13 May 2022

வருடத்திற்கு ஒரு புத்தகமாவது வெளியிடுகிறேன்

வருடத்திற்கு ஒரு புத்தகமாவது வெளியிடுகிறேன்

            புத்தகம் போடுவதில் ஒரு சிரமம் முன்னுரை எழுதுவது. இதற்குப் பயந்தே முன்பெல்லாம் புத்தகம் போடாத ஆட்களில் நானும் ஒருவனாக இருந்தேன். பள்ளிக்கூடத்தில் கட்டுரை எழுதிய காலத்திலிருந்து பயமுறுத்தியது இந்த முன்னுரைதான். அதனால் அந்த முன்னுரையை மட்டும் மனப்பாடம் செய்து கொள்வேன். மற்ற பொருளுரை மற்றும் முடிவுரைகளைத் தெரிந்த கப்சாக்களை வைத்து நிரப்பிக் கொள்வேன்.

            தமிழில் நன்னூல் இருக்கிறது. பவணந்தியார் அதை எழுதியிருக்கிறார். அவர் ஒரு போடு போட்டிருக்கிறார். பாயிரமல்லது பனுவல் அன்று என்று. இது ஓர் அணிந்துரை வகையறா. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. ஏதோ ஒன்று புத்தகத்துக்கு முன்பு தேவைப்படுகிறது. அதுதான் புத்தகத்தில் எல்லாம் இருக்கிறது என்றாலும் புத்தகம் துவங்குவதற்கு முன்பு ஒரு சில பத்திகள் இப்படி அநாவசியமாகத் துவங்கினால்தான் புத்தகத்தைப் படிக்கும் மனநிலையே வருகிறது பலருக்கு.

            முன்னுரை மற்றும் அணிந்துரை வகையறாக்கள் சில சௌகரியங்களைச் செய்து கொடுக்கின்றன. முழு புத்தகத்தையும் படிக்க முடியாதவர்கள் இந்த முன்னுரை மற்றும் அணிந்துரைகளைப் படித்து வைத்துக் கொண்டு அவ்வளவுதான் அந்தப் புத்தகம் என்று அடித்து விட வசதியைச் செய்து தருகிறது. இதன் காரணமாகவே முன்னுரை மற்றும் அணிந்துரை இல்லாத புத்தகங்களைப் படிக்க மாட்டேன் என்று சபதம் செய்திருப்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

            பெரும்பாலும் எழுத்தாளர்களை யார் புகழப் போகிறார்கள்? தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளவும் இந்த முன்னுரையைப் பயன்படுத்தும் போக்கு தமிழ் புத்தக வரலாற்றுப் பாதையில் காணுமிடமெங்கும் காணக் கிடைக்கிறது.

            வெளியாகும் அத்தனை புத்தகங்களும் மதிப்புரையோ அல்லது விமர்சன உரையோ எங்கே வெளிவருகிறது? தமிழகத்தில் நூல் தொகைப் பெருக்கம் அதிகம். அத்தனை புத்தகங்களுக்கும் எழுதுவது என்றால் காகிதத் தட்டுபாடு வந்து விடும். இதைப் போக்கிக் கொள்ளவும் ஒரு நூலாசிரியர் முன்னுரையை எழுதிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் பல புத்தகங்களுக்கு விமர்சனங்களை முன்னுரையை வைத்தே எழுதியிருக்கிறேன். அதற்கு மேல் எங்கே புத்தகங்களைப் படிக்க முடிகிறது?

            அணிந்துரை என்றால் நான் இன்னொருவர் புத்தகத்தைப் புகழ்ந்து எழுதினால் அவர் என்னுடைய புத்தகத்தைப் புகழ்ந்து எழுதுவார். அவ்வளவுதான். இந்த முன்னுரை அணிந்துரை இரண்டும் சேர்த்து நான்கைந்து பக்கங்கள் வரும். இரண்டு பக்கங்கள் மட்டும் வரும் நூல்களும் இருக்கின்றன. இவ்விரண்டையும் அச்சடித்துக் கொடுத்தாலே போதுமானது ஒரு நூல் வெளியீட்டுக்கு. இருந்தாலும் எதற்கும் இருக்கட்டும் என்று முன்னுரைக்கும் அணிந்துரைக்கும் காரணமான மற்ற பக்கங்களையும் பின்னிணைப்பாக அச்சடித்துக் கொடுக்கிறார்கள்.

            முன்னுரை அணிந்துரை கணக்கில் ஒரு புத்தகம் என்பது நான்கைந்து பக்கங்கள் எனும் போது அதை வாட்ஸாப்பில், டெலிகிராமில் கூட அனுப்பி எளிதாக வெளியிட்டு விடலாம். இருந்தாலும் காகிதத்தில் வெளியிட்டால்தான் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது.

            நான் என் கல்யாண பத்திரிகையை அப்படித்தான் ஒரு நூலாக வெளியிட்டேன். மொத்தமாகச் சேர்த்து நான்கு பக்கங்கள். அந்த நூலுக்கு திருவள்ளுவர்தான் “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையிலேயே அனைத்தும் அடங்கி விட்டதால் அதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது. இருந்தாலும் இருக்கட்டும் என்று அதில் உறவினர்களின் அத்தனை பெயர்களையும் போட்டு ஒரு வரிக்கு ஒரு பெயர் என்ற வீதத்தில் ஒரு கவிதை நூலைப் போல வெளியிட்டேன். நானே ஒவ்வொருவராகப் பார்த்து நேரில் சென்று கொடுத்தேன்.

            பார்த்தவர்கள் கவிதை திருமண அழைப்பிதழ் புத்தகம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். ஒவ்வொரு பக்கத்தையும் விரும்பியும் படித்தார்கள். அவர்கள் ஆழ்ந்து படித்தார்கள் என்ற பேருண்மை அவர்கள் போட்ட மொய்யிலிருந்து வெளிபட்டது. அந்த வகையில் நான் வெளியிட்ட புத்தகம் என் கையைக் கடிக்கவில்லை. நிறைய வருமானத்தைப் பெற்றுத் தந்தது. நீங்களும் இப்படி ஒரு புத்தக வெளியீட்டைச் செய்து கொள்ளலாம்.

            நீங்கள் ஆணாக இருந்தால் ஒரு பெண்ணின் சம்மதத்தையோ அல்லது பெண்ணாக இருந்தால் ஆணின் சம்மமததையோ இதற்காகப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கென்று புரோக்கர்களும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியையும் நாடலாம். அவர்கள் ரொம்ப சுலபமாகத் திருமண ஏற்பாட்டைச் செய்து தந்து நூல் வெளியீட்டுக்கு உதவுவார்கள்.

            இப்போது எங்கள் வீட்டில் எந்த விழா என்றாலும் கவிதை அழைப்பிதழ் புத்தக வடிவில் ஒரு வெளியீட்டு விழாவை நடத்தி விடுகிறேன். அனைவரும் ஆர்வமாகப் பங்கேற்கிறார்கள். விழாவுக்கு ஏற்ப அன்பளிப்பு உறைகளோடு வருகிறார்கள். வருடத்திற்கு இப்படி ஒன்றாவது நடத்தி புத்தக வெளியீடுகள் குறையாமல் பார்த்துக் கொள்கிறேன். காகிதத்தில் புத்தகங்கள் வெளியாவது எவ்வளவு மகிழ்ச்சியான ஒன்று.

            ஆண்டொன்று போனால் வயதொன்று போகிறது. எனக்கு ஆண்டொன்று போனால் புத்தகம் ஒன்று வெளியாகிறது. என் வயதைத் தாண்டியும் இன்னும் சில ஆண்டுகளில் அதிக புத்தகங்களை வெளியிட்டிருப்பேன். நீங்கள் என் புத்தகத்தின் வாசகர்களாக இருப்பது நான் செய்த அதிர்ஷ்டம். என் அதிர்ஷ்டத்திற்கு நான் எப்போதும் நன்றி சொல்கிறேன்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...