சிலந்தி மனிதரைச் சந்திக்க விண்ணப்பிக்கிறேன்
சிலந்தியைப் பற்றி கேள்விபட்ட நாளிலிருந்து அதை வியந்து கொண்டு
வருகிறேன். இரண்டு கால்கள் மனிதர்களுக்கு. நான்கு கால்கள் மிருகங்களுக்கு. சிலந்திக்குப்
பாருங்கள் எட்டுக் கால்கள். சிலந்தியை எப்படி வியக்காமல் இருக்க முடியும் சொல்லுங்கள்.
மரவட்டைக்கு சிலந்தியை விட அதிக கால்கள் இருக்கலாம். எண்ணிப்
பார்த்து தோற்றதுதான் மிச்சம். கொசகொசவென்று அவ்வளவு கால்கள். எங்கே எண்ணி எங்கே முடிப்பது. யாராவது எண்ணியிருந்தால்
சொல்லுங்கள். எதாவது அறிவியல் புத்தகத்தில் தகவல் இருந்தாலும் யோசிக்காமல் தகவல் தாருங்கள்.
அது அவசர அவசியம். மரவட்டை குறித்த புதிய இலக்கிய சிந்தனைக்குக் கூட அது வித்திடலாம்.
அதற்கான வாய்ப்பு நீங்கள் தகவல் தராததால் அல்லது தகவல் கிடைக்காமையால் தடைபட்டு விடக்
கூடாது பாருங்கள்.
ஸ்பைடர்மேன் பார்த்த பிறகு சிலந்திகள் மேல் தனி மரியாதையே வந்து
விட்டது. என்னையும் அப்படி ஒரு சிலந்தி கடித்து நானும் ஸ்பைடர்மேன் ஆக மாட்டேனா என்ற
ஏக்கம் பல இரவுகளைத் தூங்க விடாமல் செய்தது. கடைசியில் சிலந்தி கடித்த போது தோல் தடித்துப்
போனது தவிர ஸ்பைடர் மேன் ஆகவே முடியவில்லை. சிலந்திகள் என்னை ஏமாற்றி விட்டன.
ஏமாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு நானாக சிலந்திகளிடம் சென்று
பலமுறை கடி வாங்கிப் பார்த்தேன். எதாவது ஒரு கடியில் ஸ்பைடர்மேனாகி விடலாம் என்ற நம்பிக்கை
மனதை அப்படி கவ்விக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஒவ்வொரு கடியிலும் ஏமாற்றம்தான். சிலந்திகள்
என்னை ஏமாற்றிக் கொண்டே இருந்தன. தடிப்பும் அரிப்பும் ஆற டாக்டருக்கு வருமானம் பெருகிக்
கொண்டிருந்தது.
ஸ்பைடர்மேனைப் பார்த்து அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்வது என்று
முடிவெடுத்து அமெரிக்கப் பயணத்தைத் தொடங்குவதென முடிவு செய்திருந்தேன். விசா, பாஸ்போர்ட்
எல்லாம் தயாராகிய வேளையில் அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலால் என்னால் செல்ல
முடியாமல் போய் விட்டது.
அதுவுமில்லாமல் ஸ்பைடர்மேன் மேல் எனக்கிருந்த மரியாதையும் போய்
விட்டது. அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல் நடந்த போது ஸ்பைடர்மேன் எங்கே போயிருந்தார்?
அவ்வளவு பெரிய தாக்குதல் நடக்கும் போது அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதை விட அவருக்கு
என்ன வேலை? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எனக்குள். தாக்குதல் நடந்து முடிந்த பிறகாவது
அவர் ஏதாவது செய்திருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் அவர் இன்னொரு படத்தில் நடிக்கப்
போய் விட்டார். அந்தச் செயல் அவர் மீது என் கோபத்தை அதிகரித்து விட்டது.
பிறகு என்னை எந்த சிலந்தியும் கடித்து விடக் கூடாது என்பதில்
உறுதியாக இருந்தேன். சிலந்தியைப் பார்க்கும் போது ஓடி விடு என்று மிரட்டவும் செய்தேன்.
நானொன்றும் நீ கடித்து ஒன்றுக்கும் உதவாத ஸ்பைடர்மேன் ஆக விரும்பவில்லை என்பதை அதன்
காது படவே உரக்க கத்த தொடங்கினேன். சிலந்திகள் என்ன நினைத்துக் கொள்ளும் என்ற இங்கிதம்
எல்லாம் அப்போது எனக்கு இல்லை.
இராபர்ட் ப்ரூஸ் சிலந்தி கட்டிய வலையைப் பார்த்து தன்னம்பிக்கை
பெற்ற கதையைக் கேட்ட போது சிலந்திகளின் மீதான மரியாதையை முழுவதாகக் கைவிடுவது நல்லதில்லை
என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் இந்த சிலந்திகளின் தன்னம்பிக்கை இருக்கிறதே. ஆரம்பத்தில்
தன்னம்பிக்கையாகத் தெரிந்தது இப்போது சிலந்திகளின் அதீத தன்னம்பிக்கையாகத் தெரிகிறது.
நீங்களே சொல்லுங்கள் இந்தச் சிலந்திகள் நல்ல வீடு, பாழடைந்த
வீடு என்ற கணக்கில்லாமல் எல்லா வீடுகளில் வலைகளைக் கட்டித் தள்ளுகின்றன. நாம் கஷ்டப்பட்டு
வீடு கட்டினால் இந்தச் சிலந்திகள் ரொம்ப சுலபமாக தனக்கான வீடுகளைக் கட்டிக் கொள்கின்றன.
சிலந்திகளால் ஒவ்வொரு மாதமும் ஸ்பைடர்மேன் போல் பறந்து பறந்து
வீட்டை ஒட்டடை அடிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு சிந்தனை தோன்றியதும் ஸ்பைடர்மேன்
மீதிருந்த கோபம் கொஞ்சம் குறைந்து போனது. இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த நேரத்தில்
ஸ்பைடர்மேன் வீட்டை ஒட்டடைக் கூட அடித்துக் கொண்டு இருந்திருக்கலாம். அவர் மேல் கோபம்
கொள்ள நியாயம் இல்லை என்பது புரிந்தது.
சாரி ஸ்பைடர்மேன்! உங்களைத் தவறாக நினைத்து விட்டேன். அமெரிக்க
வந்தால் உங்களைச் சந்திக்கிறேன். இந்த முறை அமெரிக்கப் பயணத்தைக் கொரோனா தடுத்து நிறுத்தி
விட்டது. ஆனால் நாம் சந்திக்காமலா போய் விடுகிறோம். நீங்கள் நான்கு வலைகளை அங்கும்
இங்கும் குறிப்பாக அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு ஒன்று, அங்கிருந்து துபாய்க்கு
ஒன்று, அங்கிருந்து மும்பைக்கு ஒன்று, மும்பையிலிருந்து சென்னைக்கு ஒன்று வீசினால்
இந்தியாவில் நானிருக்கும் இடத்துக்கு வந்து விடலாம்.
இந்தியாவில் நானிருக்கும் இடத்துக்கு வந்து விட்டால் நாம் சந்தித்து
விடலாம். சீக்கிரம் ஏற்பாடு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நாம் பேச நிறைய இருக்கிறது
ஸ்பைடர்மேன். உங்கள் போன் நம்பர், இமெயில் ஐடி இருந்தாலும் தெரிவியுங்கள். கூகுள் மேப்பில்
லோகேஷனை ஷேர் செய்ய தயாராக இருக்கிறேன்.
*****
No comments:
Post a Comment