விலையேற்றம் அறியாத அம்மச்சிகளும் அப்பச்சிகளும்
விலையேறாத பொருள் எது என்கிறாய்
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு
மல்லி மிளகாய் கடுகு வெந்தயம்
உடுத்தும் ஆடை ஓடும் வாகனம்
சுங்கக் கட்டணம் சங்கக் கட்டணம்
சொத்து வரி குடிநீர் வரி
விலையேறாத பொருள் ஏதுமில்லைதான்
கிராமத்து விவசாயியின் விளைபொருள்
விளைநிலத்தில் பாடுபடும்
விவசாயி கூலி
அன்றாடங் காய்ச்சியின் வருமானம்
இவற்றில் எது விலையேறியிருக்கிறது
விலையேறப் போகிறது
பணவீக்கமும் விலையேற்றமும்
எளியோர்களை எதுவும் செய்து
விடாது
என்ற நம்பிக்கை எல்லாருக்கும்
இருக்கிறது
விலையேற்றினாலன்றி
பணவீக்கத்தை உயர்த்தினாலன்றி
வலியோர்களை வாழ வைப்பதெப்படி
கிராமத்து அம்மச்சியின் காதில்
கிடக்கும் தோடும்
அப்பச்சியின் கழுத்தில் கிடக்கும்
செயினும்
பவுன் முப்பது ரூபாய் விற்ற
காலத்தில் வாங்கியது என்கிறார்கள்
முப்பது ரூபாய்க்கு அரை வயிறு
கூட
சாப்பிட முடியாது என்ற உண்மை
புரியாது
அவர்கள் இருவரும் அக்கறையாய்
முறத்தில்
தானியங்களைப் புடைத்துக்
கொண்டிருக்கிறார்கள்
*****
No comments:
Post a Comment