10 May 2022

பேரிளம் பெண்ணும் முதுமகனும்

பேரிளம் பெண்ணும் முதுமகனும்

            தமிழ் இலக்கியங்களில் சிற்றிலக்கியங்களும் உண்டு. 96 வகை இருப்பதாகச் சொல்கிறார்கள். அதைத் தாண்டியும் சிற்றிலக்கிய வகைகள் இருப்பதாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக இருந்தால் நன்மைதானே. படிக்கும் போதே ஒரு சுண்டு சுண்டி இழுக்கும் இலக்கியங்கள் என்பதால் சொல்கிறேன்.

            கொஞ்சம் அப்படி இப்படி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதைப் படிக்கலாம். ரசமான இலக்கியங்கள் அவைகள். நடை செய்யுள் நடைதான். அது எந்த நடையாக இருந்தாலும் உங்களுக்குத் தேவையானது இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவே செய்யும்.

            சிற்றிலக்கியங்களில் ‘உலா’ என்பது ஒரு வகை. உலக வழக்கில் ஆண்கள் பெண்களைச் சைட் அடிப்பதைத்தான் பார்த்திருப்பீர்கள். இலக்கிய வழக்கு கொஞ்சம் வித்தியாசமானது. ஆண்களைப் பெண்கள் சைட் அடிப்பது போல எழுதியிருப்பார்கள். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் உலா.

            ஒரு தலைவன் ஊர்வலம் போகிறான் என்றால் ஊரில் இருக்கும் அத்தனை பெண்கள் கூடி நின்று சைட் அடிப்பதாக உலா இலக்கியம் போகும். அத்தனை பெண்களும் என்றால் அத்தனை பெண்களும்தான். பொட்டு பொடிசிலிருந்து பல் போன கிழவி வரைக்கும். இதை உலா இலக்கியத்திலேயே வகைப்படுத்திச் சொல்லியிருப்பார்கள்.

            பல் போன கிழவி என்றால் அவருக்குக் கல்யாணம் ஆகியிருக்கும், குழந்தைகள் பிறந்திருக்கும். அவரா இப்படி என்றால், அவர் கல்யாணமே ஆகாத கிழவியாகவும் இருக்கலாம். அது பற்றிய மெய்மைகளை ஆய்வாளர்கள்தான் வெளிக்கொணர வேண்டும். அது வரை நாம் காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

            பெண்களின் வகைபாட்டில் பார்த்தால் வயதான பெண்களையும் பேரிளம் பெண்கள் என்கிறார்கள். அந்த வார்த்தையை நீங்கள் கவனிக்க வேண்டும். தமிழில் இதைச் சொல்லாக்கம் என்பார்கள். பேரிளம் பெண் என்ற வார்த்தையை உங்களைக் கிறங்கடித்து விடும்.

            பெண்களுக்கு உள்ள இதே போன்ற வகைபாடு ஆண்களுக்கும் இருக்கிறது. அங்கே ஆண் முதுமகன் ஆகி விடுகிறான். அதாவது பெண்ணுக்கு மட்டும்தான் வயதானாலும் இளம் என்பது சேர்கிறது. ஆணுக்கு முது என்பது சேர்ந்து விடுகிறது. வயதானாலும் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது இலக்கிய வழக்கு. இந்த ஒரு விசயத்தில் உலக வழக்கும் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

            நீங்களே இந்த வகைபாட்டைப் பாருங்களேன். இதனின்று மேலும் சில புதிய மெய்மைகளை உருவாக்க முடிந்தால் தயவு செய்து அது குறித்து என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். என்னைத் தேடி வாசிப்பவர்களுக்கு நான் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது அந்தப் பட்டியலைப் பாருங்கள்.

பெண்ணுக்கான வகைபாடு

வயது வாரி நிலை

ஆணுக்கான வகைபாடு

வயது வாரி நிலை

பேதை

5 – 7

பாலன்

1 – 7

பெதும்பை

8 – 11

மீளி

8 – 10

மங்கை

12 – 13

மறவோன்

11 – 14

மடந்தை

14 – 19

திறவோன்

15

அரிவை

20 – 24

விடலை

16

தெரிவை

25 – 31

காளை

17 – 30

பேரிளம் பெண்

32 – 40

முதுமகன்

31 – 40

*****

No comments:

Post a Comment

அதிர்ஷ்ட கணக்கு

அதிர்ஷ்ட கணக்கு நான் என்ன பெரிய அதிர்ஷ்டசாலி என்று நீங்கள் நினைக்கலாம் என்னைப் பற்றி நினைக்க நான்கு பேர் இருக்கிறார்கள் எனக்காகக் ...