12 May 2022

உங்களுக்கான புத்தகத்தை நீங்களே எழுதுவது எப்படி?

உங்களுக்கான புத்தகத்தை நீங்களே எழுதுவது எப்படி?

            ஒரு புத்தகம் எழுதுவது எப்படி என்று கேட்கிறார்கள். இதற்கென ஏதேனும் பயிற்சி பட்டறைகள் நடத்துகிறீர்களா என்கிறார்கள். அப்படி ஒரு திட்டமும் இருக்கிறது. ஆனால் அதை விலையில்லா திட்டமாக நடத்த முடியாது. அதே நேரத்தில் எழுத்தாளர்களாக ஆக விரும்புபவர்கள் சம்பாத்தியம் இல்லாதவர்களாக இருப்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

            அதனால் பயிற்சி பட்டறைகள் நடத்துவது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். அதனால் பயிற்சி பட்டறை நடத்திப் பணம் பறித்துச் சம்பாதிக்க நினைப்பதை இப்படிப் பத்தியிலேயே சொல்லி விடலாம் என்று நினைக்கிறேன்.

            ஒரு புத்தகம் எழுதுவது எளிது. நீங்கள் அப்படி நினைத்தால்தான் புத்தகம் எழுதவும் முடியும். எழுதுவது கஷ்டம் என்று நினைத்தால் அதற்கும் ஒரு வழியிருக்கிறது. இந்த வழிகள் எதற்கென்றால் புத்தகம் எழுதுவது குறித்த அச்சமோ, பயமோ, கவலையோ, தயக்கமோ உங்களுக்கு இருக்க கூடாது என்பதற்காகத்தான்.

            எப்படியாவது உங்களை ஒரு புத்தகமாவது எழுத வைத்து விட என்னால் முடியும். அதற்கு நான் கியாரண்டி. ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்.

            இப்போது எழுதாமல் எப்படி புத்தகம் போட முடியும் என்பதை முதலில் சொல்லுங்கள் என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் என் காதுகளுக்கு கர்ண கொடூரமாகக் கேட்கிறது.

            அது ரொம்ப எளிதுதான். உங்கள் கையில் ஒரு மொபைலோ அல்லது பையில் கணினியோ இருந்தால் போதும். ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் இரவல் வாங்கிக் கொள்ளுங்கள், தப்பில்லை. அதற்காகக் கூச்சப்படக் கூடாது. ஓர் எழுத்தாளர் என்பவருக்குக் கூச்சமே இருக்கக் கூடாது. இரவல் வாங்க கூச்சப்பட்டால் அவரால் எதையும் எழுத முடியாது.

            அதெப்படி எழுதாமல் எழுதுவது என்றால் அங்கேதான் நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போகிறோம். தொழில்நுட்பம் நமக்காக எழுதிக் கொடுக்கும். அதெப்படி எழுதிக் கொடுக்கும்? அதற்குக் கைகள் இருக்கின்றனவா எனக் கேட்க கூடாது. அது கைகளால் எழுதிக் கொடுப்பதென்றால் எத்தனை பேருக்கு எத்தனை கைகளால் எழுதிக் கொடுக்க முடியும் சொல்லுங்கள்.

            எழுத கஷ்டப்படுவர்களுக்காக கணினித் துறையைச் சார்ந்த வல்லுநர்கள், மென்பொருள் துறையைச் சார்ந்த ஜாம்பவான்கள் அதை உருவாக்கிய காலத்திலேயே காப்பி – பேஸ்ட் என்ற முறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

            இந்தப் புத்தகத்திலிருந்து கொஞ்சம், அந்தப் புத்தகத்திலிருந்து கொஞ்சம் என்று எல்லா புத்தகங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஆய்வாளர்கள் இதை அதிகம் பயன்படுத்துவதாகச் சொல்வார்கள். அதனாலென்ன? ஆய்வாளர்கள் பயன்படுத்தும் அறிவியல் பூர்வமான முறையை நாமும் பயன்படுத்துவோம்.

            நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மொபைலை நோண்டியோ, கணினியைத் துலாவியோ உங்களையும் அறியாமல் எதையாவது படித்திருப்பீர்கள். அதை உடனே காப்பி – பேஸ்ட் செய்து ஒரு பைலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வபோது நீங்கள் எதைப் படித்தாலும் அதை உடனே காப்பி – பேஸ்ட் செய்து மேற்படி பைலில் பக்கங்களை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும்.

            குறிப்பிட்ட பக்கங்கள் நிரம்பிய பிற்பாடு உங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். அதுதான் நீங்கள் புத்தகம் வெளியிட வேண்டிய நேரம். உடனே ஒரு பதிப்பகத்தை நாடி இருபதாயிரமோ, முப்பதாயிரமோ தருவதாகச் சொன்னால் உங்கள் புத்தகத்தை வெளியிட மனமுவந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்து விடுவார்கள்.

            இப்போது உங்கள் வெளியாகி விட்டது பார்த்தீர்களா? அதற்குப் பிறகு நீங்கள் அந்தப் புத்தகத்தை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஓசியிலும் கொடுக்கலாம், காசுக்கும் விற்கலாம். அது உங்கள் சாமர்த்தியத்தைப் பொருத்தது.

            பெரும்பாலும் விழாக்கள் நடந்தாலும் நடத்தினால் ஏதாவது ஒரு கிப்ட் கொடுக்க வேண்டியிருக்கும். அது போன்ற நேரங்களில் நீங்கள் உங்கள் புத்தகங்களைச் சாமர்த்தியமாக அனைவரின் கைகளிலும் கடத்தி விடலாம். நாம் அச்சடித்த புத்தகங்களை நாமே நம் வீட்டில் எத்தனை நாட்கள் வைத்திருக்க முடியும்? இப்படி ஓர் ஏற்பாட்டைத் திட்டமிட்டுக் கொண்டால் நமது புத்தகம் பல வீடுகளுக்கும் சென்று விடும்.

            காப்பி – பேஸ்ட் செய்து புத்தகத்தை உருவாக்கும் முறையில் இன்னதான் இடம் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. எது வேண்டுமானாலும் இடம் பெறலாம். உதாரணமாக நான் படித்த காப்பி – பேஸ்ட் முறை புத்தகம் ஒன்றில் கம்பன் எக்ஸ்பிரஸ் தினந்தோறும் காரைக்காலிலிருந்து சென்னையை நோக்கி பிற்பகல் 9.00 மணி வாக்கில் இயக்கப்படுகிறது என்ற தகவல் இருந்தது. இந்தத் தகவலை நான் காரைக்காலிலிருந்து சென்னை செல்லும் போது ஒரு முறை பயன்படுத்திக் கொண்டேன்.

            இப்படியாக ஒரு புத்தகத்தில் நீங்கள் எந்த தகவலை வேண்டுமானாலும் காப்பி – பேஸ்ட் செய்து வெளியிடலாம். எல்லாம் பயன்படும். ஒரு கவிதை புத்தகத்தில் சமையல் குறிப்பு போட்டாலும் பயன்படுத்தும்தான். அந்தப் புத்கத்தைப் படிக்கும் வாசகி இதனால் எவ்வளவு மகிழ்ந்து போவாள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

            இந்த முறைமைகளைப் பயன்படுத்தி புத்தகம் வெளியிட நினைக்கும் அனைத்து சர்வதேச தோழமைகளுக்கும் முன் கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

            இப்படி ஒரு புத்தகம் வெளியிடும் போது அது குறித்த நன்றி தெரிவித்து எனக்கு ஒரு மின்னஞ்சல் நீங்கள் அனுப்பலாம். இருந்தாலும் தமிழ்ச் சமூகத்தில் அதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்று சோமசுப்பு சுந்தரசந்திரர் கவிராயர் என்ற புலவர் கூறியிருக்கிறார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆகவே உங்களுக்கான நன்றியையும் நானே தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி விகடபாரதி.

*****

2 comments:

  1. Sema bro... Thanks ...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ப்ரோ.

      Delete

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...