17 May 2022

பண்டிகைகள் கொண்டாடவாம்!

பண்டிகைகள் கொண்டாடவாம்!

            பண்டிகைகள் கொண்டாட என்கிறார்கள். நாமும் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும். முன்னோர்கள் எந்த நோக்கத்திற்காகப் பண்டிகைகளை வைத்தார்களோ அது நிறைவேற வேண்டும்.

            நான் நினைக்கிறேன் முன்னோர்கள் காலத்தில் பண்டிகைகளைக் கொண்டாடியிருப்பார்கள் போல. அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள் எனும் போது நாம் ஏன் கொண்டாடக் கூடாது? ஆனால், அவர்களுக்கு அது மகிழ்ச்சி தந்திருக்க வேண்டும். நமக்கும் பண்டிகைகள் மகிழ்ச்சி தரும் என்று நினைத்து விட்டார்கள்.

            எனக்கு பண்டிகைகள் இல்லாத நாட்கள் ரொம்ப பிடித்திருக்கிறது. கடவுள் இந்த பண்டிகை நாட்களை எடுத்துக் கொண்டு பண்டிகை இல்லாத நாட்களைக் கொடுக்கக் கூடாதா?

            குழந்தையாக இருந்து பண்டிகைகளில் பலகாரங்களைத் தின்றதற்கு தண்டனை இப்போது மாவாட்டியோ மாவரைத்தோ பலகாரங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். முற்பகல் தின்னின் பிற்பகல் சுடும் என்பதற்கேற்ப இப்போது அந்தப் பலகாரங்களை நாம்தானே செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது ஒரு வெறுமை சூழ்ந்து கொள்கிறது. நாமே பலகாரம் செய்து அதை நாமே சாப்பிடுவது எப்படியாம்? கல்யாண சமையல்கார மாப்பிள்ளையைப் போல சமையலும் நானே, மாப்பிள்ளையும் நானே.

            இருக்கிற பண்டிகைகளில் தீபாவளி மோசமானது என்று சொல்ல முடியாது. ஆனால் அவ்வளவு மோசமானது. ஒரு வாரத்திற்கு முன்பே மைதா மாவைப் பிசைவது, முறுக்கு மாவு அரைத்து வருவது, உருண்டைகள் பிடிக்க துவங்குவது, என்னைச் சூடுபடுத்தி எண்ணெயை கொதிக்க விடுவது என்று எவ்வளவு பணிகள். பண்டிகையின் களபேரங்கள்.

            தீபாவளி இரவு முழுக்க முழுக்க விழித்து வெடி வெடிக்கவா முடிகிறது? பண்டங்களைச் சுட வேண்டியதாக இருக்கிறது. அடுப்புக் கொதிப்புக்கு மத்தியில் கேட்கும் வெடிச்சத்தங்கள்.

            பொங்கல் பரவாயில்லை. அந்த ஒரு நாளில் எல்லாம் முடிந்துவிடுகிறது. எப்போது கொஞ்சம் அரிசியைப் போட்டுப் பொங்கினாலும் காரியம் முடிந்தது. ஒரு ரெண்டு நாளைக்குச் சமையல் பிரச்சனையும் தீர்ந்தது.

            மற்ற பண்டிகைகள் நெருக்கடிகளால் ஆனவை. ஆயுதபூஜை, புது வருஷம், கோயில் திருவிழா போன்ற பண்டிகைகள் ஆள் செலவில்லாமல் ஒட்டடை அடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை. பெண்களும் ஆண்களும் சேர்ந்து வீடு கழுவுவதற்காக உருவாக்கப்பட்டவை. வடை, பாயாசம், ஐந்து கறி, ஏழு கறி என்று மறுநாள் மீந்து ஊசிப் போவதற்காகப் படைக்கப்பட்டவை.

            பண்டிகைகள் என்றால் குழந்தைகளுக்கு குஷி. லீவு விட்டு விடுகிறார்கள். நமக்கு அப்படியா? லீவு விட்டுட்டாங்க இல்லையா என்று ஆரம்பித்து நிமிர்வது சாட்சாத் அவரவர் பெண்ட்டு. பண்டிகையின் முடிவில் பெண்டு கழன்றவர்களுக்கு மெடிக்கல் லீவு கிடையாது. பண்டிகை அன்று பணி செய்யும் ஆபீஸ்களை எப்போது திறக்கப் போகிறார்களோ?           

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...