கடைசி காங்கிரஸ்காரரும் இறந்தார்
எங்கள் தெருவே காங்கிரஸ்காரர்களின் தெருவாக இருந்தது. எங்கள்
தெருவின் பெயரே காமராஜர் தெருதான். எங்கள் ஊருக்கு காமராஜர் வந்த போது எங்கள் தெருவில்தான்
படிப்பகத்தைத் திறந்து வைத்திருக்கிறார். எங்கள் தெருவில் தனது புனிதமான காலடித் தடங்களால்
நடந்து சென்றிருக்கிறார்.
அப்படி ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தெருவில் இருந்தவர்கள்
காலப் போக்கில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்களாக மாறிப் போனார்கள். எம்.ஜி.ஆர்.
கட்சி தொடங்கிய போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்து பிரிந்து
போனார்கள்.
தெருவில் எல்லாரும் திராவிட கட்சிகளுக்குப் பிரிந்து சென்ற பிறகும்
துரை தாத்தா மட்டும் காங்கிரஸில் இருந்தார். தி.மு.க. காரர்களும் அ.தி.மு.க.காரர்களும்
எவ்வளவோ வற்புறுத்தியும் “நமக்குக் காங்கிரஸைத் தவிர வேற கட்சியெல்லாம் ஒத்து வராது”
என்று கடைசி வரை அந்தக் கட்சியிலேயே இருந்து விட்டார்.
துரை தாத்தா ஓட்டுப் போட ஆரம்பித்த நாளிலிருந்து காங்கிரஸ் தவிர
வேறு கட்சிக்கு ஓட்டுப் போட்டதில்லை. காங்கிரஸ் சார்பாகக் கூட்டணி கட்சிகள் நின்றாலும்
அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட மாட்டார். காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் நின்றால்தான்
ஓட்டுப் போடுவார். அப்படி இல்லாமல் போய் விட்டால் ஓட்டுப் போட போக மாட்டார். கிராமத்தில்
வேறு யாரையும் அப்படி ஒரே கட்சிக்கு மாறாமல் ஓட்டுப் போட்டவர்களைக் கண்டுபிடிப்பது
சிரமம். மற்றவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள்தான்.
துரை தாத்தா பேச ஆரம்பித்தால், “காந்தி போல ஒரு மனுஷர் இருக்க
முடியுமா?” என்பார். “நேரு மாதிரியெல்லாம் சொத்தையே நாட்டுக்குக் கொடுத்த ஆளுங்கள இனிமே
பாக்க முடியுமா?” என்பார். “காமராசர் மாதிரி குடும்பத்துக்குன்னு தனக்குன்னு சொத்து
சேர்க்காத ஒரு தலைவர்ர பாக்க முடியுமா?” என்பார்.
இப்படி காங்கிரஸைப் பற்றி எதைப் பேசினாலும் ஒரு கேள்வியோடுதான் முடிப்பார். நீங்கள்
என்ன பதில் சொல்வீர்கள்?
வீட்டில் இருக்கும் போது இடுப்பில் ஒரு வேட்டி, தோளில் ஒரு துண்டு.
அவ்வளவுதான் அவரது ஆடை. வெளியில் கிளம்பினால் மட்டும் ஒரு வெள்ளை அரைக்கை சட்டைப் போட்டுக்
கொள்வார். காங்கிரஸைப் பற்றியோ, காங்கிரஸ் தலைவர்கள் பற்றியோ பேச ஆரம்பித்தால் முகம்
மலர்ந்து விடும். அவரைப் பொருத்த வரையில் காங்கிரஸ் தலைவர்கள் மட்டும்தான் தலைவர்கள்.
மற்ற யாரையும் அவர் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார், தலைவர்களாக மதிக்கவும்
மாட்டார்.
துரை தாத்தா இறந்த பிறகு காங்கிரஸ்காரரே இல்லாத தெருவாக எங்கள்
தெரு மாறி விட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியவர்கள் கூட எங்கள் தெருக்களில் இப்போது
சிலர் இருக்கிறார்கள். காங்கிரஸ் பக்கம் யாருமில்லை.
இப்போது காங்கிரஸ் தேர்தலில் சந்திக்கும் தோல்விகளைப் பார்க்கும்
போது ஒவ்வொரு தெருவிலும் இருந்த துரை தாத்தாக்கள் இறந்துப் போயிருப்பதைப் புரிந்து
கொள்ள முடிகிறது. காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதிக் காலத்தில் உருவாக்கிய தொண்டர்களே
போதும் என்று இருந்து விட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த
துரை தாத்தாக்கள் போன்றோரும் புதிதாகத் தொண்டர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலே
இருந்து விட்டார்கள் போல.
*****
No comments:
Post a Comment