10 Apr 2022

குறைத்துக் கொள்ள நிறைய இருக்கிறது

குறைத்துக் கொள்ள நிறைய இருக்கிறது

            இந்த வாழ்க்கையில் எவ்வளவோ குறைத்துக் கொள்ளலாம். இவ்வளவு பயணங்கள், இவ்வளவு அலைச்சல்கள், இவ்வளவு நுகர்வுகள், இவ்வளவு பேராசைகள் என்று குறைத்துக் கொள்ள வேண்டிய எவ்வளவோ இருக்கின்றன.

            இரு சக்கர வாகனங்களும், மகிழ்வுந்துகளும் இருப்பதால் நிகழும் அநாவசியப் பயணங்கள் அதிகம். கடைத்தெருக்கள் பெருகி விட்டதால் வாங்கும் நுகர்வுகளும் அதிகம். உணவு விடுதிகள் பெருகி விட்ட பின்பு உண்ணும் உணவு வகைகளும் அநேகம். உடுத்தும் ஆடைகளுக்குக் கணக்கு வழக்குகள் இல்லை. வீடு முழுவதும் பொருட்களால் நிறைந்திருக்கின்றன.

            வங்கிக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கந்து வட்டிக் கடன், கடன் அட்டைகளால் பணம் பொங்கிப் பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவா ஒரு மனிதரின் வாழ்க்கைக்கு வேண்டும். ஒருவரின் கடன் விவரங்களை ஆயிரத்தெட்டு இணைய சேவை நிறுவனங்கள் சுமந்து நின்று கொண்டிருக்கின்றன.

            பொழுதுபோக்கு கரையில்லாத நதியைப் போல நாலா பக்கமும் பெருக்கெடுத்து ஓடுகிறது. கையடக்க அலைபேசிக்குள் பாட்டு, நாடகம், நாட்டியம், கேளிக்கை நிகழ்வுகள் என கண்களையும் காதுகளையும் நிறைத்துக் கொண்டு நுழைகின்றன.

            சிறு பொழுதேனும் அல்லது ஒரு பொழுதேனும் ஓய்வின்றி சமூக ஊடகங்களில் மேய்ந்து கொண்டிருக்கின்றன மனக்கண்கள். கொஞ்சமேனும் குறைத்துக் கொள் என்று சொல்ல வாழ்க்கையில் நிறைய கூறுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

            எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்கிறோம் நில்லாமல் யோசிக்காமல் சுய சிந்தனை இல்லாமல். நோயென்றோ வாழ்க்கையைச் சில காலம் முடக்கிப் போடுகிறது. மற்றபடி மனிதர்கள் யாரும் முடங்குவாரில்லை.

            நடத்தலின் வேகம், மிதிவண்டியின் வேகம் போதும். அதற்கு மேல் உள்ள தூரங்களில் கடந்து போய் தினந்தோறும் செய்ய என்ன இருக்கிறது? அதற்கு மேல் உள்ள தூரங்களில் நிகழ்த்த வேண்டியவற்றை அங்கங்கு உள்ள மனிதர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்ன?

            மூன்று வேளைக்கு நான்கு வேளைகள் ஐந்து வேளைகள் இடையிடையே சிற்றுண்டிகள், பேருண்டிகள் என்று அதிகம் செய்து கொண்டு உடல் நோய்களை அதிகரித்துக் கொள்ள வேண்டுமா என்ன?

            பணம் வருகிறது என்பதற்காக பொருட்களால் வீட்டைப் போட்டு அடைத்துக் கொள்ள வேண்டுமா என்ன? விதவிதமாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாற்பது ஐம்பது ஆடைகள் வேண்டுமா என்ன?

            விழாக்களுக்கு நாற்பது ஐம்பது நபர்களுக்கு மேல் தேவையா என்ன? எண்ணிக்கையில் அதிகமாய் நபர்கள் வரும் போது அவர்களின் முகம் பார்க்கக் கூட நமக்கு நேரமும் வருவோரை விசாரிக்க வாய்ப்பும் இருக்குமோ என்ன?

            இயற்கையின் மேலிருக்கும் நம் அன்பும் அக்கறையும் நாம் எளிமையாக இருப்பதில் இருக்கிறது. சிறியதாய் வாழ்வதில் நம் இயற்கை நேயம் புலப்படுகிறது. நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம்மைச் சுற்றியுள்ள இயற்கை பரிசுத்தமாகவும் பேரன்போடும் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...