24 May 2022

தினம் நான்கு பக்கங்கள் அகராதியைப் புரட்டுங்கள்!

தினம் நான்கு பக்கங்கள் அகராதியைப் புரட்டுங்கள்!

            வாழ்க்கையின் பொருள் என்ன? அகராதியைப் புரட்டிப் பாருங்கள் வாழ்க்கை என்பதற்கு என்ன பொருள் போட்டிருக்கிறது என்று. நான் அகராதி வைத்திருக்கிறேன், இப்படி ஒரு யோசனை தோன்றியதில்லை என்று நீங்கள் சொல்லலாம்.

            எல்லாவற்றிற்கும் அகராதியையா புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். ஏதோ பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் டீச்சர் சொன்னதற்காக பத்து வார்த்தைகளுக்குப் புரட்டிப் பார்த்த புத்தகம் அது.

            எம்மாம் பெரிய புத்தகம் அது. எவ்வளவு பக்கங்கள். ஆனால் யார் படிக்கிறார்கள் சொல்லுங்கள். இருந்தாலும் அவ்வளவு பக்கங்களை வீணடித்து எவ்வளவு அகராதிகள் அச்சடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூட நீங்கள் கவலைப்படலாம்.

            இப்படிச் சொல்லி விடுவதால் அகராதி தேவையில்லை என்று ஒட்டுமொத்தமாக முடிவு கட்டி விட முடியாது. இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று ஓரளவுக்குதான் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்.

            அகராதி தேவைப்படுகிறது. அது ஒரு குறிப்பேடு போன்றது. எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காகத்தான் நமக்குக் குறிப்பேடு தேவைப்படுகிறது. அது போல எல்லா சொற்களையும் ஞாபகத்தல் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காகத்தான் அகராதி என்று வைத்துக் கொள்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

            நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவ்வளவு சொற்களை அகராதி தன்னகத்தே கொண்டுள்ளது. இருந்தும் என்ன அதனால் அதில் ஒரு சொல்லைப் பயன்படுத்திப் பேச முடியுமா என்றால் முடியாது. அதுதான் ஆண்டவனின் படைப்பில் உள்ள விநோதம்.

            அகராதியினால் நமக்கு வேண்டிய சொற்களைத் தர முடியுமே தவிர அதனால் எந்தச் சொல்லையும் பயன்படுத்த முடியாது. அகராதி நமக்காகப் படைக்கப்பட்ட தியாகி.

            சொற்களுக்காக அகராதி இருக்கிறதென்றாலும் அதிலுள்ள அனைத்துச் சொற்களையும் பயன்படுத்திப் பேசிக் கொண்டிருக்க முடியாது. அதிலுள்ள சொற்கள் புரிய வேண்டுமே.

            நமக்குப் பொழுது போகவில்லை என்பதற்காக அகராதியைப் பார்த்து பொருளைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்போம். எல்லாருக்கும் அப்படி முடியுமா? பொழுது போகவில்லை என்றால் அகராதியைத்தான் பார்க்க வேண்டுமா என்ன? எவ்வளவு இருக்கிறது மெகா சீரியல், கிரிக்கெட், ஸ்டேஜ் ஷோ என்று.

            நமக்குத் தேவையான சொற்கள் நம்மிடமே இருக்கிறது. அகராதியில் தேட வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் அகராதியைப் பயன்படுத்தாமல் விட்டு விடக் கூடாது என்பதற்காகப் புலவர்கள் பொருள் தேடி அறியக் கூடிய சொற்களைப் பயன்படுத்திச் செய்யுள்களை எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்கள் அகராதியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே செய்யுள்களை எழுதினார்களோ?

            செய்யுள் என்ற சொல்லையே எடுத்துக் கொள்ளுங்கள். அதை பாட்டு என்று சொல்லலாம். கவிதை என்றும் சொல்லலாம். இருந்தாலும் செய்யுள் என்று சொல்கிறார்களே. அகராதியை வாழ வைப்பதற்குத்தான் இப்படிப்பட்ட சொற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

            என்னிடம் இருக்கின்ற புத்தகங்களில் என்னால் படிக்க முடியாமல் இருக்கின்ற ஒரே புத்தகம் அகராதிதான் என்று சொல்பவர்களைப் பார்த்துப் பெருமை படுகிறேன். ஏனென்றால் நானும் இன்னும் வாங்கி வைத்த அகராதியைப் படிக்கவில்லை.

            அப்பப்பா எவ்வளவு சொற்கள். அந்தச் சொற்கள் அகராதியில் இருப்பதால் மனிதகுலம் நலமாக நடமாடிக் கொண்டிருக்கிறது. அத்தனையும் மூளைக்குள் சென்றால் கொஞ்சம் சிரமம்தான்.

            என்னதான் இருந்தாலும் தினம் நான்கு பக்கங்கள் அகராதியைப் புரட்டுங்கள். உங்கள் புரட்டலில் பொருள் அறியாத சொற்கள் ஒன்றிரண்டு சிக்காமலா போய் விடும். அந்தச் சொல்லின் பொருள் என்ன என்று வாட்ஸ் அப்பிலோ, பேஸ்புக்கிலோ கேட்டுப் போடுங்கள். சொற்களின் பொருளை மக்கள் என்னமா ஆர்வமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அப்போது புரிந்து கொள்வீர்கள்.

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...