5 May 2022

பொது இடங்களுக்குப் போகா விட்டால் ரூ. 500 லாபம்

பொது இடங்களுக்குப் போகா விட்டால் ரூ. 500 லாபம்

            இந்த வருடமும் கொரோனா கட்டுபாடுகள் வருமோ என்று கேட்கிறார்கள். மனிதர்களுக்குக் கட்டுபாடாக இருப்பது என்றால் அவ்வளவு கஷ்டம். பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று கொரோனா ஹாஸ்டர் வார்டனைப் போல நடந்து கொள்கிறது.

            அதில் இருக்கும் சிரமங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். வெளியில் செல்வது என்றால் ஒரு பை எடுத்துச் செல்ல யோசிப்பவர்களை மாஸ்க் அணிய சொன்னால் எப்படி அணிவார்கள்? அங்கங்கே ஒரு பாலிதீன் பையை வாங்கி அதை அப்படி அப்படியே எறிந்து விட்டுப் போனால்தான் அவர்களுக்குத் திருப்தி. நாம் எதைக் கொண்டு வந்தோம்? எதைக் கொண்டு செல்ல?

            சின்ன வயதில் நான் அப்படித்தான் இருந்தேன். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்ததில்லை. எங்கு வேண்டுமானாலும் எடுப்பேன். எங்கு வேண்டுமானாலும் போட்டு விட்டுப் போவேன். இந்த வசதி பாலிதீன் பைக்கு உண்டு. வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் பைக்கு அப்படிச் செய்து கொள்ள முடியுமா? கிழிந்த பை என்றாலும் எடுத்துச் சென்ற பையைச் சரியாக வாங்கி வைத்தால்தான் வீட்டில் இருக்கு மகராசிகளுக்குத் திருப்தி வரும்.

            பொது இடங்களில் தனி மனித இடைவெளி நம் மனிதர்களுக்கு ஒத்து வராத ஒன்று. ஒருவர் மேல் ஒருவர் ஏறிச் சென்றால்தான் நம் மக்களுக்குத் திருப்தி. அதுவும் வரிசைக்கு இடையில் புகுந்து செல்வதென்றால் பரம திருப்தி. அவர்களின்  திருப்தியை இந்தக் கொரோனா கெடுத்து விட்டது. பிரேயர் முடிந்து செல்லும் மாணவர்களைப் போல வரிசையாக இடைவெளி விட்டுப் போகச் செய்து விடுகிறது.

            நானெல்லாம் கொரோனா கட்டுபாடுகள் நிலவிய காலத்தில் வரிசை முறையைப் பின்பற்றி விரக்தி அடைந்திருக்கிறேன். இவன் யாரடா வரிசையாகச் செல்கிறான் என்று வேற்றுகிரகவாசியைப் போலப் பார்ப்பார்கள். அப்போது எவ்வளவு சங்கடமாக இருக்கும் தெரியுமா? அழுகை வருவது போல இருக்கும். அதற்காக பொது இடத்தில் வரிசையில் நிற்கும் போது அழ முடியுமா?

            என்னை நானே ஆறுதல் படுத்திக் கொள்வேன். நம்மை தாண்டிச் செல்லும் யார் இவர்கள்? நம்மை முந்திச் செல்ல படைக்கப்பட்டவர்கள்தானே என்று நினைத்துக் கொள்வேன். அவர்கள் முந்திச் செல்வதை வளைவில் முந்தாதே என்று வாகனங்களில் அறிவிப்பு எழுதி வைத்திருப்பதைப் போலவே எழுதி வைத்தா எச்சரிக்க முடியும்? ஒரு ஹார்ன் கொடுத் துமுந்திச் சென்றால் கூட ஆறுதலாக இருக்கும். அதை நம் மக்களிடம் எதிர்பார்க்க முடியாது. முந்துபவர்களுக்கு நாமே மரியாதையாக இடம் கொடுத்து விட்டால் கொரோனா காலம் என்று கூட பார்க்காமல் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டுப் போவார்கள்.

            பேருந்துகள் இன்னும் வித்தியாசமாக இருக்கும். ஏறும் இடத்தில் ஒரு சானிடைசர் பாட்டில் வைத்திருப்பார்கள். அதில் சானிடைசர் கொஞ்சம் கூட இருக்காது. காலி சானிடைசர் பாட்டிலை வைத்துக் கொண்டே ஏகப்பட்ட டிரிப்புகள் ஓட்டி விடுவார்கள். சானிடைசர் நிரப்பிக் கொள்வதாக கணக்கு எழுதிக் கொள்வார்களோ என்னவோ? பிறகேன் சானிடைசர் பாட்டில் என்றால் சானிடைசர் பாட்டில் இருப்பது தெரிந்தால் அந்தப் பேருந்துகளில் கொரோனா ஏறுவதற்குக் கொஞ்சம் யோசனை செய்யலாம் அல்லவா!

            ஒவ்வொரு முறையும் நாம் கொரோனாவை எதிர்கொள்ளும் முறையை பாருங்கள். நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்வது போல ஒரு தோற்றத்தை அமைத்துக் கொள்கிறோம். எதையும் சரியாகச் செய்வதில்லை. மாஸ்க் போடுவதையே எடுத்துக் கொள்ளலாம். மூக்குக்கும் வாய்க்கும் போட்டவர்களை விட தாடைக்குப் போட்டுக் கொண்டு போகுபவர்களை அதிகம் பார்க்கலாம். என்னவோ தாடைக்கு டை கட்டியைதைப் போல.

            போலீஸைப் பார்த்தால் தாடைக்குப் போட்ட மாஸ்க்கைச் சற்று மேலே இழுத்து விட்டுக் கொள்வார்கள். இழுத்து விடாதவர்களும் இருக்கிறார்கள். அதான் மாஸ்க் போட்டிருக்கிறேன் அல்லவா. அதையென்ன மேலே, கீழே இழுத்து விட்டுக் கொண்டு என்று நினைப்பவர்கள் அவர்கள். மாஸ்க் போடாவிட்டால்தானே அபராதம். எங்கேயோ மாஸ்க் போட்டிருந்தால் சரி என்று நினைப்பவர்கள் அவர்கள்.

            பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ஐநூறு ரூபாய் அபராதம் என்று இப்போதுதான் கெடுபிடி காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கே மக்கள் அலற தொடங்கி இருக்கிறார்கள். ஐநூறு ரூபாயா? அபராதமா? என்கிறார்கள். பொது இடங்களுக்குப் போகாமல் இருந்தால் ஐநூறு ரூபாய் லாபம் என்பதை நினைக்க மாட்டேன்கிறார்கள்.

            ஐநூறு ரூபாய் அபராதத்தை வைத்துக் கொண்டு கடைக்காரர்கள் பண்ணும் லாபம் இருக்கிறதே. ஒண்ணா ரூவா மாஸ்கை வாங்கி வைத்துக் கொண்டு ஐந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். ஐநூறு ரூபாய் அபராதத்துக்கு ஐந்து ரூபாய் பரவாயில்லை என்று மக்களும் போலீஸை பார்க்கும் போதெல்லாம் மாஸ்க் வாங்கி அணிந்து கொள்கிறார்கள். கடைக்காரர்களின் லாபம் போலீஸ்காரர்களின் கெடுபிடியில்தான் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...