4 May 2022

திரைபடமாடி அரசியல் செய்!

திரைபடமாடி அரசியல் செய்!

            அரசியல்வாதிகள் என்னமாக நடிக்கிறார்கள் என்கிறார்கள். அவர்கள் சினிமாவிலிருந்து வந்தால் என்ன செய்வார்கள்? தமிழ்நாட்டின் அநேக அரசியல்வாதிகள் சினிமாவாதிகள்தான். தமிழ்நாட்டில் மட்டும் அரசியலும் சினிமாவும் சேர்ந்தே வளர்ந்த துறைகள் எனலாம்.

            ராஜராஜன் காலத்திலேயே அவர் அரசராக இருந்த போதிலும் மக்களின் சினிமா தாகத்தைப் புரிந்து கொண்டவராக இருந்திருக்கிறார். அவரே அவர் பெயரில் நாடகம் ஒன்றை தஞ்சை பெரிய கொயிலில் நடித்து அரங்கேற்றியிருக்கிறார். ஆட்டனத்தி என்ற அரசர் ஆடல், பாடல், நடன கலைகளில் வல்லவராக இருந்திருக்கிறார். இப்படி சினிமாவுக்கும் அரசியலுக்குமான பந்தம் தமிழ்நாட்டில் அப்போதிலிருந்தே இருந்திருக்கிறது.

சினிமாவிலிருந்து வரா விட்டாலும் நடிக்காமல் அரசியல் செய்ய முடியாது. உலகெங்கும் உள்ள அரசியல்வாதிகள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் காமிரா வைத்து நடிக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு காமிரா வேண்டும் என்றெல்லாம் இல்லை. காமிரா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களால் நடிக்க முடியும். அப்படி ஓர் ஆற்றல் அவர்களுக்கு இயற்கையிலேயே கை கூடியிருக்கிறது.

நீங்கள் உக்ரைன் அதிபரை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர் நடிகராக இருந்து அதிபரானவர். நகைச்சுவை செய்வதில் அவரை வல்லவர் என்கிறார்கள். இப்போதைய நிலையில் அவர் எவ்வளவு சீரியஸாக நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டுப் பட்டியல் பெரிது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா என்று அரசியல் தாக்கம் இல்லாத சினிமாக்காரர்களைப் பார்க்க முடியாது. காரணம் சினிமாதாக்கம் பெற்ற அரசியலாகவும் இருக்கலாம். அல்லது மக்களாகவும் இருக்கலாம். அது அரசியல் அறிவியலின் ஆராய்வுக்கு உட்பட்டது. நாம் போட்டு மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.

தமிழ்நாட்டின் சினிமா – அரசியல் தொடர்ச்சி தலைமுறைகளைத் தாண்டித் தொடரும் பந்தமாக இருப்பதுதான் அதன் சிறப்பு. எம்.ஜி.ஆர். – சிவாஜிக்குப் பிறகு ரஜினிகாந்த் – விஜயகாந்த் – கமலாக அது பரிணமித்துக் கொண்டது.

ரஜினிகாந்த் அரசியல் ஒத்து வராது என்று விலகிக் கொண்டாலும் தமிழக அரசியலில் சில தேர்தல்களில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஸ்டாலின் மட்டும் இவ்வளவு எழுச்சியுடன் அரசியல் செய்யா விட்டால் ரஜினிகாந்த் நம்பிக்கையுடன் அரசியலுக்கு வந்திருப்பார்.

கருணாநிதி – ஜெயலலிதா இருந்த காலத்திலேயே தைரியமுடன் அரசியலுக்கு வந்த சிறப்பு விஜயகாந்திற்குரியது. தைரியமாகக் கட்சி ஆரம்பித்தார். எதிர்கட்சி தலைவர் வரை வந்து விட்டார். அதற்கு மேல் போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும் என்று நாக்கைத் துருத்திக் கொள்ளாமல் இருந்திருந்தால் இன்னும் உயரங்களுக்குப் போயிருப்பார்.

கருணாநிதி – ஜெயலலிதா இல்லாத தைரியத்தில் அரசியலுக்கு வந்தார் கமல். மக்களுக்குப் புரியாமலும் அரசியல் செய்ய முடியும் என்பது அவருடைய தனிச்சிறப்பு.

இடையிடையே அரசியலுக்கு வந்து அரசியலை பட்டும் படாமல் செய்து கொண்டிருக்கும் பாக்கியராஜ், டி.ஆர். போன்றோரும் முக்கியமானவர்களே. இடையே வந்து இடையே சென்று விட்டாலும் வடிவேலுவின் அரசியல் பிரவேசமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

சினிமாவிலும் அரசியலிலும் இருந்தாலும் லட்சிய நடிகர் என்ற பெயரெடுத்த எஸ்.எஸ்.ஆரும் முக்கியமானவர். பூம்புகார் படத்தில் கோவலனாக நடித்தவர். கட்சி, அரசியல் என்று வராமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருப்பார். 

நடிகர்கள் மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டுமா என்று அந்த மரபை உடைக்கும் வகையில் சீமானின் அரசியல் பிரவேசம் முக்கியமானது. அடுத்து ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை மற்றும் நடனத்துறைகளைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வருவது முக்கியமானது. அதெல்லாம் காலப்போக்கில் நடக்கும்.

கமல் – விஜயகாந்த் கோட்டா முடிந்து விட்டால் அந்த இடத்திற்கு விஜய்யோ அஜித்தோ சிம்புவோ தனுஷோ வருவார்கள். தமிழ்நாட்டுக்குக் கிரகங்கள் அப்படி இருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்த பிரபலம் வாய்ந்தவர்களாக சினிமாக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அப்புறம் கிரிக்கெட் பிளேயர்கள் இருக்கிறார்கள். அது சரி ஏன் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கு முயற்சித்துப் பார்க்கக் கூடாது? தோனி இறங்கினால் மற்றவர்களும் தைரியமாக இறங்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன். பார்ப்போம். காலம் நமக்கு என்னவெல்லாம் தரப் போகிறதென்று?

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...