6 May 2022

ஹைக்கூக்கள் எழுதுவது எப்படி?

ஹைக்கூக்கள் எழுதுவது எப்படி?

            ஏதாவது எழுத நினைப்பவர்கள் எதிலிருந்து எழுதலாம் என்று பல பேர் என்னைக் கேட்டு விட்டார்கள். ஹைக்கூக்கள் வசதியானது என்பது எனது கருத்து. எதாவது நாலு வரி கூட எழுத வேண்டாம், மூன்று வரிகள் போதுமானது.

            மேற்படி கருத்தை நான் தெரிவித்த நாளிலிருந்து ஹைக்கூ எழுதுவது பற்றி ஒரு நூல் எழுதி வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தை பலர் தெரிவிக்கிறார்கள். எனக்கோ நூல்கள் என்றால் அலர்ஜி. வேண்டுமானல் அமேசான் கிண்டிலில் எதாவது கிண்டலாம் என்றேன். பரவாயில்லை அப்படியே செய்யுங்கள் என்றார்கள்.

            ஆனால் யோசித்துப் பார்க்கிறேன். புத்தகம் போட்டுச் சொல்லும் அளவுக்கு ஹைக்கூவில் விசயங்கள் இருப்பதாகப் படவில்லை. சுருக்கமாக ஒரு பத்திப் பதிவிலேயே சொல்லி விடலாம் என்று தோன்றுகிறது.

            ஹைக்கூ எழுத நினைப்பவர்கள் தயாராகிக் கொள்ளுங்கள். நேராக நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது முக்கியம். முதுகுத்தண்டு தரையோடு செங்கோணத்தில் இருந்தால் சிறப்பு. ஓரிரு டிகிரி கோணங்கள் குறைந்திருந்தால் எழுதப்படும் ஹைக்கூக்களின் தரத்தை அனுசரித்து நிமிர்த்துக் கொள்ளலாம். அது பிறகு பார்த்துக் கொள்ள வேண்டியது. ஆரம்பத்தில் ரொம்ப கெடுபிடிகள் வேண்டாம். ஓரளவு நேராக அமர்ந்து கொண்டால் கூட போதுமானது.

            அமர்வதற்கு முன் விரிப்புகள் இட்டு அதன் மேல் அமர்ந்து கொள்வது கவனிக்க வேண்டியது. நாற்காலி, மேசை ஒத்து வராதா என்றால் அது கொஞ்சம் பழக்கப்பட்ட பிறகு. ஹைக்கூவுக்கு ஒரு தவநிலை தேவை. அது தரையில் சம்மணமிட்டு அமர்வதால் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தோடி வரும் அழுக்கு நீரைப் போலப் பாய்ந்தோடி வந்து விடும்.

            கையில் நோட்டு, பேனா என்பது சற்றே வளர்ந்த பின். ஆரம்ப நிலையில் நோட்டு, பென்சில் நல்லது. அழிப்பான் இருப்பதும் அவசியமானது. ஏதேனும் தவறென்றால் அழித்து விட்டு எழுதலாம். அடித்து அடித்து எழுதினால் நம் மேலே நமக்குத் தன்னம்பிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.

            நான் ஆரம்பத்தில் எழுதி பழகிய போது சிலேட்டு மற்றும் சிலேட்டுக் குச்சியில்தான் பழகினேன். அதனால் என்னுடைய ஹைக்கூ தவறுகள் இந்த உலகுக்குத் தெரியாமல் போய் விட்டது. ஆரம்பநிலை கவிஞர்களுக்கு அவசியமானது என்பதால் கொஞ்சம் காசு செலவானலும் பரவாயில்லை என்று சிலேட்டு மற்றும் சிலேட்டுக் குச்சியைத் தேர்ந்து கொள்ளலாம்.

            இப்போது நீங்கள் ஹைக்கூவிற்குத் தயாராகி விட்டீர்கள்.

            புழு

            பூச்சி

            நத்தை

            மீன்

            கருவாடு

            நிலா

            சூரியன்

            பூ

இப்படி எதைப் பற்றி வேண்டுமானாலும் ஹைக்கூக்கள் எழுதலாம். லஞ்சம், ஊழல் பற்றியும் எழுதலாம் என்றாலும் அது பயிற்சி பெற்ற பிறகு.

            எல்லாரும் முயன்றால் ஹைக்கூக்கள் எழுதலாம். முயல வேண்டும் அதுதான் முக்கியம். மூன்று வரிகள்தானே. ஹைக்கூகின் சிறப்பு அதுதான். மூன்று வரிகள். ஏன் மறுபடியும் அதையே சொல்கிறேன் என்றால் அதை நீங்கள் மறந்து விடக் கூடாது. தப்பித் தவறி மூன்று வரிகளைத் தாண்டி விட்டால் அது புதுக்கவிதையாகவோ, நவீன கவிதையாகவோ பரிணமித்து விடக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

            மூன்று வரிகள். ஏதேனும் மூன்று வரிகள். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மூன்று வரிகள் இன்னும் சிறப்பு. சம்பந்தத்தை வாசிப்பவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். அது எழுதுபவரின் வேலையன்று.

            உதாரணத்திற்கு ஒன்று பாருங்கள்.

“நேற்றுதான் மரணித்தார்

பசியடக்க முடியவில்லை

பாதி வழியில் பாடையிலிருந்து எழுந்து விட்டார்”

இதை மேலும் தொடர்ந்து கொண்டு போகலாம். அப்படித் தொடர்ந்து கொண்டு போனால் ஹைக்கூ ஆகாது. ஆகவே மூன்று வரிகள் என்பதில் விழிப்பாய் இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்கு மேல் போனால் ஹைக்கூ ஆகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

            மூன்று வரிகளுக்கு மேல் போகாமல் கோடு போட்டு நோட்டு வாங்கி வைத்துக் கொண்டு 1, 2, 3 என்று உஷாராய் முன்கூட்டியே நம்பர் போட்டு வைத்துக் கொள்ளலாம். அந்த சூட்சமம் எல்லாம் போகப் போக உங்களுக்குகே புரிந்து விடும். இது போதும் என்று நினைக்கிறேன்.

            இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. அது ஹைக்கூ எழுதுவது பற்றியதன்று. ஹைக்கூ குறித்த அனுபவங்கள் பற்றியது. அடுத்த பத்தியை ஆவலுடன் எதிர்பாருங்கள்.

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...