23 May 2022

அண்ணாச்சி கடைகளை நாடுங்கள்!

அண்ணாச்சி கடைகளை நாடுங்கள்!

            எதுக்கு சார் சூப்பர் மார்கெட்டெல்லாம் போறீங்க? நம்ம அண்ணாச்சி கடையில வாங்குங்க என்று ஆளாளுக்குச் சொன்னதில் இப்போதெல்லாம் அண்ணாச்சி கடைதான். நம் ஊரில் இருக்கின்ற ஒருவருக்குப் பிழைப்புக் கொடுத்தது போல ஆகிறது பாருங்கள். இதற்கு முன்பு இப்படியெல்லாம் நாம் ஊர்க்காரர்களைப் பிழைக்க விட்டிருக்கிறோமா? இருந்தாலும் காலம் மாறுகிறது. நாம் அனுசரித்துக் கொள்ள வேண்டும்.

            நம் ஊரில் இருப்பவர்கள் வைத்திருக்கும் கடைகள் எல்லாம் அண்ணாச்சி கடைகள்தான். கடை வைத்திருப்பவர் வயதளவில் உங்களுக்குத் தம்பியாகவும் இருக்கலாம். இருந்தாலும் அவர் அண்ணாச்சிதான். மரியாதையைக் குறைத்துத்தான் தரக் கூடாது. கூட்டிக் கொடுப்பதில் பிழையில்லை.

            சூப்பர் மார்கெட்டை அண்ணாச்சி கடையின் வரிசையில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. அந்தக் கடையை வைத்திருப்பவர்கள் நம்மூர் அசாமிகளாக இருந்தாலும்.

            நம்மூரில் இருப்பவர்களுக்கு அவ்வளவு செலவு செய்து எங்கே ஒரு சூப்பர் மார்கெட்டை வைக்க முடிகிறது சொல்லுங்கள். எல்லாம் பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து மாவட்டக்காரன், பக்கத்து ஸ்டேட்காரன் வந்துதான் வைக்க வேண்டியிருக்கிறது.

            கூடிய விரைவில் வெளிநாட்டுக்காரனும் வந்து வைக்கப் போகிறான் என்கிறார்கள். அவனவன் அவனவன் ஊரில் மளிகைக் கடை வைத்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா? மளிகை வியாபாரம் அப்படி. எங்கு வைத்தாலும் ஓடித் தொலைகிறதே, என்ன செய்வது?

            மளிகை வியாபாரத்தை விடுங்கள். ஹோட்டல் வரை வெளிநாட்டுக்காரன் வைக்கும் போது அது ஒன்றும் அப்படி பெரியதல்ல என்பீர்கள். காப்பி கடை வரை இந்தியாவில் வைக்க வெளிநாட்டுக்காரன் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறான். அவ்வளவு காபி குடியர்களாக இருக்கிறார்கள் நம் மக்கள்.

            டாஸ்மாக் போன்ற வகையறாக்களை மட்டும் வெளிநாட்டுக்காரனுக்கு விட மாட்டார்கள் அதை அரசாங்கமே நடத்துவதால். அது ஒன்றுதான் ஆறுதல் போங்கள். நாம் குடிக்கும் பணம் நம் அரசாங்கத்துக்கே போய் சேருகிறது. நமக்கே நலத்திட்டங்களாக வந்து சேர்கிறது. எல்லாவற்றிற்கும் அரசாங்கம் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

            சூப்பர் மார்கெட் போய் வந்தால் தேவையான பொருட்களோடு நான்கு தேவையில்லாத பொருட்களையும் வாங்கி வந்து விடுகிறேன். எதிர்வீட்டுக்காரர் நீங்கள் பரவாயில்லை எனக்கு எட்டுப் பொருள்களாகி விடுகிறது என்கிறார். ஆண்டவருக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

            தேவையான பொருட்களுக்கு இடையில் தேவையில்லாத பொருட்களை வைத்து ரொம்ப சாமர்த்தியமாக வாங்க வைத்து விடுகிறார்கள் சூப்பர் மார்கெட்காரர்கள். அந்தச் சாமர்த்தியத்துக்குத்தான் அவர்கள் மார்கெட் என்று சொல்லாமல் சூப்பர் மார்கெட் என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

            தேவையில்லாத பொருட்களை அவர்கள் எடுத்துக் கொடுப்பதில்லை. அவர்கள் அங்கு வைத்திருக்கும் கூடையில் நாம்தான் எடுத்துப் போட்டுக் கொள்கிறோம் என்று நீங்கள் ஆய்வு நோக்கில் சொன்னாலும் அது சரிதான்.

            நான்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி வந்து போட்டால்தான் சூப்பர் மார்கெட் ஷாப்பிங் போனதாக நமக்கு ஒரு திருப்தியும் வந்து சேர்கிறது. பிறகு அதை பழைய ஓட்டை ஒடைசல் சாமான்கள் வாங்கிக் கொண்டு பணம் தரும் டாடா ஏஸில் போட்டு விடலாம். நூறு ரூபாய் கொடுத்து வாங்கியது என்று சொன்னாலும் ஆறு ரூபாய்க்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

            குப்பையில் போட்டால் குப்பையாகப் போகும், எங்களிடம் போடுவதால் ஆறு ரூபாய் கிடைக்கிறது என்று தத்துவம் பேசி விட்டு அவர்கள் போய் விடுகிறார்கள். இப்படி நூறு ஆறாவதுதான் சூப்பர் மார்கெட் தரும் அனுபவங்கள். சூப்பர் மார்கெட்டுக்கு ஆறு நூறாகி விடும். அதற்குதான் இந்த மார்கெட் உத்தியே.

            அண்ணாச்சிக் கடையில் இந்தப் பிரச்சனை இருக்காது. தேவையான பொருளுக்குக் குறைவாகவே வாங்கி வருகிறேன். எந்நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதால் நின்று வாங்க அலுப்பு பட்டுக் கொண்டு ஏதோ வந்தோம் என்பதற்காக வாங்கி வரச் சொன்ன பொருட்களில் நான்கைந்தைச் சொல்லி வாங்கிக் கொண்டு ஓடி வரத் தோன்றி விடுகிறது. இப்படி ஒரு அனுபவம் வேறெந்த கடையிலும் கிடைக்காது.

            அண்ணாச்சியும் சட்டுப்புட்டுன்னு சொல்லித் தொலைச்சிட்டு சாமாஞ் செட்டுகளை எடுத்துத் தொலைஞ்சிட்டுப் போங்கன்னு சிரிச்சிக்கிட்டெ சொல்வாரு பாருங்க. அந்தச் சிரிப்புக்கு மயங்கியே வாங்க வந்த பொருள்களில் பாதி மறந்து பாதியைத்தான் வாங்கிக் கொண்டு போகிறது போல ஆகி விடும்.

            அண்ணாச்சிக் கடைக்குப் போனால் இப்படியாகப் பணமும் மிச்சம். அதையும் உடனடியாகக் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அக்கௌண்ட் வைத்து அடுத்த மாசமும் கொடுக்கலாம். அப்படி ஒரு ஐந்து பர்சென்ட் என்று வட்டிப் போட்டாலும் அந்தப் பணமும் மிச்சம்.

            ஆகவே அண்ணாச்சி கடைகளை நாடுங்கள். ரொம்பவும் கடன் வைத்து விடாதீர்கள். அவரும் பாவம் பேங்கிலிருந்து லோன் வாங்கித்தானே கடை வைத்திருக்கிறார். அவரிடம் நாம் வைத்திருக்கும் கடனை அடைத்தால்தான் அவர் பேங்கில் வாங்கி வைத்திருக்கும் கடனை அவர் அடைக்க முடியும்.

            தான் கடன் வாங்கி கடை வைத்திருப்பதால் தன்னிடம் வாங்குபவர்களுக்கும் அதே ரீதியில் கடன் கொடுத்தும் வியாபாரம் செய்யும் ஒரே ஜீவன்கள் என்றால் ஊரெங்கிலும் இருக்கும் அண்ணாச்சிகள் மட்டும்தான்.

            உங்கள் வீட்டில் எந்த விஷேஷம் என்றாலும் அண்ணாச்சிகள் வந்து நிற்பார்கள். சூப்பர் மார்கெட் முதலாளிகள் எனக்கென்ன என்பது போல அவர்கள் கடையின் ஏசிக்குளே நிற்பார்கள். பொருட்களை வாங்கி வெளியே வந்து விட்டால் உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தம் அறுந்து விடுவதாக நினைக்கிறார்கள்.

            அண்ணாச்சிகள் உணர்வு பூர்வமானவர்கள். நம்ம கடையில வாங்கியாந்து வடை போட்டீங்களே, அது அம்புட்டு டேஸ்ட்லா, அதாங் உங்க கைப்பக்குவம்ங்றது என்று நாலு வார்த்தை சொல்லி விட்டுதான் போவார்கள். அவர்கள்தான் அண்ணாச்சிகள்.

*****

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...