போர்களின் பின்னுள்ள நுண்ணரசியல்
இந்த உலக அரசியல் போர்களை விரும்பாதது போல நடிக்கலாம். ஆனால்
அதற்குப் போர்களின் மீது உள்ளூர விருப்பம் உண்டு. தன் உள்ளார்ந்த விருப்பங்களை நிறைவேற்றிக்
கொள்ள அது போர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.
போர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் வியாபார சூழ்ச்சி அகோரமானது.
ஆயுதங்களை விற்றுக் காசு செய்வதற்கென்றே அரசாங்கங்களோடு நிறுவனங்களும் பெருகி விட்ட
நூற்றாண்டுகளில் ஒரு போர் நிகழாமல் இருப்பதே ஆச்சரியம்தான்.
போர்களின் பின்னணியில் இருக்கும் அறிவியலும் ஆபத்தின் அரூபங்களைக்
கொண்டது. அது தன் ஆயுத கண்டுபிடிப்புகளுக்கு ஒரு பரிசோதனைக் களத்தை எதிர்பார்க்கிறது.
ஆயுதங்களின் பரிசோதனைகளுக்குப் போர்களே வழியமைத்துக் கொடுத்துப் பரிசோதனை பயங்கரங்களின்
பசியாற்றுகிறது.
இராணுவங்களின் வலிமையையும் ஒவ்வொரு நாடும் கூர் தீட்டிப் பார்த்துக்
கொள்ள ஆசைப்படுகின்றன. அதற்கும் போர்தான் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கிறது.
ஊடகங்களும் செய்தித் தளங்களும் அமைதியில் அமைதியிழந்து போய்
விடுகின்றன. போர்கள் போன்ற சங்கதிகள் அவற்றுக்குப் புதிய உற்சாகத்தை அளிக்கின்றன. புதுப்புதுச்
செய்திகளை வழங்குகின்றன. ஆகவே இந்த ஊடகங்கள் அமைதியை ஆதரிப்பது போலக் காட்டிக் கொண்டு
போர்களை உள்ளூரத் தூண்டி விடுகின்றன.
உலகளவில் உருவாக்கி வைத்திருக்கும் அமைப்புகளுக்கும், நாட்டாண்மைக்காரர்களுக்கும்
நல்லதொரு பொழுதுபோக்கும் அறிக்கை விட வாய்ப்புகளும் போர்கள் நடைபெற்றால்தான் ஏற்படுகின்றன.
அவையும் அப்படித்தான் போர்களை விரும்பாததைப் போலப் போர்களை நிறுத்த வேண்டும் என்று
அறிக்கை விட்டுத் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கின்றன.
ஒவ்வொரு போர்களின் போதும் அரசியல்கள் தங்களுக்கான ஆதாயங்களை
இப்படியும் அப்படியுமாகப் பகடைக்காய்களை உருட்டிப் பெற்றுக் கொள்கின்றன. தலைவர்களுக்குத்
தங்களுக்கான ஆளுமைகளை நிரூபிக்க வாய்ப்புக் கிடைத்து விட்டதாகப் போர்களின் மீது ஒரு
பூரிப்பு உண்டாகி விடுகிறது.
போர்களுக்கு நடுவே பிதுங்கிச் சீரழியும் பொதுமக்கள்தான் பாவம்.
அவர்களால் எந்தப் போரையும் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் எதனால் ஒரு போர் உருவாகிறது
என்பதைப் புரிந்து கொள்வதற்குள் அவர்களின் வாழ்வாதாரம் முடிந்து போயிருக்கும். அல்லது
போர் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். அதுவரை அவர்கள் பிழைத்திருந்தால் பெரிது. பிழைத்திருந்தாலும்
போருக்குப் பிந்திய வாழ்க்கைத் தொடங்கி நடத்துவது என்பது அரிதினும் அரிது.
வழக்கம் போல் தலைவர்கள் தங்கள் அறிக்கைகளோடு போர் குறித்த ஒரு
முடிவை எட்டியிருப்பார்கள். ஊடகங்கள் சமாதான நடவடிக்கைகளால் அமைதி திரும்பி விட்டதாகப்
புளங்காகிதம் கொள்ளும். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசியல்
ஆதாயங்களை ஒரு சிறு இழப்பில்லாமல் அறுவடை செய்து முடித்திருக்கும்.
மேற்படி உண்மைகள் ரஷ்யா – உக்ரைன் போருக்கு மட்டுமல்ல. இதுவரை
உலகில் நடந்து முடிந்திருக்கும் அனைத்துப் போர்களுக்கும் பொருந்தும்.
பொதுமக்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை
மீண்டும் புதிதாய்த் தொடங்க வேண்டும். எழுந்து நடக்கத் தொடங்கிய குழந்தை மீண்டும் நம்பிக்கையோடு
எழுந்து நடக்க முயற்சிப்பதைப் போலத்தான் அது. எது நடந்தாலும் வாழ்க்கையில் நம்பிக்கையையும்
முயற்சியையும் நிறுத்திக் கொள்ள முடியுமோ?
*****
No comments:
Post a Comment