14 May 2022

குறு இலக்கியங்கள் ஒரு குறுகிய பார்வை

குறு இலக்கியங்கள் ஒரு குறுகிய பார்வை

            மலம பித்தா பித்தாத்தே. எந்த மொழிச்சொல்? ரொம்ப அழகாக இருக்கிறது. கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

            தமிழ்மொழிப் பாடல்களில்தான் இப்படிப்பட்ட மொழிப் பாடல்களை அறிமுகப்படுத்த முடியும். தமிழுக்குத்தான் அந்தப் பெருந்தன்மை உண்டு.

            பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்று தமிழ்ப் புலவர் பாரதிதானே சொல்லியிருக்கிறார். மலம பித்தா பித்தாத்தே நல்ல சாத்திரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

*

            எனக்குப் பாடல் கேட்க பிடிக்குமா? பஸ்ஸில் போகும் போது போட்டால் கேட்பேன். தனிமையில் போட்டால் டென்ஷனாகி விடுவேன். அந்த அளவில்தான் இருக்கின்றன பாடல்கள். கும்பலாக ரசிக்கலாம். தனிமையில் ரசிக்க முடியாது. என்னவோ அப்படி ஒரு வியாதி எனக்கு.

*

            கவித்துவமாக வாழ்க்கை இருக்க வழி இருக்கிறதா? ஏன் இல்லாமல்? தயவுசெய்து கவிதை மட்டும் எழுதாதீர்கள். வாழ்க்கை கவித்துவமாகத்தான் இருக்கிறது.

*

            நிறைய எழுதவில்லை என்று எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள். எப்போதும் புல் மீல்ஸையே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. இடையிடையே சிற்றுண்டியும் தேவையாக இருக்கிறது. இது சிற்றுண்டி. டீயை மட்டும் நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள். எனக்குக் கொதிப்பாக எழுதுவது பிடிக்காது.

*

            யார் படத்தை நான் விரும்பிப் பார்ப்பேன்? என் படத்தைத்தான். என்னிடம் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட கிடையாது. பிறகெப்படி என்றால், செல்பி எடுத்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்வேன். பிறகு டெலிட் செய்து விடுவேன். அப்போதுதானே நான் மட்டும் பார்த்ததாக முடியும். நான் மட்டும் என்றால் இன்னொருவருக்கான வாய்ப்பை அழித்து விட வேண்டுமல்லவா.

*

            எதாவது அறிவுரை சொல்லுங்கள். ஒன்றும் கேட்காதே ஓடி விடு. ஆகா எவ்வளவு சிறந்த அறிவுரை. இதைச் சொல்லும் நானாக இருந்தாலும் மகானாகத்தான் இருக்க வேண்டும்.

*

            அப்பாவிடம் என்ன பிடிக்கும்? அப்பாவிடம் என்ன பிடிக்கப் போகிறது, அவர் சட்டைப் பையில் வைத்திருக்கும் பணத்தைத் தவிர. எந்த அப்பா நமக்குப் பிடித்ததைக் கொடுப்பார்? எல்லார் அப்பா போலத்தான் என் அப்பாவும். அறிவுரைகளை நிறைய கொடுக்கிறார். நான் வாங்கிக் கொண்டால்தானே. அதனால் எல்லா அறிவுரைகளும் அவரிடமே தங்கி விட்டன. நான் கொஞ்சம் அப்படி இப்படி போனதுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...