தோன்ற மறுப்பவள்
எல்லாரும் பார்ப்பது தெரியாமல்
பார்த்திருந்தனர்
ஆளாளுக்கு வழிந்தபடி பேசியிருந்தனர்
ரகசியமாய் ஒவ்வொருவரும் காதல்
சொல்லியிருந்தனர்
காண்பவர் மனதெங்கும் கவிதைப்
பூத்திருந்தது
அழகு தேவதை அவளென
சுவர் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன
காரணம் விளங்காத ஒரு நள்ளிரவில்
பதின்மூன்றாவது மாடியினின்று
குதித்த பின்
சலக் சலக் சத்தத்தோடு
அவ்வபோது நடந்து வரத் தொடங்கினாள்
தனிமையில் நிற்போரின் கன்னம்
வருடி
பீதியில் ஓட விட ஆரம்பித்தாள்
கால்களில்லாத உடலில் ஆடையுடுத்தி
ரசிக்கச் சொல்லி மிரட்டல்
விடுத்தாள்
அவளுக்கென அனுப்ப வைத்திருந்த
அத்தனை செய்திகளையும் அழித்த
பின்னும்
அலைபேசியில் அழைத்து பயம்
காட்டினாள்
சந்தோசமாய்ச் சீட்டியடித்துக்
கொண்டிருக்கும் பொழுதுகளில்
கழுத்தை நெரித்து மூச்சைத்
திணறச் செய்தாள்
என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்
என்று
பார்த்தால் கேட்க வேண்டுமென
நினைத்திருப்போர்
கண்களுக்கு மட்டும் ஏனோ
இன்னும் தோன்ற மறுக்கிறாள்
அழகு தேவதையாய் இருந்து
அச்சுறுத்தும் பிசாசாகிவிட்ட
அவள்
*****
No comments:
Post a Comment