5 May 2022

ஜாங்கிரி தின்னும் கலை

ஜாங்கிரி தின்னும் கலை

            பிள்ளைகள் இருக்கிறார்களே பிள்ளைகள். அவர்களைப் போல இந்த உலகத்தில் யாரையும் நீங்கள் பார்க்க முடியாது. எது இல்லையோ அதைக் கேட்டுச் சரியாக அடம் பிடிக்கிறார்கள். நான் சின்ன பிள்ளையாக இருந்த போது இருப்பதைக் கேட்டு அடம் பிடித்திருக்கிறேன். எடுத்துக் கொடுக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு ஒன்ற சொல்கிறேன் கேளுங்கள்.

            வீட்டில் சித்தப்பாவோ, பெரியப்பாவோ, மாமாவோ வந்த போது வாங்கிக் கொண்டு வந்த ஜாங்கிரி இருக்கும். மைசூர்பாகுகளும் உண்டு. அல்வா என்றால் அத்தி பூத்தாற் போல என்பது அறியத்தக்கது. பிள்ளைகள் திங்க வேண்டுமென்றுதானே வாங்கி வந்திருக்கிறார்கள். அதை எடுத்து உயரமான இடத்தில் ஒரு வாளியில் போட்டு மூடி வைத்திருப்பார்கள். எரவாணத்தில் வாளியை தொங்க விட்டு வைத்திருப்பதும் உண்டு.

            ஒரு சில வீடுகளில் பீரோவில் வைத்து பூட்டி விடுவதும் உண்டு. அந்த வீட்டுக் குழந்தைகள் அப்படி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உயரமோ, தொங்கலோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பது அர்த்தம்.

            எங்களுக்கு எல்லாம் அடி, உதை பயம் இருந்ததால் உயரமே போதுமானதாக இருந்தது. “அம்மா ஒரு ஜாங்கிரி கொடேன்” என்று கேட்க வேண்டும் முதலில். “வாங்கி வந்த உடனே திங்க வேண்டுமா?” என்கும் அம்மா. அதற்காகத்தானே வாங்கி வந்திருக்கிறார்கள் என்றா சொல்ல முடியும்? சொன்னால் முதுகு தண்டு நார் நாராக உரிந்து தொங்கும்.

            பாவமாக ஒரு பார்வைப் பார்க்க வேண்டும். அது முக்கியம். கொஞ்சம் கூட கொடுக்கவில்லை என்ற கடுப்பைக் காட்டி விடக் கூடாது. முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள பாரேன் மொறைக்குது என்று அதற்கு நாலு சாத்து சாத்தும்.

            ஐயோ கிடைக்கவில்லையே என்பது போல ஒரு நத்தை நடை நடந்து பின்னோக்கிச் செல்லும் போது, “திங்குறதுக்குதானே வாங்கியாந்திருக்காங்க. நாளைக்கு காத்தால ஏழு மணி வாக்குல சாப்புடலாம் போ” என்பது போல நேரம் குறித்து அனுப்பும்.

            ஒரு ஜாங்கிரிக்கு பஞ்சாங்கத்தை வைத்து நேரம் குறித்துதான் சாப்பிட வேண்டுமா என்றால் அது அப்படித்தான். ஜாங்கிரிகள் பந்தாவாக பிகு காட்டிய காலம் அது. ஜாங்கிரி கிடைக்கும் நேரத்துக்கு அப்பாய்ன்மென்ட் வாங்கியாயிற்று. அந்த நேரத்தை நினைத்து நினைத்து ராத்திரி முழுவதும் எச்சில் ஊறிக் கொண்டிருக்கும். விடிந்த போது பார்த்தால் வாயில் நீர் ஊறி தலையனை நனைந்திருக்கும்.

            காலை ஏழு மணி வந்தால் அப்போதுதான் அரக்க பரக்க அம்மா வேலை பார்த்துக் கொண்டிருக்கும். கிட்ட போய், “அம்மா” என்று தூபத்தைத் துவங்க வேண்டும்.

            “என்னடா காலங்காத்தால வேல பாக்குற நேரத்துல வந்து அம்மா நொம்மான்னுகிட்டு?”ன்னு வரும் பதிலில் கொஞ்சம் நடுங்குவது போல காட்டிக் கொள்ள வேண்டும்.

            “சித்தப்பா வாங்கியாந்த ஜாங்கிரி” என்று ஓர் இழுவையைப் போட்டால், “அதே தின்னு முடிச்சாதான்டா அடங்குவே நீ. எல்லாத்தையும் காலி பண்ணிட்டு நாளைக்கு என்ன பண்ணுவே?”ன்னு அம்மா சொல்வதைக் கேட்டால் எல்லா ஜாங்கிரியையும் எடுத்து எனக்கே கொடுக்கும் என்பது போலத்தான் தோன்றும்.

            “சித்தே இருடா. இந்த வேலைய முடிச்சிட்டு வாரேன். என்னமோ ஒண்ணுமே திங்காத பயலப் போற பறக்குறே?”ன்னு அம்மா முகத்தை ஒரு சுளிப்பு சுளிக்கும். அப்படியே நின்ற இடத்தில் கால்களிரண்டையும் பசை போட்டு ஒட்டியது போல நின்று கொண்டிருக்க வேண்டும்.

            வேலையை ஒரு அரை மணி நேரத்தில் முடித்து விட்டு அம்மா வந்து எரவாணத்தில் தொங்க விட்டு வைத்திருக்கும் வாளியை எடுத்து திறக்கும். அதில் ஒரு ஜாங்கிரியை எடுத்து எவ்வளவு சின்னதாகப் பிட்டுத் தர முடியுமோ அவ்வளவு சின்னதாகப் பிட்டுத் தரும். அவ்வளவுதான் ஜாங்கிரி. இதற்காக நாள் முழுவதும் காத்திருந்தது என்றால், நாங்கள் சின்ன வயதில் அப்படித்தான் காத்திருக்க வைக்கப்பட்டிருந்தோம்.

            சித்தப்பா வாங்கி வந்த ஜாங்கிரி இப்படியாக மாதம் முழுமைக்கும் வரும். நூறு கிராம் ஜாங்கிரி மாதம் முழுமைக்குமா என்றால் சில வீடுகளில் இரண்டு மாதங்கள் கூட வரும். எல்லாம் கொடுப்பதில்தானே இருக்கிறது. இப்போதென்றால் இந்தப் பிள்ளைகள் ஒரு கிலோ ஜாங்கிரி என்றாலும் ஒரு நொடியில் காலி செய்து விடுகிறார்கள்.

            சரி நாம்தான் சின்ன பிள்ளையில் சாப்பிடவில்லை, நம் பிள்ளைகளாவது சாப்பிடட்டும் என்று நாம் நினைக்கிறோம். பிள்ளைகள் அப்படியா நினைக்கிறார்கள்? ஜாங்கிரி மட்டுந்தாம் வாங்கியாந்தியா? வேற ஸ்வீட் எதுவும் கண்ணில் படவில்லையா என்கிறார்கள். எதை வாங்கிக் கொண்டு போனாலும் எதை வாங்கி வரவில்லையோ அதையேன் வாங்கி வரவில்லை என்று அழுது அடம் பிடித்து ஒரு நாளைக்கு நான்கைந்து முறை கடைகளுக்கு ஓட ஓட விரட்டியடிக்கிறார்கள்.

            அந்தக் காலத்து மனிதர்களுக்கு ஏன் சுகர் வரவில்லை, இந்தக் காலத்து மனிதர்களுக்கு ஏன் சுகர் வருகிறது என்பது உண்மையில் யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்றுதான் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...