எரியூட்டும் வரலாற்றில் பிரகாசிக்கும் சத்தம்
வரலாற்றை எரியூட்டுகிறார்கள்
பொசுங்கிப் போய் விட்ட சாம்பலில்
தடயங்கள் இருக்காதென்ற நம்பிக்கையில்
திருத்தி எழுத முற்படுகிறார்கள்
கார்பன் கணிப்பில் உண்மைகள்
வெளிப்படும் போது
புவியியலின் மீது குண்டு
வீசுகிறார்கள்
சிதிலமாகிக் கிடக்கும் நிலப்பரப்பில்
சான்றுகள் கிடைக்காதென்ற
நம்பிக்கையில்
நியாயங்களை மாற்றிச் சொல்ல
முற்படுகிறார்கள்
புவியின் அடியாழத்தில் பிணங்கள்
அள்ளப்படும் போது
அமைப்பு விதிகளில் அவசர மாற்றங்களைச்
சேர்க்கிறார்கள்
குரல் எழுப்ப கண்டனங்களும்
கேள்வி கேட்க கட்டுபாடுகளும்
சிறுநீர் பீய்ச்ச முன்அனுமதி
பெறப்படலும் உண்டென்பதை
பொது இடங்களில் கொட்டை எழுத்தில்
எழுதி வைக்கிறார்கள்
அழுத்தப்படும் காற்று வெடிக்கும்
போது
மாபெரும் சத்தம் எழும் என்பதை
ஒவ்வொரு நூற்றாண்டிலும்
எப்படிதான் மறந்து போகிறார்களோ
கண்ணும் காதும் உள்ள நினைவுள்ள
மனிதர்கள்
*****
No comments:
Post a Comment