17 May 2022

கொஞ்சுவதற்குக் கொஞ்சம் நேரமிருந்தால் கொடு

கொஞ்சுவதற்குக் கொஞ்சம் நேரமிருந்தால் கொடு

            உன்னைக் கொஞ்சவில்லை என்று வருந்துகிறாய். எங்கே நேரம் இருக்கிறது சொல். ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரங்கள். அந்த நேரத்திற்குள்ளே கெஞ்சுவதும் கொஞ்சுவதும் என்றால் சாத்தியமா?

            ஞாயிற்றுக்கிழமை கொஞ்சலாம் என்றால் கறி சமைக்கப் போய் விடுகிறாய். மதியம் கொஞ்சம் நேரம் கிடைக்கும் என்று பார்த்தால் கறிசோறு சாப்பிட்டு விட்டால் தூக்கம்தான் என்கிறாய்.

            பெண்களைக் கொஞ்சத்தான் வேண்டும். அதற்காகத்தான் ஆண்கள். அலைபேசியில் பேச கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது கொஞ்சலாம் என்றால் வாங்கி வரச் சொன்னதை மறக்காமல் வாங்கி வந்து சேர் என்கிறாய். நடுத்தெருவில் நான் கொஞ்சும் மூடுக்கு வந்தாலும் அந்த மூடு போய் விடுகிறது.

            சரிதான் போ. லீவு அடித்து விட்டு ஊட்டி, கொடைக்கானல் பறப்போம் என்றால் நீயோ வலசை போகும் பறவையைப் போல உன் மாமா, மாமி, அம்மாமி, அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா என்று பிரயாணத் திட்டம் செய்கிறாய்.

            இப்போது குழந்தைகள் ஆகி விட்டன. நான் கொஞ்சவில்லை என்று வருந்துகிறாய். குழந்தைகளைக் கொஞ்சுவது போல நான் உன்னைத்தான் கொஞ்சுகிறேன். இது பிறிது மொழிதல் அணி போன்றது. அது என்ன அணி என்கிறாயா? பத்தாம் வகுப்பில் படித்தது. கொஞ்சம் மறந்து போய் விட்டது. ஆனாலும் அது பிறிது மொழிதல் அணி போன்றதுதான் என்றால் அது உவமை அணி ஆகி விடாதா? அப்படியும் ஆகலாம். இப்படியும் ஆகலாம்.

            பார்த்தாயா கொஞ்ச வந்ததை மறந்து விட்டு எங்கேயோ போய் விட்டேன். ஆண்களின் உலகம் அப்படித்தான் இருக்கிறது.

            காலை எழுந்ததும் பத்து முறை உன்னைக் கொஞ்சத்தான் பிறவி எடுத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கிறேன். அந்த நேரத்தில் உன்னைக் கொஞ்சலாம் என்று பார்த்தால் அப்போதுதான் ஈயென்று இளித்துக் கொண்டு குளோசப் பேஸ்டில் பல் துலக்கிக் கொண்டிருக்கிறாய்.

            சாப்பிடும் நேரத்தில் கொஞ்சலாம் என்றால் இட்டிலி பொடிக்குக் கொஞ்சம் எண்ணெய் வாங்கிட்டு வர்றீங்களா என்கிறாய்.

            இந்தப் பிள்ளைகள் எங்கே நம்மைக் கூடவா வைத்துக் கொள்வார்கள்? நான் உன்னைக் கொஞ்சுவதில் பஞ்சம் வைத்து விட்டேன் என்று முதுமையில் தனிமையில்தான் விடுவார்கள். அப்போது கொஞ்சுவோம். நீ மெகா சீரியலில் கரையாமல் இருக்க வேண்டும்.

            மற்றபடி கொஞ்சுவதற்கு உனக்கு நேரம் கிடைக்குமானால் அப்பாய்மெண்ட் கொடு. உனக்கிருக்கும் வேலைகள் அப்படி? ஆண்களின் உலகம் போன்றா பெண்களின் உலகம்? ஒரு கடுகு தாளிப்பது என்றாலும் நீதான் தாளிக்க வேண்டும். நீ தாளிக்க நான்தான் வாங்கி வர வேண்டும். உன் தாளிப்பின் வாசத்திற்கு முன் உன்னைக் கொஞ்சுவது கூட மறந்து மெய் மறந்து விடுகிறேன்.

            எந்தத் தாளிப்பு என்பது உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரிந்த ரகசியம். அது அப்படியே இருக்க வேண்டும் பிரியசகி. இருவருக்குத் தெரிந்தால் அது ரகசியமில்லை என்பார்கள். நம் விசயத்தில் அது அப்படியல்ல என்பதை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...