7 May 2022

எனது ஹைக்கூ அனுபவங்கள்

எனது ஹைக்கூ அனுபவங்கள்

            ஹைக்கூக்கள் பற்றிய அனுபவங்கள் நிறைய தேவை என்று பலர் மின்னஞ்சல்கள் செய்திருக்கிறார்கள். இது கவிஞர்கள் அதிகம் பிரசவமாகிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. வீட்டுக்கொரு கவிஞர் போதும் என்று அரசாங்கம் கட்டுப்பாடு கொண்டு வருவதற்குள் வீட்டுக்கு நான்கைந்து ஹைக்கூ கவிஞர்களை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான் என் பேராசை.

            அரசாங்கம் கவிஞர்கள் தொகை கணக்கெடுப்பு செய்வதற்குள் அதை நிகழ்த்தி விட முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அப்படி ஒரு கணக்கெடுப்பைச் செய்ய முடியாத அளவிற்கு கோரிக்கை கடிதங்களை நூற்றுக் கணக்கில், முடிந்தால் லட்ச கணக்கில் கோடி கணக்கில் எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்துக் கொண்டிருப்பதுதான். இந்த விசயத்தில் மின்னஞ்சல்கள் கூடாது. ஒரு டெலிட் சொடுக்கில் மொத்தத்தையும் காலி செய்து விடுவார்கள்.

            விசயத்திற்கு வந்து விடுவோம். ஹைக்கூ அனுபவங்கள். அதற்காகத்தானே ஆவலாக வந்திருக்கிறீர்கள்.

            ஹைக்கூ ஐப்பானிய வடிவங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஏகப்பட்ட இந்திய ஹைக்கூக்கள் இருக்கின்றன. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி புழு, பூச்சி, நத்தை, கருவாடு, மீன், நிலா, சூரியன் குறித்த ஹைக்கூக்கள் எல்லாம் இருக்கின்றன.

            நிலா குறித்த ஹைக்கூக்கள் அதிகம் இருக்கின்றன. நிலா தேய்ந்து போனதற்கு அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதைப் பார்த்தால் நாம் ஹைக்கூ எழுத முடியுமா என்று சொல்லுங்கள். நிலாவின் தேய்மானத்தைக் குறித்த கவலை உங்களுக்கு இருந்தால் நெப்ட்யூன், புளுட்டோ, யுரேனஸ் என்று முயற்சித்துப் பாருங்கள். அது தேய்ந்தால் யாருக்கென்ன கவலை? நமக்கு நிலா முக்கியம்தான் என்பதால் அது குறித்த கவலையில் இருக்கும் நியாயத்தை நான் மறுக்கவில்லை.

            இப்போது ஹைக்கூக்கள் இந்திய வடிங்களாகி விட்டன. அது குறித்த ஏகப்பட்ட இதழ்கள் இருக்கின்றன. ஏழைதாசன் என்பவர் ஏழைதாசன் என்ற பெயரில் கொண்டு வந்த இதழ் முக்கியமானது. கவிப்பேரரசு வைரமுத்துவின் பெயரன்களின் ஒருவன் பெயர் ஹைக்கூதான். அப்படி பெயர் வைக்க எவ்வளவு வேகமும் விவேகமும் துணிச்சலும் வேண்டும். அதுதான் ஹைக்கூ. அப்படி ஒரு வேகத்தை ஒரு விவேகத்தை ஒரு துணிச்சலை ஹைக்கூ உங்களுக்குள் உருவாக்கும்.

            ஹைக்கூவை நீங்கள் எக்காரணம் கொண்டும் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. அது ஞானமடைவதற்கான வடிவம். ஞானமற்ற சூன்ய தன்மையிலும் நீங்கள் நிறைய ஹைக்கூக்களை வாசிக்க நேரிடும். அதுவும் ஞானமடைவதற்கு உதவும்.

            உங்களுக்குப் பொழுது போகாத நேரத்தில் ஹைக்கூ குறித்த ஆய்வு நூல்கள் நிறைய படிக்க வேண்டும். குறிப்பாக எனக்குப் பொழுது போகவில்லை என்றால் நான் ஹைக்கூ பக்கம்தான் ஒதுங்குகிறேன். மூன்று வரிகள்தான் ஒரு ஹைக்கூ என்பதால் ஒரு மணி நேரத்தில் முந்நூறு ஹைக்கூக்கள் படித்து விடுகிறேன்.

            தமிழில் ஈரோடு தமிழன்பன் ஹைக்கூக்களின் பல வேரியேஷன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். சென்ட்ரியூ, லிமரிக்கூ என்று பல வடிவங்களைக் கொண்டு வந்து பார்த்திருக்கிறார். நிலைத்ததென்னவோ ஹைக்கூ மட்டும்தான்.

            ஒரு ஹைக்கூ பற்றி ஒரு மணி நேரம் கூட சிந்திக்கலாம் என்பார்கள். ஒரு ஹைக்கூ எழுத பத்தாண்டுகள் எடுத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். மூன்று வரிகள் எழுத பத்தாண்டுகளா என்று கேட்காதீர்கள். அப்படியும் எழுதலாம். மூன்று நொடிகளிலும் எழுதி முடித்து விடலாம். யார் கேட்கப் போகிறார்கள் நீங்கள் எத்தனை மணி நேரத்தில் எழுதி முடித்தீர்கள் என்று? கேட்டால் மூன்று நாட்கள், மூன்று வருடங்கள் என்று மனதில் தோன்றியதைக் கூறி விட்டுப் போங்கள். யார் குறுக்கு விசாரணை செய்யப் போகிறார்கள்?

            பத்திரிகைகள் ஹைக்கூகளை எப்போதும் ஏற்கின்றன. ஒரு ஜோக் கிடைக்காவிட்டால் ஹைக்கூக்களை எடுத்துப் போட்டு விடுகின்றன. ஜோக்கைப் பிரசுரிப்பதை விட கம்மியான இடம் என்பது ஹைக்கூக்களுக்கான இடத்தை இன்னும் விட்டு விடாமல் நிரப்ப உதவியாக இருக்கிறது.

            மற்றுமொரு சௌகரியம் என்னவென்றால் நீங்கள் நூறு கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்று சொல்ல ஹைக்கூவில் முந்நூறு வரிகள் போதுமானது. ஐம்பது கவிதைகளுக்கு நூற்று ஐம்பது வரிகள் போதுமானது. பிறகு நீங்கள் உங்களை கவிஞர், கவிவேந்தர், கவிக்குரிசில், கவியரசு என்று எப்படி வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். ஆனால் எல்லாம் ஹைக்கூ தந்த பிச்சை என்பதை மறந்து விடக் கூடாது.

            ஹைக்கூக்கள் நன்றியை எதிர்பார்ப்பதில்லை என்றாலும் நாகரிகம் தெரிந்த நாம் அப்படி இருந்து விடக் கூடாது பாருங்கள். உங்களுக்கு ஒரு வாறாக ஒரு சில அனுபவங்களைச் சொல்லியிருக்கிறேன். இந்த அனுபவங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதப் பாருங்கள். உங்களுக்கு கவித்துவம் உண்டாகட்டும்.

            பப்ளிஷ் செய்ய முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்தப் பதிவின் அடியில் இருக்கும் கருத்துப்பெட்டியில் எழுதிப் போட்டாலும் அதுவும் ஒரு பப்ளிஷ்தான். பப்ளிஷ் அவ்வளவு எளிதாகி விட்ட காலத்தில் நீங்கள் ஹைக்கூ கவிஞர் ஆகாமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றால் அதில் பிழையென்ன இருக்கிறது சொல்லுங்கள்?

            உங்களுக்கு என் வாழ்த்துகள். நிறைய எழுதுங்கள். ஹைக்கூ கோபித்துக் கொள்ளாது.

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...