அந்தக் காலத்தில் தியேட்டரில் படம் பார்த்தார்கள்
அந்தக் காலத்தில் தியேட்டரில் படம் பார்த்தார்கள். இந்தக் காலத்தில்
ஓடிடியில் படம் பார்க்கிறார்கள். இந்தக் காலத்திலும் படம் பார்க்க விரும்புகிறவர்கள்
இருக்கிறார்கள். எந்நேரமும் மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்குலங்களின்
கோபத்திற்கு ஆளாகாமல் இப்போதும் படம் பார்ப்பதற்கான மார்க்கமாக தியேட்டர்களே இருக்கின்றன.
மொபைலில் படம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அது என்னவோ மறைத்து ஒளித்து பிட்டுப்
படம் பார்ப்பதைப் போல இருக்கிறது.
எனக்கு பீஸ்ட் படம் பார்க்க ஆசை. ஒரு தியேட்டரில் கூட ரிசர்வேஷன்
செய்ய முடியவில்லை. எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். டௌன்லோட் பண்ணிக்
காட்டுகிறேன் என்றார்கள். நான் மறுத்து விட்டேன். நாளை விஜய் முகத்தில் எப்படி முழிப்பேன்?
என்னைப் போன்று ஒரு சிலர் திரையரங்கில் சென்று திரைப்படம் பார்க்க
வேண்டும் என்று விரும்புகிறார்கள். டிக்கட் கிடைக்க வேண்டுமே? திரையரங்கங்கள் எல்லாம்
ரிசர்வேஷன் மயமாகி விட்டன. படம் பார்க்க விரும்புபவர்களுக்கு தனி ரிசர்வேஷன் செய்தால்
ஒழிய பார்ப்பதற்கு வாய்ப்பில்லை.
விஜய் படமென்றால் அப்படித்தான்.
தியேட்டரில் எல்லாம் பார்க்க முடியாது. நான் போஸ்டரில் மட்டும் பார்த்துக் கொள்கிறேன்.
எதாவது ஒரு பத்திரிகை வாங்கினால் திரை விமர்சனம் படித்துக் கொள்ளலாம். படம் பார்த்தது
மாதிரிதான். செலவும் சிக்கனமாகப் போய் விடுகிறது.
யாரிடமாவது கதை கேட்கலாம்
என்றால் செவிட்டில் அறைந்து விடுவார்கள். அதெல்லாம் ஒரு காலம் கதை கேட்ட காலம். இப்போது
நீயே படம் பார்த்து கதையைத் தெரிந்து கொள் என்கிறார்கள். கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன.
புரிவதற்குள் படம் முடிந்து விடுகிறது.
இதர இத்யாதிகள் என்றால் விஜய்
டான்ஸ் மற்றும் பைட்டுகளை கற்பனை செய்து கொள்ளலாம். ஒரே மாதிரிதானே சண்டை போடுகிறார்.
ஒரு அடியில் பத்து பேர் பறப்பார்கள்.
பொறுமை பலவற்றுக்கு உதவும்
விஜய் படம் பார்ப்பது உட்பட. ஒரு இரண்டு மாதம் பொறுத்துக் கொண்டால் உலகத் தொலைகாட்சிகளில்
முதன்முறையாக விஜய் வந்து விடுவார். பார்த்துக் கொள்ளலாம். விஜய் படத்தைப் பார்க்க
விடாமல் விட்டு விடுமா தொலைகாட்சிகள்?
நான் ‘பூவே உனக்காக’ முதற்கொண்டு
பார்த்த பெரும்பாலான விஜய் படங்கள் அப்படித்தான். உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாகப்
பார்த்த படங்கள். அதிலும் ‘பூவே உனக்காக’ பல தொலைகாட்சிகளில் பலமுறை முதன் முறையாக
ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.
‘தலைவா’ படம் மட்டும் விதிவிலக்கு.
அந்தப் படத்தைத் தியேட்டரில் பார்க்க எனக்கு டிக்கெட் கிடைத்தது. அந்தப் படம் சரியாகப்
போகவில்லை என்று பேசிக் கொண்டார்கள். எனக்கு டிக்கெட் கிடைத்ததிலிருந்து நானும் புரிந்து
கொண்டேன்.
‘குஷி’ படமும் தியேட்டரில்
பார்த்த படம்தான். தியேட்டர் ஸ்கிரீனுக்கு அருகில் உட்கார்ந்து பார்த்த படம் அது. கதை
ஆரம்பிப்பதற்குள் படத்தை முடித்திருப்பார்கள் அந்தப் படத்தில். டைரக்சன் எஸ்.ஜே. சூர்யா
என்றார்கள். ஏன் அவர் அப்படி செய்தார் என்பது பிறிதொரு படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக
நடித்ததிலிருந்து தெரிய வந்தது.
காலப்போக்கில் நான் பலவற்றைப் புரிந்து கொண்டேன். நன்றாக ஓடும்
படம் என்றால் எனக்குத் தியேட்டரில் டிக்கெட் கிடைக்காது. எனக்கு டிக்கெட் கிடைத்து
நான் பார்க்கும் படங்கள் எல்லாம் ஓடாத படங்கள்.
ஓடாத படங்களுக்கு டிக்கெட்
கொடுத்த தியேட்டர்களுக்கு நான் என்றென்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குக்
கூட்ட நெரிசல் இல்லாத திரை அனுபவத்தைக் கொடுத்த தியேட்டர்களுக்கு நான் எப்படி நன்றி
தெரிவிக்காமல் இருக்க முடியும் சொல்லுங்கள்.
*****
No comments:
Post a Comment