நதியைப் பாழ் செய்யும் மாநகர்
ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் கூவம் நதியைப் பார்க்க
வேண்டும் என்பேன். அதென்ன புனித நதியா சென்று பார்க்க? ஆம், கூவம் நதிதானே புனித நதி.
நீங்கள் எவ்வளவு அசிங்கங்களைக் கலந்தாலும் கொட்டினாலும் பொறுத்துக் கொள்ளும் ஒரு நதி
புனித நதியன்றி வேறென்ன நதி?
கூவத்தைச் சுத்தப்படுத்த வேண்டும் என்ற குரல் எங்கும் கேட்கிறது.
நானும் அந்தக் குரலை ஒலிக்க பிரியப்படுகிறேன். சுத்தப்படுத்தினால்தானே அசுத்தப்படுத்த
முடியும். அசுத்தப்படுத்தினால்தானே சுத்தப்படுத்த முடியும். சுத்தப்படுத்திக் கொள்வோம்,
பிறகு அசுத்தப்படுத்திக் கொள்வோம். மாறி மாறி இதைச் செய்து கொள்வதன் மூலம் கூவம் நதியைச்
சுத்தப்படுத்தும் நம் முயற்சிகளும் அதிகமாகும்.
கூவம் நதிக்கு அழகான பாலங்கள் இருக்கின்றன. அதன் நாற்றத்துக்கு
நாம் செய்யும் மரியாதை. கூவம் நதி இல்லாது போயிருந்தால் மாநகர நிர்வாகங்கள் மிகப்பெரும்
செலவில் கழிவுநீர்ப் பாதையை அமைக்க நேர்ந்திருக்கும்.
கூவம் நதியைச் சுத்தகரிக்க
செய்யும் செலவுகள் கழிவு மறுசீரமைப்பு செலவுகள். அது நதியைச் சுத்தப்படுத்த ஆகும் செலவுகள்
ஆகாது. ஆகும் என்றால் நதி சுத்தமாயிருக்க வேண்டும். கூவம் நதி சுத்தமாகி விட்டால் ஒவ்வோர்
ஆண்டும் அதைச் சுத்தப்படுத்த நிதி ஒதுக்குவதும் சிரமமாகி விடும்.
நதியைச் சுத்தம் செய்ய நாம் யார்? நதியை நதியாக இருக்க விட்டாலே
அது சுத்தமாகி விடும். நாமெங்கே நதியை நதியாக இருக்க விடுகிறோம்? அதட்டி மிரட்டி அதன்
கரைகளைப் பிடுங்கிக் கொள்கிறோம். கரையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டினால்தான் கட்டிடம்
கட்டியதாகத் தோன்றுகிறது நமக்கு. நதி எப்படி அதன் போக்கில் ஓடலாம் என்று தடுப்பணைகள்
வேறு.
தன் நீரால் சுத்தமாக்கும் நீருக்கு தன்னையும் சுத்தமாக்கிக்
கொள்ள தெரியும். அதன் கைகளைக் கட்டி விட்டு நீயே சுத்தம் செய்து கொள் என்றால் எப்படி
சுத்தம் செய்து கொள்ளும்?
நதியின் அழகும் தூய்மையும் ஓடுவதில் இருக்கிறது. ஓடும் நதியை
ஓட விட்டாலே அது சுத்தமாகி விடும், அழகுக் குழந்தையாகி விடும். ஒரு நதியின் ஓட்டத்தை
எது தடுக்கிறதோ அதை அகற்றி விடுங்கள். நதி சுத்தமாகி விடும். நாமோ நதியின் ஓட்டத்தைத்
தடுத்துக் கொண்டே அதைச் சுத்தப்படுத்த நினைக்கிறோம். குப்பையைக் கொட்டி விட்டுக் குப்பையாகிறதே
என்று வருத்தப்பட்டால் எப்படி?
கூவம் நதிக்கரையில் ஒரு மாநகரம் அமையாமல் இருந்தால் கூவம் நதி
சுத்தமான நதியாகவே இருந்திருக்கும். ஒரு மாநகரம் தன்னை அழகுபடுத்திக் கொண்டு ஒரு நதியை
அசிங்கப்படுத்தி விடுகிறது.
*****
No comments:
Post a Comment