22 May 2022

கவிஞர்கள் இல்லையென்றால் நானும் நீயும் ஹோமோசேப்பியன்ஸ்

கவிஞர்கள் இல்லையென்றால் நானும் நீயும் ஹோமோசேப்பியன்ஸ்

            கவிஞர்களிடம் பிடித்த விசயம் அவர்களின் தன்னம்பிக்கைதான். பத்திரிகையில் ஒரு கவிதை வெளிவந்தால் போதும் வாங்கி வைத்திருக்கிற அத்தனை கடன்களையும் அடைத்து விடுவேன் என்பார்கள்.

            பத்து ரூபாய், இருபது ரூபாயை எல்லாம் யார் கடன் கணக்கில் வைத்திருக்கிறார்களோ அந்தக் காலத்து மொய்ப்பணம் பதினோரு ரூபாய் போல. டீக்கடைகளே கடன் கணக்கை இருநூறு முந்நூறு என உயர்த்தி வைத்திருக்கின்றன.

            பத்திரிகைகாரர்கள் அனுப்பும் பத்தையும் இருபதையும் வைத்து எந்தக் கடனை அடைப்பார்களோ கவிஞர்கள். கவிஞர்களுக்குக் கிடைப்பது பத்தும் இருபதும்தான் என்பது தெரிந்தால் கடைக்காரர்கள் கடன்களை விலக்கிக் கொள்வார்களோ என்னவோ பாவம் இந்தக் கவிஞர்கள் என்று.

            ஒரு கவிதைப் புத்தகம் வெளியிட்டு விட்டால் வீடு கட்டி கல்யாணம் பண்ணி குழந்தைக் குட்டிகளைப் பெற்று அதற்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடுவேன் என்பது கவிஞர்களின் மற்றொரு தன்னம்பிக்கை வாக்கு.

            இப்படி பத்து கவிதை புத்தகங்கள் வெளியிட்டுச் சொந்த வீட்டை விற்று விட்டு வாடகை வீட்டில் இருக்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். அதுவே இருபது என்று போயிருந்தால் வாடகை வீடும் இல்லாமல் போய் ப்ளாட்பாரமாகியிருக்குமோ என்னவோ.

            கவிஞர்கள் தன்னம்பிகையை மட்டும் இழப்பதில்லை. உச்சி மீது வானிடித்து விழுகின்ற போதிலும் அஞ்சுவதில்லை என்று பாரதியார் சுய வாக்குமூலமே தந்து விட்டுப் போயிருக்கிறார்.

            தான் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு எதையாவது எழுத்தின் மூலம் வழங்குவது ஒரு கவிஞரின் கடமை என்று ஒவ்வொரு கவிஞரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

            பூமியைப் புரட்டு, காற்றைப் பிடி, வானத்தை அள, கடலை இறைத்து ஊற்று, வானவில்லை நேராக்கி வண்ணங்களைப் பிழிந்து எடு என்று சொல்வதெல்லாம் அப்படிப் பிறப்பவை.

            சினிமாவில் ஒரு பாட்டு எழுதி விட்டால் போதும் நோபல் பரிசு கூட கிடைத்து விடும் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கும் கவிஞர்களும் தமிழ்நாட்டில் அநேகம். ஐயாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கண்ணதாசனுக்கும் அந்தக் கொடுப்பினை இல்லை. சில ஆயிரம் பாடல்கள் எழுதிய வாலியையும் நோபல் கமிட்டி இறுதி வரை பரிசீலிக்கவில்லை.

            ரவீந்திரநாத் தாகூர் ஒருவர்தான் நோபல் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதியிருந்தார். பாரதியாருக்குக் கூட ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் கிடைத்திருக்கும் என்கிறார்கள். அவர் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றே இருந்து விட்டார்.

            நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்ததிலிருந்தே ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸோடு ரிட்டர்ன் இங்கிலீஷ் கிளாசும் போய்க் கொண்டு இருக்கிறேன்.

            எப்போதாவது மனச்சோர்வு உண்டாகும் போதெல்லாம் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளைத்தான் படித்துக் கொள்கிறேன். உச்சியை எட்டுவதற்கா சிகரம் என்கிறார்கள். எங்கள் அப்பார்ட்மெண்டின் பதினெட்டாவது மாடியையே நான் இன்னும் ஏறிப் பார்க்கவிலலை. என்னிடம் தலைகுனிந்து நிற்பதற்கே மலை என்கிறார்கள். அது என்ன தப்பு செய்ததோ? தன்னம்பிக்கை எனும் கோப்பையை எடுத்தால் அதில் கடலையும் ஊற்றிக் குடித்து விடலாம் என்கிறார்கள். உப்புக் கரிக்காதோ? 

            தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் எனக்குத் தன்னம்பிக்கை ஊட்ட தவறியதில்லை. அடிக்கடி என்னை மனிதன் என்கிறார்கள். அதுவும் நீ மனிதன் நீ மனிதன் என்று நூறு எண்ணிக்கைக்காவது சொல்கிறார்கள். சரியாகத்தான்  சொல்கிறார்கள். அப்படித்தான் அடித்துச் சொல்ல வேண்டும். இந்த அறிவியல்தான் ஹோமோ சேப்பியன்ஸ் என்கிறது தன்னம்பிக்கையைக் குறைத்து விடுவது போல. கவிஞர்களின் அவசியத்தை இதை வைத்துப் புரிந்து கொள்கிறேன்.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...