8 Apr 2022

நானும் இங்க் பேனாவும்

நானும் இங்க் பேனாவும்

            நான் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை இங்க் பேனாதான். பால் பாய்ண்ட் பேனாவால் எழுதக் கூடாது என்பது எழுதப்பட்ட சட்டம் போலப் பாவிக்கப்பட்டது. பால் பாய்ண்ட் பேனாக்களைக் கண்டால் முறித்து தூக்கி எறியும் ஆசிரியர்களையம் பின்னிப் பெடலெடுக்கும் ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன்.

            இங்க் பேனா பழக்கத்தால் நான் அதைப் பல்கலைக் கழகத் தேர்வுகள் வரைப் பயன்படுத்தியிருக்கிறேன். காலக் கோட்டின் எந்தப் புள்ளியில் இங்க் பேனாவுக்கும் எனக்குமான உறவு விடுபட்டது என்பதை என்னால் ஞாபக சங்கிலிகளிலிருந்து மீட்டுக் கொண்டு வர முடியவில்லை.

            இங்க் பேனாவிலிருந்து பால் பாய்ண்ட பேனாவிற்கு மாறிய பிரக்ஞையின்றியே இங்க் பேனாக்களை விடுத்து நான் பால் பாய்ண்ட் பேனாக்களை மிக நீண்ட காலம் பயன்படுத்தியிருக்கிறேன்.

            பிறகு என் ஆசிரியர்களுள் சிலரை அவ்வபோது சந்திக்கும் போது அவர்கள் என்னிடம் கேட்கும் முதன்மையான கேள்வி பேனாக்களைப் பற்றியதுதான். பிள்ளைகளை எந்தப் பேனாவால் எழுதச் செய்கிறாய் என்ற கேள்வியைத் திரும்ப திரும்ப கேட்பார்கள். அப்போதுதான் பிள்ளைகள் எந்தப் பேனாவால் எழுதுகிறார்கள் என்ற சிந்தனையே எனக்கு ஏற்பட்டது. அவர்கள் பால் பாய்ண்ட் பேனாக்களில்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

            பிள்ளைகளைப் பால் பாய்ண்ட் பேனாவால் எழுத அனுமதிக்காதே என்று என் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்ததைப் பார்த்த போது கள்ளுக்கடைகளை மூட வேண்டும் என்று சொன்ன காந்தியின் வார்த்தைகளைப் போலிருந்தன அவர்களுடைய தீர்மானமான வார்த்தைகள்.

            பின்னோக்கிப் பேனாவில் திளைத்த என் வாழ்க்கையில் நீந்திப் போய் பார்த்த போது நான் ஒரே இங்க் பேனாவை பள்ளி வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தியிருந்தது அறிய வந்தது. கேம்ப்ளின் பேனா அது. 47 ஆம் நம்பர் பேனா. கடைசி வரை அந்தப் பேனா அதை நான் கைவிடும் வரை என் கைகளிலும் பைகளிலும் இருந்தது என் நினைவுக்கு வந்தது. அதைக் கைவிட்டதை நினைத்துப் பார்த்த போது தாய் தந்தையரைக் கைவிட்டுவிட்டு வெளிநாடு சென்ற பிள்ளைகளின் நினைவுதான் எனக்கு எழுந்தது.

            பால் பாய்ண்ட் பேனாவிற்கு மாறிய போதும் ஒரே பேனாதான். ரெய்னால்ட்ஸ் லிக்யூ ப்ளோ என்ற பேனாதான் பயன்படுத்தினேன். ஒரே பேனாதான், ரீபிள் அடிக்கடி மாற்றிக் கொள்வேன். பேனா பத்து ரூபாய். ரீபிள்கள் பத்தாக வாங்கினால் நாற்பத்தைந்து ரூபாய்க்குத் தருவார்கள்.

            ரெய்னால்ட்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த பேனா உரிமத்தை ரோரிட்டோ நிறுவனத்திற்கு விற்று விட்ட பிறகு ரோரிட்டோ பேன்டா ப்ளோ பேனாவைத்தான் பயன்படுத்தினேன். ரோரிட்டோ நிறுவனம் ரீபிள்கள் போடுவதில்லை என்று கடைக்காரர்கள் சொன்னதால் ஒவ்வொரு முறையும் புதுப்புது ரோரிட்டோ பேன்டா ப்ளோவைப் பயன்படுத்தினேன். அதில் கருப்பு மையுள்ள பேனாதான் என் கைகளில் இருக்கும். சமீப ஆண்டுகளாக யுனிபால் நிறுவனத்தின் நீல நிற மையுள்ள பேனாவுக்கு மாறி எழுதி வருகிறேன்.

            என் ஆசிரியர்களின் சொற்களால் உந்தப்பட்டு பிள்ளைகளுக்கு இங்க் பேனாவை வாங்கிக் கொடுத்து நானும் இங்க் பேனாவிற்கு அவ்வபோது மாறுவதுண்டு. அவ்வபோது மாறுவது எனும் போது நீங்கள் புரிந்து கொள்ளலாம். சிகரெட் பிடிக்கும் ஒருவர் இது வரை இருபது முறைக்கும் மேல் விட்டிருக்கிறார் என்பது போலத்தான் அந்த மாற்றம் அமைந்து விடும்.

            பெரும்பாலும் இங்க் பேனா கைகளை, பைகளை மையால் நிரப்பி விடும். மை பட்ட கைகளை அலம்புவதில் இருக்கும் சிரமத்தைக் கருத்தில் கொண்டும், சட்டைப் பை மை பட்டு துவைப்பதில் இருக்கும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இங்க் பேனாவைத் தூக்கி எறிந்து விட்டு ரெய்னால்ட்ஸ் லிக்யூ ப்ளோவிற்குத் திரும்பவும் மாறி விடுவேன். பிள்ளைகளும் கொஞ்ச நாள் எழுதிப் பார்த்து விட்டு ஐந்து ரூபாய் பால் பாய்ண்டுக்கு மாறியிருப்பார்கள்.

            திரும்பவும் சமீப நாட்களில் இங்க் பேனா ஆர்வம் திடீரெனப் பொங்கி எழுந்ததும் மீண்டு இங்க் பேனாவிற்கு மாறினேன். இந்த மாற்றம் நிலைக்குமா? மீண்டும் ஒரு ஏமாற்றமாக அமையுமா? என்று எனக்கே சந்தேகம்தான். பத்து நாட்களைக் கடந்தும் நான் இங்க் பேனாவில் தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இது நிலைக்கும் என்றுதான் நம்பிக்கை ஏற்படுகிறது.

            இந்த முறை காலாகாலத்துக்கும் நான் வாங்கிப் பயன்படுத்திய கேம்ப்ளின் பேனாவைத் தேர்வு செய்யவில்லை. அதற்கு மாறாக எஸ்.ஆர்.எம். என்ற நிறுவனத்தின் 39 வது நம்பர் பேனாவைத் தேர்வு செய்தேன். மை கை படாமல் இங்க் போடுவதிலிருந்து இங்க் சட்டைப் பையில் படாமல் இருப்பது வரை ரொம்ப சௌகரியமாக இருக்கிறது இந்தப் பேனா. 

            இழுவிசையைப் பயன்படுத்தி மைக்குழலுக்குள் மையை நிரப்பி விடலாம். மையை ஊற்றி நிரப்ப வேண்டும் என்ற அவசியமில்லை. பேனாவிற்குன் மைக்குழல் தனியாக இருப்பதால் இங்க் சிதறுவதும் கைகளை நனைப்பதும் தவிர்க்கப்படுகிறது. தவிர நிப்பின் அமைப்பும் இங்க் கைகளை நனைக்காத அளவுக்கு அமைந்திருக்கிறது.

பேனாவின் விலையும் பரவாயில்லை. இருபது ரூபாய்தான். எனக்கேற்றாற்போல் பட்டையாக எழுதுகிறது. பெரும்பாலும் இந்தப் பேனாவில்தான் தற்போது எழுதி வருகிறேன். இந்த நல்ல மாற்றம் தொடர உங்களது வாழ்த்துகளையும் அன்போடு எதிர்நோக்குகிறேன். இங்க் பேனா பற்றி இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அதை அடுத்தப் பத்தியில் சொல்கிறேன்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...