11 May 2022

உருவான கடவுள்

உருவான கடவுள்

            கடவுளைப் பற்றிக் கேட்கிறார்கள். அநேகமாக அவர் இல்லை என்பது என் அபிப்ராயம். உங்கள் அபிப்ராயம் வேறாக இருக்கலாம்.

            கடவுள் இல்லாமலா இவ்வளவு ஆலயங்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். இல்லாத ஒருவருக்கு இவ்வளவு ஆலயங்கள் என்பது ஆச்சரியம்தான். உங்களுக்குக் கடவுள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

            கடவுள் உங்களுக்குத் தேவைப்படுகிறார். இல்லையென்றால் நீங்கள் ஏன் கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? உங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பல சமுதாயங்களுக்கும் அவர் தேவைப்படுகிறார்.

            கடவுளை வைத்து உங்களை வகைப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்களை மேம்பட்டவர் என்று கூட காட்டிக் கொள்கிறீர்கள். பிறகு அவருக்காக ஒரு கூட்டத்தை உண்டு பண்ணுகிறீர்கள். அந்தக் கூட்டத்தைத் தக்க வைக்க வேண்டுமே. அதற்காக நிறைய சடங்குகளை சம்பிரதாயங்களை உருவாக்குகிறீர்கள். சடங்குகள், சம்பிரதாயங்களைக் கேள்வி கேட்காமல் இருக்க அதிசயங்களைக் கட்டமைத்து விடுகிறீர்கள்.

            உங்கள் கடவுளை நிலைநிறுத்த எவ்வளவு வேலை செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்கிறீர்கள். அதில்தான் உங்களுக்கான கடவுள் நிலைத்திருக்கிறார். நீங்கள் அந்த வேலைகளை நிறுத்தி விட்டால் அவர் என்றோ உலகை விட்டுப் போயிருப்பார்.

            உண்மையைச் சொல்லப் போனால் கடவுள் உங்களுக்குத் தேவைப்படுகிறார். அவர் பெயரால் வசூல் செய்ய, உண்டியல் குலுக்க, காணிக்கைகள் பெற இப்படி பல விசயங்களுக்கு அவர் உங்களுக்குத் தேவைப்படுகிறார். உலகில் கடவுள் பெயரில் இருக்கும் சொத்துகள் ரொம்பவே அதிகம். அந்தச் சொத்து குறைந்தால் அவர் இல்லாமலேயே போய் விடுவார்.

            உண்மையில் உங்கள் கடவுள் நீங்கள் உருவாக்கிய கடவுள். அவராக உருவான கடவுள் அல்ல. அதாவது மனிதர்களாகிய நீங்கள் மனிதர்களாகிய உங்களுக்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட கடவுள் என்று சொல்வதை ஆபிரஹாம் லிங்கன் உட்பட உலகப் பெருந்தலைவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

            மனிதர்களை யார் உருவாக்கினார்கள் என்றால் கடவுள் என்பீர்கள். அது உங்களது நம்பிக்கை. அவரை ஏன் உருவாக்கினீர்கள் என்றால் உங்களை உருவாக்க ஒருவர் தேவை என்று நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உருவாக்கியதுதான் உங்கள் கடவுள். நீங்கள் உருவாக்கி அவருக்கு நிறைய வேலைகள் கொடுத்திருக்கிறீர்கள்.

            கடவுள் உங்களைக் காக்க வேண்டும், இந்த உலகைக் காக்க வேண்டும், துயரங்களைப் போக்க வேண்டும், துன்பங்களை நீக்க வேண்டும் என்று நீங்கள் அவருக்கு ஏகப்பட்ட வேலைகளைக் கொடுத்திருக்கிறீர்கள்.

            உங்கள் கடவுள் பெயரால் உலகில் எவ்வளவு போர்கள் நடந்திருக்கின்றன. அவர் சிலுவைப் போர்களைத் தடுத்தாரா? சமணர்கள் கழுவேற்றப்பட்ட போது அதைத் தடுத்திருக்க அவரால் முடியாதா? புனிதப் போர்களை நிறுத்தக் கூடாதா? பூகம்பம், வெள்ளம் போன்றவை நடக்கும் போது எவ்வளவோ அப்பாவி மக்களைக் காப்பாற்றக் கூடாதா? எவ்வளவோ நடந்திருக்கிறது. அவர் பெயரால் நடப்பதைக் கூட நிறுத்தா விட்டால் அவர் என்ன கடவுள்?

            உங்கள் மனஅமைதிக்கு ஒரு கடவுள் தேவைப்படுகிறார். அவரை வைத்து உலகின் அமைதியை நீங்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் நடக்கிறது. இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...