதில் சில பிரச்சனைகள் இருக்கக்
கூடும். எழுதுவது குறுநாவலா? நாவலா? என்பது போன்ற சிக்கல்கள் அந்த வகையறாதான். முதலில்
ஏதோ ஒரு வடிவம் வெளிவந்து விடட்டும். பிறகு வாசிப்பவர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்.
நிறைய பேர் வாசித்து விட்டால் சத்தியமாக அது குறுநாவலேதான். சந்தேகம் வேண்டியதில்லை.
வாசிப்போர் குறைவு என்றால் அது நாவல். நாவலை எல்லாரும் வாசித்து விட முடியாது.
வாட்ஸாப்பில் ‘ரீட் மோர்’ என்று இருந்தால் அந்த செய்தியை நாம்
தவிர்த்து விடுவது இல்லையா? அப்படித்தான் நாவலை அதிலுள்ள வரிகள், பத்திகள், பக்கங்களைக்
கருத்தில் கொண்டு தவிர்த்து விட நினைக்கக் கூடிய வாசகர்கள் இருக்கிறார்கள். அது அவர்களின்
உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. அவர்களிடம் அவ்வபோது தொடர்பு கொண்டு அவர்கள் படிக்கக்
கூடிய எண்ணிக்கையில் பக்கங்களைக் கொண்ட நாவலை எழுதுவது கூட சரியான அணுகுமுறைதான்.
எழுத முடியவில்லையே என்று எப்போதும் நினைத்து விடக் கூடாது.
எழுத முடியாத போதெல்லாம் தாளின் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றுகிற வாக்கியங்களை எழுதுங்கள்.
இப்படி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே செல்லுங்கள். பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
இடையிடையே நிரப்பிக் கொண்டே வாருங்கள். முன்பு எழுதிய வாக்கியங்களுக்கும் தற்போது எழுதப்
போகும் வாக்கியங்களுக்கும் கொஞ்சம் தொடர்பு இருந்தால் கூட போதுமானதுதான். தொடர்பு இல்லையென்றாலும்
நல்லதுதான். நவீன நாவல்கள் அப்படித்தான் எழுதப்படுகின்றன.
அப்புறம் நிறைய படித்தால் எல்லாம் நிறைய எழுத முடியாது. நிறைய
எழுதினால்தான் நிறைய எழுத முடியும். இதுதான் ரகசியம். இதைப் பின்பற்றிப் பாருங்கள்.
நீங்களும் எழுத்தாளர்தான். வேறு ஆலோசனைகள் தேவை என்றால் தனியே மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
கருத்துப் பெட்டியில் கருத்துகள் கேட்பதைத் தவிருங்கள். அது உங்களது தனித்தன்மையைப்
பாதித்து விடக் கூடும்.
*****
No comments:
Post a Comment