25 May 2022

குழந்தைகளிடம் அடி வாங்காமல் தப்பித்துக் கொள்ளுங்கள்!

குழந்தைகளிடம் அடி வாங்காமல் தப்பித்துக் கொள்ளுங்கள்!

            குழந்தைகள் பெரியவர்களின் மனநிலைக்கு வந்து விட்டார்கள். பெரியவர்களின் மனநிலை என்ன என்கிறீர்களா? குழந்தைகளை அடிப்பதென்றால் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும் அழுவதைத் தவிர என்ற தைரியத்தில் துணிச்சலாக அடிப்பார்கள். பின்னி பெடலெடுத்து விடுவார்கள்.

            இப்போது அந்தப் பெரியவர்களின் மனநிலையைக் குழந்தைகள் கைப்பற்றி விட்டார்கள். மடியில் உட்கார்ந்திருக்கும் குழந்தை கூட ‘வேண்டாம் போ’ என்று சர்வ சாதாரணமாக கன்னத்தில் ஓங்கி அறைகிறது. செல்லக் குழந்தைகள் அப்படித்தான் இருக்குமாம்.

            குழந்தைகளைத் தூக்குபவர்கள் கொஞ்சம் கவனமாகத்தான் தூக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்களைத் தூக்கி எறியும் குழந்தைகளும் இருக்கின்றன. ஒரு வீட்டில் நுழையும் போது கவனமாக நுழைய வேண்டிய அவசியம் இதனால் இருக்கிறது.

            ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று போர்டு எழுதி வைத்திருக்கும் வீடுகள் கூட ‘குழந்தைகள் ஜாக்கிரதை’ என்று போர்டு எழுதி வைப்பதில்லை என்று அங்கலாய்ப்பவர்களை அதிகம் பார்க்க முடிகிறது. சின்ன குழந்தைகளாம், வளர வளர சரியாகி விடுவார்களாம். அது சரி. அவர்களுக்கு அவர்கள் குழந்தைகள் முக்கியம். நமக்கு நாம் முக்கியம் அல்லவா. கண் மண் தெரியாமல் அடிக்கும் குழந்தைகள் மண்ணுலகில் பெருகி வருகிறார்கள்.

            இந்தக் குழந்தைகளைப் பார்த்து விட்டு, இந்த ஆசிரியர்கள் என்னத்தைச் சொல்லிக் கொடுக்குறாங்க சார்? என்ற கேட்பவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களும்தான் அடி வாங்குகிறார்கள். வாட்ஸாப்பில் விதவிதமாகப் பார்க்க முடிகிறது. யார்தான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?

            பேசிப் பார்ப்பது ஒரு வழி. குழந்தைகளிடம் பேசிப் பார்க்கலாம். ஒரு சில குழந்தைகளின் பிடிவாதங்களைப் பார்க்கும் போது அங்கே பேசுவதற்கான வாய்ப்பே நமக்கு இருப்பதில்லை. குழந்தைகள்தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் அறிவுரைகளைப் பெரியவர்கள் கேட்க வேண்டியதுதான்.

            அன்பாக இருப்பது போன்ற வழிகளும் இருக்கின்றன. இன்றைய குழந்தைகள் இருக்கும் செல்லமான நிலையைப் பார்க்கும் போது நாம் செலுத்தும் அன்பெல்லாம் பற்றாக்குறை வகையறாவாகப் போக வாய்ப்புண்டு.

            இப்படியே போனால் இதற்கு இன்னும் வேறு வழிகள் இல்லையா? அந்தக் குழந்தைகள் யாரிடமாவது அடிபட்டு உதைபட்டு திருந்தினால் உண்டு என்கிறார்கள் ஒரு சிலர். வரலாற்றின் ஆதி காலந்தொட்டு அடி உதைகளே மனிதர்களைத் திருத்தியிருக்கின்றன என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள். குழந்தைகளின் மேல் அந்த அளவுக்கு ஒரு வெறுப்பு பெரியவர்களிடம் வளர்ந்து வருகிறது.

            நம்மையே எடுத்துக் கொள்ளுங்கள். நாம் போலீசுக்கா பயப்படுகிறோம்? அவர்களின் கையில் இருக்கும் லத்திகளுக்கும், துப்பாக்கிகளுக்கும்தான். அப்படி அடி, உதை, இம்சையை ஞாயம் செய்யும் குழுவினரும் நாட்டில் இருக்கின்றனர்.

            அடிப்படையில் ஒரு பய உணர்வுதான் நம்மை வழிநடத்துகிறது. அதைக் கேலிக்கூத்து ஆக்கினால் அதற்குப் பிறகு வாழ்க்கை கொடுக்கும் அடிகள்தான் நம்மை வழிநடத்த இயலும். இப்படி கருத்துச் சொல்லும் கருத்துசாமிகளும் இருக்கிறார்கள்.

            வாழ்க்கை அடிக்குமா? அடித்தால் வலிக்குமா? என்றால் அடிபட்டவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஒரு பத்தியை வைத்து என்னைக் குழந்தைகளுக்கு எதிரானவர்களின் பட்டியலில் திணித்து விடாதீர்கள். குழந்தைகளிடம் அடி வாங்கியோரின் பட்டியலில்தான் நானும் இருக்கிறேன். நீங்களும் இருப்பீர்கள் என்றால் இந்தப் பத்தி உங்களுக்கும் பயன்படும். நாமெல்லாம் கலந்தாலோசித்து நல்லதொரு ஒரு முடிவுக்கு வர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

*****

No comments:

Post a Comment

மன்னார்குடி கோபாலர் எண்ணெய் ஆலையின் திருவிளையாடல்!

மன்னார்குடி கோபாலர் எண்ணெய் ஆலையின் திருவிளையாடல்! மன்னார்குடிக்கு ‘கோபாலர் எண்ணெய் ஆலை’ எனும் கோபாலர் ஆயில் மில்லும் சிறப்பு பெற்றதுதான்....