3 Apr 2022

மாறுகின்ற காலக் கணக்குகள்

மாறுகின்ற காலக் கணக்குகள்

            வாழ்க்கையின் மாறுதலுக்கு ஏற்ப மாறத்தான் வேண்டி இருக்கிறது. இன்னும் வானத்தைப் பார்த்து மேகத்தை நோக்கி மழை பெய்யுமா, பெய்யாதா என்று சொல்ல முடியுமா? வானிலை ஆய்வுகள் மிகத் துல்லியமாக வெளிவரத் துவங்கி விட்டன. வானம் மேகமூட்டத்துடன் இருந்தால்தான் மழை பெய்யும் என்றில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் எங்கிருந்து மேகம் திரண்டு வருமோ, எப்படி மழை வருமோ என்பதெல்லாம் புரிவதில்லை. எல்லாம் திடீர் திடீர் என்று எப்படி வேண்டுமானாலும் நடக்கின்றன. அத்தனையையும் தொழில் நுட்பங்கள் கணிக்கின்றன.

            விதைப்புக்கு நாள் பார்த்து, அறுப்புக்கு நாள் பார்த்து, வியாபாரியிடம் விளைபொருளைப் போட நாள் பார்த்து என்ற கணக்குகள் எல்லாம் தகர்ந்து விட்டன. எல்லா நாள்களையும் இயந்திரங்களே தீர்மானிக்கின்றன. என்றைக்கு அறுவடை இயந்திரம் வருமோ அப்போது அறுவடை. எப்போது வியாபாரி வருகிறாரோ அப்போதே கணக்குகள் முடிகின்றன.

            சூரியனின் இருப்பைப் பார்த்து நேரம் சொன்ன காலங்கள் எல்லாம் மலையேறி விட்டன. நேரத்தைப் பார்ப்பதற்காகக் கையில் கடிகாரம் கட்டியிருந்த நாட்கள் கூட வானமேறி வேறு கிரகங்களுக்கே சென்று விட்டன.

நேரத்தை நம் தொழில்நுட்பங்கள் சொல்கின்றன. திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நெடுந்தொடர்களை வைத்து நேரங்களைக் கணிப்பதிலிருந்து கோயில்களில் ஒலிக்கும் தெய்வீக நேரம் சொல்லும் கடிகாரங்கள் வரை நேரங்களை நாம் கேட்காமல் சொல்லும் சூட்சுமங்கள் நிறைந்த வாழ்க்கைக்குள் நாம் இருக்கிறோம்.

            ஏழு மணி பேருந்துக்கு கிளம்பிய பயணங்கள் நின்று போய் நாம் நினைக்கின்ற நேரத்துக்கு இரு சக்கர வாகனங்களிலோ, வாடகை வாகனங்களிலோ பயணங்களை நிகழ்த்தும் கால கட்டத்திற்கு நாம் நகர்ந்த பிறகு நேரம் என்பது நம் கைக்குள் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

            அவரவர்க்குத் தகுந்தாற் போல் நேரங்களை நகர்த்தி வைத்துக் கொள்ளவும், தள்ளி வைத்துக் கொள்ளவும் இன்றைய வாழ்க்கை முறை எவ்வளவோ வழிமுறைகளைக் கொண்டு வந்து விட்டது. தொலைவுகளைக் கடந்துதான் சந்திக்க வேண்டுமா என்ன? இருந்த இடத்திலிருந்து முகம் பார்த்துக் கொள்ள, பேசிக் கொள்ள நம் தொழில்நுட்ப சாத்தியங்கள் நமக்கு இடம் தருகின்றன.

            இவ்வளவு நிகழ்ந்த பிறகும் அதே தொழில்நுட்ப தகவல் தொடர்பு சாதனங்களில் நல்ல நேரம், ராகு காலம் என்று நேரக் கணிப்புகளும் பஞ்சாங்க பி.டி.எப்.களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. காலப்போக்கில் இவற்றுக்குத் தகுந்தாற் போல் நம் தொழில்நுட்பங்கள் மாறி விடுமோ என்று கூட நான் விபரீதமாக யோசித்ததுண்டு.

            நல்ல நேரம், ராகுகாலம் என்று பார்க்காமல் நம் தொழில்நுட்பங்கள் இயங்கினாலன்றி நமக்கான வசதிகளைத் தொடர்ந்து பெற முடியாது இல்லையா. சான்றுக்கு நல்ல காலம், ராகு காலம் பார்க்கிறார்கள். யாராவது ராகு காலத்தில் வாட்ஸ் அப், பேஸ்புக் பார்க்க மாட்டேன் என்று சொல்வார்களா? அல்லது ராகு காலத்தில் ஏ.சி.யில் இருக்க மாட்டேன் என்று சொல்வார்களா? எம கண்டத்தில் வரும் நெடுந்தொடர்களைப் பார்க்க மாட்டேன் என்று சொல்வார்களா? அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் வரும் மாத சம்பளத்தை வேண்டாம் என்று பிறிதொரு நாளில் தரச் சொல்லி வாங்கிக் கொள்வார்களா?

            நம் மக்கள் நேரத்தை வளர்த்துவதற்கு, காரியங்களை இழுத்தடிப்பதற்குக் கண்டுபிடித்த கருவிகளாகவே இந்த நல்ல நாள், கெட்ட நாள், நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் போன்றவைத் தெரிகின்றன. இளைய தலைமுறை இது போன்ற நேர குழப்படிகளிலிருந்து எவ்வளவோ மீண்டிருக்கிறது. இதைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் பழைய தலைமுறை இவற்றைக் கடைபிடித்தால்தான் தங்களை மதிப்பதாக நினைத்துக் கொள்ளும் பிடிவாதம் இருக்கிறதே அதை என்ன செய்வதோ? ஏது செய்வதோ?

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...