12 May 2022

முன்னுரை எழுதுவதன் சூட்சமங்கள்

முன்னுரை எழுதுவதன் சூட்சமங்கள்

            ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவது எப்படி என்ற வினா என்னை நோக்கி அடிக்கடி கேட்கப்படுகிறது.

            உங்களுக்கு ஒன்று தெரியும்தானே. துவங்குதான் சிரமம். துவங்கி விட்டால் எளிது. அந்தத் துவக்கம்தான் முன்னுரை.

            எனக்குக் கஷ்டமான வேலைகளில் ஒன்று அதுதான். துவங்க வேண்டுமே. எப்படித் துவங்குவது? எங்கிருந்து துவங்குவது? எந்த சொல்லில் எந்த எழுத்தில் என்று மண்டையைக் காய வைத்து விடும் முன்னுரையை நினைத்தாலே… எனக்குக் கொஞ்ச நஞ்சமல்ல நிறையவே ஸ்டார்ட்டிங் டிரபிள் இருக்கிறது என்று சொல்லி விடுவதுதான் இலக்கிய நேர்மை என்று நினைக்கிறேன்.

            முடியாது என்பதற்காக விட்டு விட முடியுமா? முடியாது என்பது முட்டாளின் அகராதியில் என்று நெப்போலியனோ, பொன்னம்பலமோ யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார். அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். முட்டாளின் அகராதி என்று சொல்லியிருக்கிறார் பாருங்கள். முன்னுரை எழுத முடியாது என்று நினைப்பவர்கள் முதலில் அகராதி ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

            நம்மிடம் புத்திசாலியின் அகராதி இருக்கிறது என்று சொல்லிக் கொள்வதற்காகவாவது ஓர் அகராதி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அகராதியிலிருந்து உங்களுக்குப் பிடித்தமான பத்து வார்த்தைகள் போதும். இல்லையென்றால் அங்கும் இங்குமாகப் புரட்டித் தட்டுப்படும் பத்து வார்த்தைகள் போதுமானது.

            பத்து வார்த்தைகளை வைத்து ஒரு கப்சா அடிக்க முடிந்தால் சிறப்பு. முடியாவிட்டாலும் பத்து வார்த்தைகளை முன்னும் பின்னுமாக அப்படியும் இப்படியுமாக மாற்றி மாற்றி எழுதிப் பார்த்தாலும் முன்னுரை தயாராகி விடும். சிறுவயதில் விடை தெரியாத வினாவுக்கு வினாவில் இடம் பெற்ற சொற்களை மாற்றி மாற்றி ஒரு காம்பினேஷன் பெர்ம்யூட்டேஷன் செய்து எழுதவில்லையா? அந்த சிறுவயது உத்திகளைப் பெரியவரானால் மறந்து விடுவதா?

            மேலும் சில முறைகளும் இருக்கின்றன. ஒரு புத்தகமே ஐயாயிரம் பக்கங்களோ, பத்தாயிரம் பக்கங்களோ எழுதி விடுகிறோம். ஒரு பத்துத் துண்டு முன்னுரை எழுத முடியாவிட்டால் எப்படி? அது போன்ற நேரங்களில் எழுதிய வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக பிய்த்துப் பிடுங்கி எழுதி விட்டால் அதுவும் முன்னுரைதான்.

            கொஞ்சம் ஒரிஜினலாக ஒரு முன்னுரையாவது எழுத வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்களின் பெயர்கள், நண்பர்கள் அல்லாதவர்களின் பெயர்கள் என எல்லாவற்றையும் திரட்டிக் கொள்ளுங்கள். உங்கள் விரோதிகளின் பெயர்களைத் திரட்டிக் கொண்டாலும் சரிதான்.

            பெயர்களைத் திரட்ட முடியாதவர்கள் ஒரு கல்யாணப் பத்திரிகையை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இப்போது எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான் முன்னுரையை.

            நான் இந்த நூலை எழுத காரணமான கோவிந்த தாண்டவராயன் சாருக்கு நன்றி. இந்த நூலை அவ்வபோது படிக்க முடியாமல் படித்து கருத்து சொன்ன ஏழுமலை முருகன் சாருக்கு நன்றி. நூலை எழுதுங்காலத்து அரிய பல கருத்துகளை நல்கிய கோதாண்ட மார்த்தாண்டம் சாருக்கு நன்றி. மெய்ப்புத் திருத்தி உதவிய நாகராஜ பாண்டிய சோழன் சாருக்கு நன்றி. அணிந்துரை எழுத ஒத்துக் கொண்ட சௌந்தர சீத்தலை இளங்கோ சாருக்கு நன்றி.

            ஆண்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றில்லை. பெண்களையும் சேர்த்துக் கொள்ளலாம். நூலை வாசிக்கும் போதே நெக்குருகிய அபிதா குஜலாம்பாள் மேடத்துக்கு நன்றி. வால்யூம் 2, பக்கம் 47, 13 வது வரியில் அமைந்திருக்கும் வாக்கியத்தைச் சொல்லி சொல்லி ரசித்த ரக்ச அமிர்த பாண்டியம்மாள் மேடத்துக்கு நன்றி. வால்யூம் 23 ஐ படிப்பதற்கு முன்பே அழுது விட்ட உண்ணாமுலை மதிவர்ஷினிஸ்ரீ மேடத்துக்கு நன்றி.

            இப்படி நன்றி சொல்லும் பட்டியலைக் கொண்டு முன்னுரையை அதக்கிக் கொள்ளலாம். அடைமொழிகள், காரண கருத்தாக்கள் போட்டு எழுத சிரமமாக இருந்தால் ராமசிவலிங்கம் சாருக்கு நன்றி, விநாயகஅனுமன் சாருக்கு நன்றி, கட்டபொம்மன் ஜாக்சன் சாருக்கு நன்றி, பங்கஜகமலாம்பாள் மேடத்துக்கு நன்றி, பட்டு ரோஜா புஷ்பமேரி மேடத்துக்கு நன்றி, அரியநாச்சி நாடியம்மாள் மேடத்துக்கு நன்றி என்றும் எழுதிக் கொள்ளலாம்.

            முன்னுரையின் பக்கங்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக நன்றி சொல்ல பெயர்கள் கிடைக்காத போது அக்கம் பக்கத்தில் சிறு குழந்தைகளின் பெயர்களைக் கூட நான் சேர்த்துக் கொள்வதுண்டு. அவர்களுக்கும் நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும். நாம் எழுதும் போது நம்மை டிஸ்டர்ப் செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு மொபைல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.

            இதற்கு மேலும் முன்னுரை எழுதுவதில் உங்களுக்குத் தயக்கம் இருந்தால் நேரில் வாருங்கள். நிறைய திருமண பத்திரிகைகளை 1992 லிருந்த எடைக்குப் போடாமல் பத்திரிமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். ஏதாவது ஒரு பத்திரிகையை எடுத்து கடகடவென எழுதி முடித்தால் பத்து நிமிடத்தில் முன்னுரை தயாராகி விடும்.

            இந்த முன்னுரையை எழுத உதவி செய்த விகடபாரதி சாருக்கு நன்றி என்ற ஒரு வரியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். இன்னொரு வரி கிடைக்கிறது பாருங்கள்.

            முக்கியமாக ஒவ்வொரு பெயருக்குப் பின்னால் சார் அல்லது மேடம் என்று கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை அவசியம் பெயருக்குச் சொந்தக்காரர்கள் எதிர்பார்ப்பார்கள். தங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள தாரளமாக அனுமதித்த அவர்களுக்காக அதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?

            நான் இந்தப் புத்தகத்தை எழுதத் தேவையான பேப்பரை ராசாமணி சார் பெட்டிக்கடையிலிருந்து வாங்கி வந்த யஷ்வந்த் அஷ்வின் துஷ்யந்த், செகண்ட் ஸ்டாண்டர்டு, பி செக்சன் மாஸ்டர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கூட முன்னுரை எழுதியிருக்கிறேன். அதென்ன மாஸ்டர் என்றால் குழந்தைகள் என்றால் அப்படித்தான் மரியாதை தெரிவிக்க வேண்டுமாமே. இந்தக் குறிப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

            மற்றவை பிரச்சனை என்றால் மின்னஞ்சலில் சந்திக்கும் போது.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...