துக்கத்தின் ஒலிபரப்பு
மரண வீட்டின் அழுகை
பாசத்தை ஒலிபரப்பும் என்கிறார்கள்
புலம்பல்கள் பிரிவின் வலி
உணர்த்தும் என்கிறார்கள்
ஒரு காலத்தில் ஒன்றி வந்தது
இன்னொரு காலத்தில் இடறி விழுவது
சூத்திரங்களுக்குள் அடங்காத
புதிர் கணக்கு
அந்திமக் காலத்தில்
ஒரு வாய் சோறு போட ஆளின்றி
ஒண்டிக் கொள்ள சிறு இடமின்றி
தடுமாறி விழுந்தால் கவனித்துத்
தூக்க ஆளின்றி
செத்தது தெரியாமல்
ஆறு மணி நேரத்துக்கு அப்படியே
கிடந்தார்
ரெட்டைத் தெரு சீயான்
கால வழுவிருப்பதை
சொல்பவர்கள் கவனமாக மறைத்துக்
கொள்கிறார்கள்
மரணத்தின் மீளாப் பிரிவு
கடந்த காலக் கீறல்களை மறைத்து
நிகழ் காலத்துக்கான துக்கத்தை
மட்டும் எழுதிக் கொள்கிறது
துக்கத்தை ஆற்ற முடியாதவர்கள்
சீயான் மீண்டு வந்து பிறப்பார்
என்கிறார்கள்
மீண்டும் கவனிக்க ஆளின்றி
நாதியற்றுச் சாகவோ என்று
கேட்காதா சீயானின் ஆத்மா
*****
No comments:
Post a Comment