10 May 2022

அதைப் பற்றியும் கொஞ்சம் பேசலாம்

அதைப் பற்றியும் கொஞ்சம் பேசலாம்

            இந்த உலகில் அதிகம் பேசப்பட்ட பொருள் அதுவாகத்தான் இருக்கும். எல்லா நாட்டிலும் எல்லா காலத்திலும் விரும்பிப் பேசப்படும் பொருளும் அதுதான். அதை பேச விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? யாராவது இருந்தால் எனக்குத் தகவல் சொல்லுங்கள்.

            சாமியார்கள் கூட அதைத்தான் பேசுகிறார்கள். அதை அடக்கு என்று அவர்கள் அதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவார்கள். அடக்கச் சொல்கிறவர்கள் அதைப் பற்றி வர்ணிக்கும் விதத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும் அவர்கள் ஒரு காலத்தில் எவ்வளவு ஆர்வமாக ஈடுபட்ட துறை அது என்று.

            அதைப் பற்றிப் பேசுவதை விரும்பினாலும் பொதுவில் அதைப் பேசி விட முடியாது. ரகசியமாகப் பேசுவதில்தான் அதன் சுவாரசியமே அடங்கியிருக்கிறது. இவரா இதைப் பற்றிப் பேசுவதை இவ்வளவு ஆர்வமாகக் கேட்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். அதைப் பற்றிப் பேசினால் யாராக இருந்தாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதைக் கேட்பதில் அவ்வளவு சந்தோசம் இருக்கிறது. அது ஒரு ரகசிய சந்தோஷ உலகம் என்று சொன்னாலும் சரிதான்.

            எழுத்தாளர்களும் அதைப் பற்றி எழுதத்தான் அதிகம் விரும்புபவர்கள். நேரடியாக எழுதி பேர் கெட்டு விடக் கூடாது என்பதற்காக இலை மறை காயாக எழுதி இன்னும் தூண்டி விடும் வேலையை நன்றாகச் செய்வார்கள்.

            கலைஞர்கள் அதை அணுகும் விதம் வித்தியாசமாக இருக்கும். தங்கள் இமேஜ் கெடாமல் அதை கலா ரசனை என்பார்கள். மற்றவர்கள் அதை ரசிக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் மட்டும் யாருக்கும் தெரியாமல் விலா வாரியாக அனுபவித்துப் பார்ப்பதை ரகசியமாகச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

            ஆண்கள் பெண்களிடமும் பெண்கள் ஆண்களிடமும் பேசுவதற்குக் காரணமே அதுதான். இல்லையென்றால் அவ்வளவு தொணதொணப்புகளை அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. அவ்வளவு தொணதொணப்புகளுக்கும் அதுதான் சுவாரசியம் சேர்க்கிறது. அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். நேரம் ஒரு பொருட்டல்ல. பேச்சுதான் முக்கியம். டாக் டைம் இலவசமாகி விட்ட இந்தக் காலத்தில் டாக் டைம் முழுவதும் ஆக்கிரமித்திருப்பது அந்தப் பேச்சுதான்.

            அது குறித்தான பேச்சு அப்படி ஒரு தொடர்கதை. மனித இனத்தில்தான் இப்படி. பூச்சியினங்களில் சில இருக்கின்றன. வேலை முடிந்தால் அப்புறமென்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது என்று நினைக்குமோ என்னவோ? விழுங்கி விடுகின்றன. அதுவும் ஆண் இனத்தைப் பெண் இனம். நாம் மனிதர்களாகப் பிறந்ததற்கு நிரம்பவே சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

            இங்கே பார்வையால் விழுங்கி விட்டாய், அன்பால் விழுங்கி விட்டாய் என்று கவிதை எழுதுவதோடு விழுங்குதல் முடிந்து விடுகிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம் என்று சொல்லி விட்டு அதைப் பற்றி பேச முடியாமலே போய் விட்டது பாருங்கள். மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போய் விடும்? நிறைய பேசுவோம் வாருங்கள்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...