4 May 2022

என்ன ஒரு மோசமான வசனம்

என்ன ஒரு மோசமான வசனம்

            கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்தில் இப்படி ஒரு வசனம் வருகிறது. முதல் பாக வசனங்கள் அந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. கதையோடு கன கச்சிதமாகப் பொருந்திய வசனங்கள். ஒரு கதாசாரியர்தான் அளவுக்கு அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பார். அதற்கென்ன செய்வது? அது அவர்களின் இயல்பு. அதனாலேயே இரண்டாம் பாகத்தில் வசனத்தை வைத்து உருட்டு உருட்டு என்று உருட்டியிருக்கிறார்கள். சில உருட்டுகள் ரொம்ப பெரிய உருட்டுகள்தான். எவ்வளவு உருட்டு உருட்டினாலும் தாங்க நாமிருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை?

            வசனத்திற்கு வந்து விடுவோம். “தலைகள் முக்கியமல்ல. கிரீடம்தான் முக்கியம்”. ஆகா எவ்வளவு முக்கியமான வசனம். இதை யோசித்தவர் நிச்சயம் தலையால் யோசித்திருக்க முடியாது. தலையில் வைத்திருக்கும் கிரீடத்தால்தான் யோசித்திருக்க முடியும்.

            இந்த வசனத்தில் அடங்கியிருக்கும் பேருண்மைதான் முக்கியமானது. தலைகள் எப்போதும் முக்கியமல்ல. முக்கியமல்ல என்பதால்தான் முடிவெட்டிக் கொள்ளவே நாம் சம்மதிக்கிறோம். தலையை வெட்டிக் கொண்டு போனால் யார் வாங்குவார்கள் சொல்லுங்கள். அதுவே கிரீடம் என்றால் சொன்ன விலைக்கு வாங்கிக் கொள்வார்கள்.

            ஆட்டுத் தலையை வெட்டிக் கொண்டு போனால் ஆட்டின் உடம்பு எங்கே என்றுதான் கேட்பார்கள். சிங்கத்தின் தலை என்றால், புலியின் தலை என்றால் உடம்பு முக்கியம் இல்லை. பாடம் செய்து சுவரில் பசை போட்டு ஒட்டி வைத்துக் கொள்ளலாம். மான் தலைக்கும் மவுசு இருக்கிறது. மனித தலைக்குத்தான் இல்லாமல் போய் விட்டது.

            பாட்டான் தலை, முப்பாட்டன் தலை என்று தலையைப் பாடம் செய்து வைத்திருக்கும் யாராவது இருக்க மாட்டார்களா என்று நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்க மாட்டேன் என்கிறார்கள்.

            அந்தக் காலத்து எகிப்தியர்கள் தலையோடு உடம்பு மொத்தத்தையும் பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தலையும் முக்கியம், உடம்பும் முக்கியம்.

            சொல்லும் போது தலைவன் என்கிறார்கள், தலைவி என்கிறார்கள். இனிமேல் கிரீடன் என்று கிரிடீ (பெண் பாலுக்கு) என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

            தலையிருந்தால்தானே கிரீடம் வைத்துக் கொள்ளலாம். தலையின்றியும் கிரீடம் வைத்துக் கொள்ளலாம். தலையை யார் பார்க் போகிறார்கள்? கிரீடத்தைத்தானே பார்க்க போகிறார்கள்.

            இந்தத் தலை என்பது முக்கியமல்ல என்பதை அஜித்குமாரும் புரிந்து வைத்திருக்கிறார். இனிமேல் தன்னை தல என யாரும் கூப்பிட வேண்டாம் என்று அவர் அறிவித்திருப்பதைக் கவனித்தீர்களா? ஏ.கே. என்றோ அஜித் என்றோ கூப்பிட்டால் போதும் என்று கூறியிருக்கிறார். தலை வேண்டாம் என்று சொன்ன அவர் கிரீடம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதை ஆழ்ந்து நோக்கினீர்களா? இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் இந்த வசனம் எங்கேயிருந்து உருப்பெற்று எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்பது.

            கே.ஜி.எப். இரண்டாம் பாகம் பாருங்கள். தங்கத்துக்காக மனிதர்கள் எதையும் செய்வார்கள். சரியான தங்கமனசுகாரர்கள். சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் செய்யாததா? தலை முக்கியமல்ல என்று அப்போதே சொல்லி விட்டார் இளங்கோவடிகள். கோவலன் தலை போனதுதான் மிச்சம் போங்கள். என்ன ஒரு மோசமான வசனம்? அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை மனித தலைகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...