7 Apr 2022

பகிர்தலின் அறம்

பகிர்தலின் அறம்

            நாம் அதிதீவிரமான தகவல் யுகத்தில் இருக்கிறோம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகவல்கள் நம்மை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தகவல் யுகத்திற்கு முன்பிலிருந்தும் இதுதான் நிலை. வந்து சேரும் தகவல்களின் எண்ணிக்கையில் கூடுதல் குறைவு இருந்தாலும் தகவல்கள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

            உங்களுக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால் போதும் அது குறித்து ஆயிரம் தீர்வுகளைச் சொல்ல ஐந்து பேர் இருப்பார்கள். சராசரியாக ஒருவருக்கு இருநூறுக்கும் மேற்பட்ட தீர்வுகள் தெரியும் என்பதுதான் மேற்படி வாக்கியத்தின் உள்ளடக்கம்.

எல்லாருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பது இங்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத் தீர்வு சொல்லும் குணமும் அவரவர்களை அறியாமல் அவரவர்களுக்கு வளர்ந்தும் இருக்கிறது.

            சிக்கல் என்னவென்றால் எல்லாரும் அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை நுட்பமாக நோக்குகிறார்களே தவிர தங்களுடைய பிரச்சனைகளை நோக்க தவறுகிறார்கள். தங்கள் பிரச்சனைகளைப் போக்குவதற்கான சொந்த முயற்சிகளை எடுக்க யோசிப்பவர்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளைப் போக்கிக் கொள்வதற்கு அவர்கள் பலவிதமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பிரயாசைப் படுகிறார்கள்.

            நம் மக்களைப் பொருத்த வரையில் இது மரபு  வழியாகத் தொடர்ந்து வரும் பழக்கம். இந்தப் பழக்கத்தின் தொடர்ச்சியையே அவர்கள் சமூக ஊடகங்களிலும் தங்களையும் அறியாமல் பின்தொடர்கிறார்கள்.

            சமூக ஊடகங்களில் ஒருவர் சொந்தமாகப் பதியும் தகவல்களை விட பகிரும் தகவல்கள் அதிகமாக இருக்கின்றன. தான் பகிரும் ஒரு தகவல் யாரோ ஒருவருக்கு எப்படியோ பயன்படும் நம்பிக்கை பகிர்வோருக்கு நிரம்பவும் அதிகமாக இருக்கிறது. அத்துடன் அமையாமல் அவ்வண்ணமே யாரோ ஒருவர் பயன்பெறக் கூடிய வகையில் நம்மையும் பகிரச் சொல்லி வேண்டுகோள் விடுப்பதும் தொடர் கதையாகிறது.

            மனதுக்கும் ஒரு பொதுவான குணம் இருக்கிறது. அது இருக்கிற பிரச்சனையை விட்டு இல்லாத பிரச்சனையை நோக்கி வளைந்து கொண்டிருக்கும். இது போன்ற நிலைகளில் சமூக ஊடகங்களில் வரும் சம்பந்தமில்லாத பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்திச் சகட்டுமேனிக்குப் பகிரச் செய்து விடுகிறது.

            தகவல்களைப் பகிரவும் மற்றவர்களுக்கு அதனால் நன்மை விளைவிக்க நினைப்பதும் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்குப் பகிரும் தகவல்களால் விளையப்போகும் நன்மைகள் குறித்தும் பகிரும் தன்மைகள் குறித்த உண்மைத்தன்மை குறித்தும் அக்கறையோடு இருப்பது அவசியமாகத் தேவைப்படும் சமூகப் பொறுப்புணர்வாகும்.

            கொட்டாங்கச்சியை வைத்து தட்டாம் பூச்சியைப் பிடித்து பட்டாம் பூச்சிக்குக் கொடுத்தால் உங்களுக்கு ஆயிரம் விதமான அனுகூலங்கள் உண்டாகும் என்று பகிரப்படும் தகவல்களால் யாருக்கு எவ்வளவு நன்மை என்பதை தட்டாம் பூச்சிகளிடமும் பட்டாம் பூச்சிகளிடமும்தான் கேட்க வேண்டுமோ என்னவோ!

            பகிரும் தகவல்களுக்குப் பகிர்வோர் தார்மீகப் பொறுப்பேற்பது எந்த ஒரு நிலையிலும் ஒருவர் உறுதியாகக் கைக்கொள்ள வேண்டிய அறமாகும்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...