15 May 2022

மொழி அபிமானிகளே போய் வாருங்கள்!

மொழி அபிமானிகளே போய் வாருங்கள்!

            நடிகர்கள் பல்துறை வித்தகர்களாகப் பரிணமிக்கிறார்கள். ஆய்வு நடிகராக அற்புதமான நடிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார் கங்கனா ரணாவத். சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது தமிழ் என்ற ஆய்வாளர் நடிப்பைக் கேட்டதும் அநேகமாக நாகஸ்வாமியின் பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் என்பதை ஊகித்துக் கொண்டேன். அவர் புரட்சிகரமான நடிகர்தான். ஓர் ஆண் பயோபிக்கில் ஒரு பெண் நடிக்கும் முதல் பயோபிக் அதுவாகத்தான் இருக்கும்.

            நீங்களே சொல்லுங்கள் யார் சமஸ்கிருதம் வேண்டாம் என்றார்கள். அவர்கள்தான் எங்கள் மொழிக்கு நீங்கள் வேண்டாம் என்றார்கள். தேவபாஷை என்றார்கள். நல்லது நமக்கு மனித பாஷை போதும் என்று இருந்தோம். இப்போது தேவபாஷையை மனிதர்கள் வளர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

            இங்கு தமிழ்நாட்டில் தமிழை வளர்க்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. பேச்சு மொழியாக இருக்கும் தமிழுக்கே அந்த கதி. மற்றபடி சமஸ்கிருதத்தை வளர்க்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. எந்த மொழியாக இருந்தாலும் அதுவாக வளர்ந்தால்தான் நன்றாக இருக்கும்.

            மக்களுக்குத் தெரியும் அவர்களுக்குத் தேவையான மொழி எதுவென்று. அதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களே வளர்த்துக் கொண்டு போவார்கள். இங்கு ஆங்கிலத்தை வளர்க்க யார் இயக்கம் கண்டார்கள் சொல்லுங்கள்.

            தெருவுக்கு தெரு ஸ்போக்கன் இங்கிலீஷ் சென்டர்கள் இருக்கின்றன. எந்த ஆங்கில வளர்ச்சிக் கழகமும் அதற்கு உதவுவதாகவும் தெரியவில்லை. பைசா காசு நிதியுதவி வழங்குவதாகவும் தெரியவில்லை.

            எல்லா மொழிகளும் இணையத்தில் இருக்கின்றன. எந்த மொழியை வேண்டுமானாலும் யூடியூப்பைப் பார்த்தே கற்றுக் கொள்ளலாம். இனிமேல் நிறுவனங்கள் ஏற்படுத்திதான் ஒரு மொழியை வளர்க்க வேண்டும் என்பதில்லை. பிடித்த மொழியை, தேவையான மொழியை மக்களே பேசி, எழுதி, புழங்கி வளர்த்துக் கொள்வார்கள்.

            மக்களின் பொருளாதராப் பற்றின் முன் மொழிப் பற்று இனிமேல் போட்டி போட முடியாது. எனக்குத் தெரிந்த தமிழாசிரியர் பிள்ளைகளே சாப்ட்வேர் இன்ஜினியர்களாகத்தான் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பணியாற்றுகிறார்கள். யாரும் தமிழாசிரியர்களாகவோ, தமிழ்நாட்டில் பணியாற்றக் கூடியவர்களாக பரிணமிக்கவில்லை. அப்படி பரிணமிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

            அவர்களின் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சம் டமிள் பேசுகிறார்கள். அதுவும் அவர்களை டமிளர்கள் என்று காட்டிக் கொள்ள. ஆங்கிலத்தில் பிச்சு உதறுகிறார்கள். ஆங்கிலம் அவர்களின் தாய்மொழியாகி விட்டது.

            உங்களுக்குப் பிடித்தமாயிருக்கிறது என்பதற்காக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம். அதை உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளலாம். வருங்காலத்தில் உங்கள் மொழியைப் பேசும் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொண்டு அதனிடமும் பேசிக் கொண்டிருக்கலாம். அது உங்களது உரிமை.

            உங்களுக்குப் பிடித்த மொழியை இன்னொருவர் மேல் திணிப்பதை ஒரு கடமையைப் போலச் செய்யாதீர்கள். அப்படி ஒவ்வொருத்தரும் செய்ய ஆரம்பித்தால் ஒரு மனிதன் எத்தனை மொழிகளைக் கற்றுக் கொள்வது? மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குள் மனிதரது ஆயுள் முடிந்து விடும்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...